ஆற்றைக் கடப்பதற்கான தேர்தல் கூட்டு..!! (கட்டுரை)

Read Time:19 Minute, 13 Second

‘ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவு’ என்று சொல்வார்கள். இது அரசியலுக்கு மிகப் பொருத்தமானதாக அமைவதுண்டு.

அந்தவகையில், இப்போது தேர்தல் ஒன்று நடைபெறப் போகின்றது என்ற அனுமானத்தில், எல்லாக் கட்சிகளும் ‘தேர்தல் கூட்டு’ பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலும், இவ்வாறான கூட்டுகள்,தேர்தல் என்ற ஆற்றைக் கடந்து போவதற்கு மட்டுமான, பரஸ்பரம் இருதரப்புகளுக்கும் இலாபமளிக்கும் உறவாகவே, அமைவது வழக்கம்.

‘நல்லாட்சி’ என்ற மதிப்புமிக்க பொதுப் பெயரில், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டரசாங்கம் அழைக்கப்பட்டாலும், இனிவரும் தேர்தல்களில், மைத்திரிபால சிறிசேனவின் அல்லது சுதந்திரக் கட்சியின் துணையின்றி வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை, ஐ.தே.க தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகின்றார்.

சமகாலத்தில் ஐ.தே.கவின் ஒத்துழைப்பு இல்லாமல், மஹிந்தவையும் சமாளித்துக் கொண்டு, சுதந்திரக் கட்சியை தனியே ஆட்சியமைக்கக் கூடிய, வல்லமையுள்ள ஒரு கட்சியாக, மீள நிலைநிறுத்துவதற்கு, அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் முன்முயற்சிகளை எடுத்து வருகின்றார்.

இந்தப் பின்னணியில், நிழல் அதிகாரப் போட்டியொன்று, இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அந்த அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளை, நாடிபிடித்துப் பார்க்க ஆரம்பித்துள்ளது. இந்தக் கூட்டமைப்புக்குள்ளும் அதற்கு வெளியிலும் உள்ள, சிறு கட்சிகளைத் தம்வசப்படுத்துவதற்கு மஹிந்த தரப்பு, நீண்டகாலமாக மூலோபாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கடந்த இரு தேர்தல்களுக்கு முன்னர், இடம்பெற்ற பல தேர்தல்களின் ஊடாகத் தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற முடியாது என்ற அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட ஐ.தே.கட்சியானது, சிறுபான்மைக் கட்சிகளைக் கூட்டுச் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள்,பிணைமுறி மோசடி போன்ற விவகாரங்கள், நாட்டின் ஆட்சிக்கட்டமைப்பில் ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை வைத்துப் பார்க்கின்றபோது, நிலைமைகள் இன்னும் மோசமானால், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது மட்டுமன்றி, ஆட்சியைக் கொண்டு நடாத்துவதே பெரும் சிக்கலாகக் கூடும் என்று ஒருசில அரசியல்வாதிகள் அச்சப்படுகின்றனர்.

ஆனால், அவ்வாறான ஒரு நிலை ஏற்படாத பட்சத்தில், ஜனவரி நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும். அந்த நம்பிக்கையிலேயே, மேற்குறிப்பிட்ட தேர்தல் கூட்டுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், சிறிய – பெரிய கட்சிகளுக்கு இடையில் ஆரம்பமாகியிருக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தல் என்பது, ஒவ்வோர் ஊரிலும் இருக்கின்ற அரசியல் பலத்தையும், அந்த ஊரில் எந்தக் கட்சியின் கை மேலோங்கியிருக்கின்றது என்பதையும் சோதித்துப் பார்க்கும் ஒரு களமாக அமையும்.

ஆட்சியதிகாரத்தின் ஆகச் சிறிய அலகாகக் கருதப்படுகின்ற உள்ளூராட்சி சபையில், எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காகப் பெரும்பான்மைக் கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் பகிரதப் பிரயத்தனங்களை இம்முறையும் எடுத்துக் கொண்டிருக்கின்றன.

புதிய தேர்தல் முறைமையானது, குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில், முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்களை வெகுவாகப் பாதிக்கும். தேர்தல் முறைமை, வட்டாரங்கள் பற்றிய தெளிவின்மைகளோடு முஸ்லிம் கட்சிகளும், அதன் உத்தேச வேட்பாளர்களும் இருக்கின்ற நிலையில், முஸ்லிம்கள் செறிவாக வாழாத தென்னிலங்கையில், பிரதிநிதித்துவப் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சில இடங்களில், புதிய தேர்தல் முறைமையின் பாதிப்பை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இதேநேரத்தில், சமயக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், 25 சதவீதப் பெண் வேட்பாளர்களைத் தேடிப்பிடித்தல், கூட்டுச் சேர்த்தல், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில், எந்தத் தரப்பின் வேட்பாளரை நிறுத்துவது என்ற வேறு பல சவால்களும் முஸ்லிம் கட்சிகளுக்கு இருக்கின்றன.

