By 8 November 2017 0 Comments

சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’..!! (கட்டுரை)

எதிர்காலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது.

கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த அறிவித்தலை வௌியிட்டார்.

2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உத்தியோகபூர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.

கிழக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தமிழ்ப் புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்புகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுமதியோடு முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றது.

கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு, தமிழீழ விடுதலைக் கழகத்துக்கு (புளொட்) விடுக்கப்பட்ட அழைப்பு, அப்போது அதன் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தனால் நிராகரிக்கப்பட்டது. “அரசோடு இணைந்து செயற்பட்டு வரும் எங்களினால், விடுதலைப் புலிகளின் அனுமதியோடு ஆரம்பிக்கப்படும் கூட்டமைப்பில் இணைய முடியாது. அது, குழப்பங்களை ஏற்படுத்தும்” என்று கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட முக்கியஸ்தர்களிடம் சித்தார்த்தன் கூறினாராம்.

16 வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில், கூட்டமைப்பை ஆரம்பித்தபோது இருந்த நான்கு கட்சிகளில், இரண்டு கட்சிகள் (தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) முழுமையாக வெளியேறி விட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப், கிட்டத்தட்ட வெளியேறிவிடும் கட்டத்தில் வந்து நிற்கின்றது. டெலோ மாத்திரமே இன்னமும் மிச்சமிருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படும்போது, “தமிழரசுக் கட்சியும் இல்லை; அதன் வீட்டுச் சின்னமும் இல்லை” என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தற்போது கூறுவது சரியானது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை அடுத்து, 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு ‘உதய சூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

அப்போது, கூட்டணியிலிருந்த இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள், தங்களது பழைய கட்சியான தமிழரசுக் கட்சி மற்றும் அதன் ‘வீட்டு’ச் சின்னத்தையும் தூசு தட்டி எடுத்து வந்தார்கள்.

முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் சின்னங்களையோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தையோ, கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக அறிவிப்பதில் விடுதலைப் புலிகள் அவ்வளவு அக்கறை கொள்ளவில்லை.

இந்நிலையில், அவர்கள், தமிழரசுக் கட்சியின் புத்துயிர்ப்புக்கு வழிவிட்டனர். அதுதான், 2004 ஆம் ஆண்டுத் தேர்தலில், வீட்டுச் சின்னத்தை, ஒவ்வொரு வீடாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வைத்தது.

அதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியொரு கட்சியாகப் பதிவு செய்து, அதற்குத் தேர்தல் சின்னமொன்றைப் பெறுவது தொடர்பில், விடுதலைப் புலிகள் ஆர்வம் கொள்ளவில்லை. கூட்டமைப்புக்கான யாப்பு, சட்டத்துறை சார்ந்த சிலரினால் எழுதப்பட்ட போதும், அப்போது, புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான சு.ப.தமிழ்ச்செல்வன், அதை ஆறப்போடுமாறு உத்தரவிட்டிருந்தார்.

புலிகள் என்றைக்குமே, கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் அதிகார பீடமாக, கிளிநொச்சியையே வைத்துக் கொள்ள நினைத்திருந்தனர். அதனாலேயே, கூட்டமைப்பு தனியொரு கட்சியாகவோ, அதிகாரபீடமாகவோ வளர்வதை அனுமதிக்கவும் இல்லை.

மாறாக, தங்களது ஆணைகளுக்குப் பிரதிபலிக்கும் தரப்பாகவே, தேர்தல் அரசியலில் கூட்டமைப்பை வைத்துக்கொள்ள நினைத்தார்கள். அதில், அவர்கள் இறுதி வரையில் உறுதியாகவே இருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய அரசியலில், நேரடியாகத் தாக்கம் செலுத்தி, முடிவுகளை எடுக்கும் நிலையில் இருந்த முப்பது ஆண்டுகளில், பெருவாரியாக ஓர் அரசியல் கட்சியின் சின்னமொன்றுக்கு வாக்களிக்கக் கோரியது, 2004 பொதுத் தேர்தலில் ஆகும். அதுவே, இன்றைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக மாறி நிற்கின்றது.

கூட்டமைப்பிலிருந்து யார் வெளியேறினாலும், யார் அதற்குள் சங்கமித்தாலும், இன்னமும் அதன் தேர்தல் சின்னமாகத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னமே கோலொச்சுகின்றது.

இதுதான், விடுதலைப் புலிகள் நேரடியாக ஆளுமை செலுத்த முடியாத இன்றைய நாட்களில், தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த பெரும் சாதகமான அம்சம் ஆகும்.

இறுதி மோதல்களின் பின்னர், அதாவது விடுதலைப் புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்டதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை, தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், சிவில் அமைப்புகள், அரசியல் எழுத்தாளர்கள் உள்ளிட்ட தரப்பினால், மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அது, 2015 பொதுத் தேர்தல் வரையில் நீளவும் செய்தது.

ஆனால், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தினூடு, வேறு கட்சிகள் ஆளுமை பெறுவதையோ, வீட்டுச் சின்னத்தின் மூலம் பெற்றிருக்கின்ற பிடியை விடுவதையோ, தமிழரசுக் கட்சி விரும்பவில்லை.

அதற்காக, கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற பேச்சுகள் எழும் போதெல்லாம், சாக்குப் போக்குகளைச் சொல்ல ஆரம்பித்தது. அதுபோல, கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வதை, விடுதலைப் புலிகள் விரும்பவில்லை என்றும் மறைமுகமாகக் கூறிவந்தது.