சிறுபான்மைக் கட்சிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி சார்புப் போக்கினைக் கொண்டிருந்தாலும், தேர்தல் என்று வரும்போது, தமது தனித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அநேகமாகத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே களமிறங்கும்.

முஸ்லிம் கட்சிகளைப்போல, ரணில் விக்ரமசிங்கவை அல்லது மைத்திரிபால சிறிசேனவை பகைத்துக் கொள்ளக் கூடாதென்பதற்காக, தமது அரசியல் சுயத்தை இழந்து, பெருந்தேசியக் கட்சிகளின் சின்னங்களில் நேரடியாகப் போட்டியிடாது, தமக்குரிய சின்னத்தில் போட்டியிட்டு, அதன்மூலம் பெறப்படும் மக்கள் ஆணையைப் பேரம்பேசுவதற்கான கருவியாக, த.தே.கூ பயன்படுத்தும் என்பதே யதார்த்தமாகும்.

இதேவேளை, முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான கூட்டமைப்பு ஒன்றை, உருவாக்குவதற்கான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர், இவ்வாறான ஒரு கூட்டமைப்பு நிறுவப்படுமாக இருந்தால், அதில் அங்கம் வகிப்போர், ஒரு பொதுவான சின்னத்தில் போட்டியிடக் கூடும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஓர் அரசியல் கட்சியாக அங்கிகரிக்கப்பட்ட பிறகு, சந்திக்கும் முதலாவது தேர்தலாக இது இருக்கின்றமையால், அக்கட்சி, தனது சுய அடையாளத்தை நிலைநிறுத்தும் பொருட்டு, இம்முறை, தமது கட்சியின் சின்னத்தில் தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாலமுனைப் பிரகடனத்தை மேற்கொண்டுவிட்டு, தனிவழியில் பயணித்துக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாக இருக்கின்றது. இக்கட்சி முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் குறைவடைந்து வருகின்ற சமகாலத்தில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம், தமது ஆதரவுத் தளத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் என்றே கருத முடிகின்றது.

பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எந்த அணியில், யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பது குறித்த வியூகப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன.

அடிப்படையில் இவ்விரு கட்சிகளும் ஆளும் தரப்புக்கு ஆதரவான கட்சிகளாகவே தம்மை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அறிக்கை விடுவது முதற்கொண்டு, அரசாங்கத்தில் இருந்து விலகுவது வரை, எல்லா விடயங்களிலும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலும் ‘நீயா நானா போட்டி’ நிலவி வருகின்றது.

இரு மாதங்களுக்கு முன்னர், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போது, இம்முறை தேர்தலில் ஐ.தே.கவின் சின்னத்திலேயே ஏனைய சிறு கட்சிகள் போட்டியிட வேண்டும் என்ற தோரணையில், அதன் தலைவர் அன்பான, ஆனால், சற்று அழுத்தமான வேண்டுகோளை முன்வைத்திருக்கின்றார்.

இருப்பினும், முஸ்லிம் காங்கிரஸோ அல்லது மக்கள் காங்கிரஸோ ஐ.தே.கவுடன் சேர்ந்தே போட்டியிடுவோம் என்பதை அச்சமயத்தில் அறுதியிட்டுக் கூறவில்லை. ஆனால், இவ்விரு கட்சிகளும் கடைசியில் தம்மிடமே வரும் என்று ஐ.தே.க முக்கியஸ்தர்கள் தமக்குள் கதைத்துக் கொண்டதாக அங்கிருந்த ஒருவர் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குள், ஏற்பட்டிருக்கின்ற உள்ளக முரண்பாடுகளின் காரணமாக, அக்கட்சியின் மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு பச்சை சமிக்கையை அல்லது சிவப்பு சமிக்ஞையைக் காண்பிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. முஸ்லிம் கூட்டமைப்பு என்று ஒன்று உருவானால், ஒரு பொதுச் சின்னத்தில் ஏனைய தரப்பினருடன் சேர்ந்து மக்கள் காங்கிரஸும் போட்டியிடலாம்.

ஒருவேளை கூட்டமைப்பு உருவானாலும், அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில், வேறுவேறு சின்னங்களில் இத்தேர்தலை எதிர்கொள்ளும் உடன்பாட்டுக்கு வரவும் முடியும்.

அந்தவகையில் நோக்கினால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, சில உள்ளூராட்சி சபைகளில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் தமது வேட்பாளர்களைக் களமிறக்குவதுடன், வேறு சில வாக்குப்பலமுள்ள, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் உள்ளூராட்சி சபைகளில், தனித்துவமான சின்னத்தில் போட்டியிடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக அறிய முடிகின்றது. எவ்வாறிருப்பினும் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகின்றது.

கிழக்கு மாகாணம் உட்பட பல இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகின்றது.

மு.காவின் கோட்டையாகக் கருதப்பட்ட அம்பாறை மாவட்டம் உள்ளடங்கலாக, முஸ்லிம்கள் பெருமளவுக்கு வாழும், பல தேர்தல் மாவட்டங்களின் உள்ளூராட்சி வட்டாரங்களுக்கு ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது என்றும், அங்கு வேட்பாளர்களை நிறுத்துவதற்கான முழு அதிகாரமும் தமக்கு வேண்டுமென்றும் மு.கா ஆரம்பத்தில் அவாவி நின்றதாகவும், தற்போது 50 இற்கு 50 என்ற அடிப்படையில், வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பிரேரித்துள்ளதாகவும் நம்பகமாக அறிய முடிகின்றது.

ஆனால், கிழக்கு மாகாணம் உள்ளடங்கலாகப் பல பகுதிகளைச் சேர்ந்த ஐ.தே.க அமைப்பாளர்கள், முஸ்லிம் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமமாகிப் போட்டியிடுவதை ஆட்சேபித்திருக்கின்றனர். முஸ்லிம் கட்சிகள், தமக்குச் செல்வாக்கு இல்லாத இடங்களிலும் யானைச் சின்னத்துக்குள் மறைந்து கொண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், அதைத் தமது கட்சியின் வாக்குகளாகக் காண்பிக்க முயல்வதை அமைப்பாளர்கள் நினைவூட்டியுள்ளனர்.

முஸ்லிம் கட்சிகளுக்கு, ஐ.தே.க வேட்பாளர் பட்டியலில் இடம்கொடுப்பதன் காரணமாக, உண்மையான ஐ.தே.க முக்கியஸ்தர்களுக்கு வாய்ப்பில்லாமல் போவதுடன், எதிர்காலத்தில் ஐ.தே.கட்சியின் ஆதரவுத் தளத்தை தக்கவைக்க முடியாமலும் போய்விடும் என்றும்அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு, கடந்த தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் ஆதரவளித்தது, நேரடியான ஆதரவே அல்லாமல், முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்தமைக்காக முஸ்லிம்கள் ஆதரவளிக்கவில்லை. எனவே, இப்போது முஸ்லிம் கட்சிகள், அதிலும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் கேள்விக்குறியாகியுள்ள சூழலில், ஐ.தே.க ஊடாக, அக்கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தினால், சாதாரணமாக ஐ.தே.கவுக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளும் கிடைக்காமல் போகலாம் என்று அமைப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடைசியாக, இவ்வாரம் ஸ்ரீ கொத்தாவில் ஐ.தே.க முக்கியஸ்தர்கள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.தே.க அமைப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலும் இவ்விடயம் பேசப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பெரும்பான்மைக் கட்சிகளோடு சேராமல் போட்டியிட்டாலேயே, தமக்கு உண்மையாகவே எந்தளவுக்கு ஆதரவு இருக்கின்றது என்பதைப் பரீட்சித்துப் பார்க்க முடியும். அடுத்த தேர்தலுக்கு இடையில், அந்த மக்களாதரவை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் இயலும்.

உள்ளூராட்சி சபைகளை, முஸ்லிம் கட்சிகள் கைப்பற்றுமாக இருந்தால், அதைவைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் அல்லது சுதந்திரக் கட்சியுடன் பேரம்பேச முடியும்.

ஆனால், ஐ.தே.கவில் போட்டியிட்டு அவர்களின் வாக்குகளுக்குள்ளும் மறைந்து கொண்டு, அவ்வாறான ஒரு பேரம் பேசலை மேற்கொள்ள முடியாது. அதேபோன்று, முஸ்லிம்களுக்கு என்று தனித்துவ அடையாளத்தோடும் குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல்களோடும் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸும், ‘கட்சியை விட சிறப்பாக செய்து காட்டுகின்றோம்’ என்று உருவாக்கப்பட்ட, ஏனைய தனிஅடையாளக் கட்சிகளும் பெருந்தேசியக் கட்சிகளில் இணைந்து போட்டியிடுவதால், அந்தத் பெருந்தேசியக் கட்சிகளுக்கு வாக்குச் சேகரித்துக் கொடுத்த பெருமையை வேண்டுமென்றால் பெற்றுக் கொள்ளலாம்.

அதைவிடுத்து, முஸ்லிம்களுக்கு என்று எதற்காகத் தனியாக முஸ்லிம் கட்சிகள் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை ஒருக்காலும் அடைந்துகொள்ளவே முடியாது என்பதே முஸ்லிம்கள் பட்டறிந்த பாடமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்..!!
Next post சென்னை போலீசாருக்கு விஷால் பாராட்டு…!!