கடந்த, வடக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பின்னர், கூட்டமைப்பின் ஏக அதிகாரம் பெற்ற கட்சியென்ற நிலைக்கு, தமிழரசுக் கட்சி வந்துவிட்டது.

தன்னுடைய அதிகார நிலைகள் குறித்து, கேள்வியெழுப்பும் பங்காளிக் கட்சிகளையும் நபர்களையும் அடக்கி வைப்பது அல்லது வெளியேற்றுவது என்கிற நிலையில், தமிழரசுக் கட்சி படுமூர்க்கத்தனமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. அதில், குறிப்பிட்டளவு வெற்றியும் பெற்றிருக்கின்றது.

கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளில், அதிகமாகக் கேள்விகளை எழுப்பும் கட்சியாகவும் கூட்டமைப்பின் தலைமையையும் அதன் முடிவுகளையும் விமர்சிக்கும் கட்சியாக ஈ.பி.ஆர்.எல்.எப் இருந்து வருகின்றது.

அந்த நிலையில், கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஏகநிலைக்கு அது, பெரும் தடையாக இருக்கின்றது என்கிற நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக சுரேஷ் பிரேமச்சந்திரனையும் ஈ.பி.ஆர்.எல்.எப்பையும் வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்கான முனைப்புகள் மிகத் தீவிரமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அதன்போக்கில், தமிழரசுக் கட்சி, எம்.ஏ.சுமந்திரனைக் கொண்டு விரித்த வலைகளில், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆரம்பத்தில் தெரியாமலும், போகப்போக தெரிந்துமே விழ ஆரம்பித்தார். அது, கொடும்பாவி எரிப்பு அரசியல் வரை நீண்டது.

அந்தநிலையில், கடந்த பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து, சுரேஷ் பிரேமச்சந்திரன் வெற்றிபெறக் கூடாது என்பது, தமிழரசுக் கட்சியின் பெரு விருப்பமாகவும் இருந்தது; அதுவே நடந்தது.

அத்தோடு, தேசியப் பட்டியல் கோரிக்கை, ஏனைய பங்காளிக் கட்சிகளின் உதவியோடு சுரேஷ் பிரேச்சந்திரனால் விடுக்கப்பட்டபோதும், அதைச் சம்பந்தன் கண்டுகொள்ளவில்லை.

ஆயினும், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இடத்தை, வன்னி மாவட்டத்திலிருந்து தெரிவான சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்புக்குள் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சார்பில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தபோது, அவரையும் புறங்கையினால் கையாளும் நிலைக்குத் தமிழரசுக் கட்சி வந்தது.

அதன், அதிகபட்ச ஜனநாயக மீறுகை, புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில், சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்ற வாய்ப்பு மறுக்கப்படும் அளவுக்கு சென்றிருக்கின்றது.

புதிய அரசமைப்பு தொடர்பில், கூட்டமைப்பு தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்திய செயலமர்வில், சிவசக்தி ஆனந்தன் கலந்து கொள்ளாமையினாலேயே அவருக்கு விவாதத்தில் உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிற வாதம் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனால் முன்வைக்கப்பட்டது.

ஆனால், அந்த வாதம் எவ்வளவு தூரம் சரியானது என்கிற கேள்வி எழுகின்றது. ஏனெனில், கூட்டமைப்பில் அங்கம் வகித்தாலும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்கிற தனிக்கட்சிக்கான அங்கிகாரத்தை நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் வழங்கியிருக்க வேண்டும். அது, ஜனநாயகத்தில் அடிப்படையானது.

இடைக்கால அறிக்கை விவாதத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறீதரன் உள்ளிட்டோர் உரையாற்றியிருக்கின்றனர். ஆனால், ஒரு பங்காளிக் கட்சிக்கான வாய்ப்பு முற்றாக மறுக்கப்பட்டதென்பது, அச்சுறுத்தலான அரசியல் நிலைப்பாடாகும். அதைத் தமிழரசுக் கட்சியே, முன்னின்று செய்திருக்கின்றது.

கூட்டமைப்பு என்கிற பொது அடையாளத்துக்குள் இருந்தாலும், தமிழரசுக் கட்சி என்கிற தனி அடையாளத்தைப் பலப்படுத்திக் கொண்டு, தனிப்பயணம் மேற்கொள்வதே சுமந்திரனின் எதிர்கால இலக்கு.

அதன்போக்கிலான அவரின் முயற்சிகளுக்கு சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

அதற்கு, அச்சுறுத்தலாக இருக்கின்ற தரப்புகளை, சுமந்திரன் தன்னுடைய சமயோசிதத்தினால் வெட்டி வீழ்த்துகின்றார்.

அதில், சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்கெனவே வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். அதன்போக்கில், ஈ.பி.ஆர்.எல்.எப் தானாகவே வெளியேற வேண்டும் என்பதற்காக, சுமந்திரன், எந்த எல்லைக்கும் செல்ல முயற்சிப்பது, ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

ஆயினும், இந்தப் பத்தியாளர் இந்தப் பத்தியை கீழ்க்கண்டவாறு நிறைவு செய்ய நினைக்கின்றார்.

அதாவது, தமிழ்த் தேசிய அரசியலில் மாற்று அரசியல் என்பது, கூட்டமைப்பு என்கிற பொது அடையாளம், தமிழரசுக் கட்சி என்கிற ஏக அடையாளமாக மாறிய சில காலத்துக்குப் பின்னரே நிகழும். அதுவரை, இந்த அலைக்கழிப்புத் தொடரும்.Post a Comment

Protected by WP Anti Spam