புலனாய்வு: ஈ.பி.எப் பணம் துஷ்பிரயோகம்?..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 50 Second

மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக இருந்த போது, அவரின் பணியாட்தொகுதியின் பிரதானியாக இருந்த காமினி செனரத்தும் வேறு இருவரும், வரி செலுத்துநர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில், சந்தேகத்துக்குரிய நிதிப் பரிமாற்றமொன்றில் ஈடுபட்டுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், 1982ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, அரச சொத்துகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு “பி” அறிக்கைகளின்படி, காமினி சேதேர செனரத், பியதாச குடாபலகே, எச்.கே.டி.டபிள்யூ.எம். நீல் பண்டார ஹப்புஹின்ன ஆகியோர், அரசால் முழுமையாக உரிமைப்படுத்தப்பட்டிருந்த கான்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்திடமிருந்து, பணிப்பாளர் சபையின் அங்கிகாரமின்றி 4 பில்லியன் ரூபாயை, ஹெலன்கோ ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா (தனியார்) நிறுவனத்துக்கு மாற்றினர் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

நிறுவனப் பதிவாளரிடம், டிசெம்பர் 22, 2011இல், கான்வில் ஹோல்டிங்ஸ் பதிவுசெய்யப்பட்டது. அதே தினத்தில், கான்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்தின் கிளை நிறுவனமாக, சினோ லங்கா ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா (தனியார்) நிறுவனம், நிறுவனப் பதிவாளரிடம் பதிவுசெய்யப்பட்டது. கைவிடப்பட்டிருந்த கொழும்பின் கிரான்ட் ஹையட் வேலைத்திட்டத்தை மீளெழுப்புவதற்காக, சினோ லங்கா ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா (தனியார்) நிறுவனம் உள்வாங்கப்பட்டது.

ஹெலன்கோ ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா என்பது, நிறுவனப் பதிவாளரிடம், டிசெம்பர் 21, 2011இல், பி.வி 83263 என்ற இலக்கத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட, தனியார் நிறுவனமாகும். ஹம்பாந்தோட்டையில், ஐந்து நட்சத்திர சொகுசு ஹொட்டல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க, இந்நிறுவனம் உள்வாங்கப்பட்டது.

கிரான்ட் ஹையட் செயற்றிட்டம்

செலிங்கோ பொழுதுபோக்கு சொத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் கிரான்ட் ஹையட் செயற்றிட்டம் நின்றுபோயிருந்த நிலையில், அதைப் பொறுப்பேற்பதற்கான அமைச்சரவை அனுமதி வேண்டி, அமைச்சரவை விஞ்ஞாபனமொன்று (இல. MOFE/ ST/CM/2012), நிதி அமைச்சால் தாக்கல் செய்யப்பட்டது. இது, 2011ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க, போதியளவு செயற்றிறனை வெளிப்படுத்தாத சொத்துகளை மீளெழச் செய்தல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கான அனுமதி, மார்ச் 14, 2012இல் வழங்கப்பட்டதோடு, அமைச்சரவை அங்கிகாரத்தின்படி குறித்த சொத்து, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டது. தனியார், அரச முதலீட்டாளர்கள் குழு இணைந்ததாக, பல வசதிகளைக் கொண்ட ஹொட்டல் வசதியை ஏற்படுத்தும் முகமாகவே, இது வழங்கப்பட்டது.

2003ஆம் ஆண்டில் செலிங்கோ காப்புறுதி நிறுவனம், நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து, 99 ஆண்டுகளுக்குக் குத்தகையில், இந்நிலத்தைப் பெற்றுக் கொண்டது. கிரான்ட் ஹையட் செயற்றிட்டத்துக்காக வாங்கப்பட்ட இந்நிலத்தில், 2008ஆம் ஆண்டில் அச்செயற்றிட்டம் பூர்த்தியடையுமென இருந்தது.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்கும் போது, இச்செயற்றிட்டம் கைவிடப்பட்டிருந்த நிலையில், நகர அபிவிருத்தி அதிகாரசபையால், சினோ லங்கா ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா (தனியார்) நிறுவனத்துக்குப் புதிதாக, 99 ஆண்டுகள் குத்தகையில் வழங்கப்பட்டது.

காமினி சேதேர செனரத், பியதாச குடாபலகே, எச்.கே.டி.டபிள்யூ.எம். நீல் பண்டார ஹப்புஹின்ன ஆகியோர், சினோ லங்கா ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா நிறுவனத்தின் முறையே தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, பணிப்பாளர் ஆகிய பதவிகளை, டிசெம்பர் 22, 2011 முதல் ஜனவரி 8, 2015 வரை வகித்தனர்.

மொஹான் டி அல்விஸும், குறித்த பணிப்பாளர் சபையில், ஆரம்பத்திலிருந்து பதவி வகித்திருந்தார். ஆனால், சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார்.

சினோ லங்கா ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில், ஆர். சேமசிங்க, தீபா நயனகாந்தி செனவிரத்ன ஆகியோர், முறையே திறைசேரி, ஊழியர் சேமலாப நிதியம் (ஈ.பி.எப்) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

கான்வில் ஹோல்டிஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாக, 8.5 பில்லியன் ரூபாய் பெறுமதியிலான 45.94 சதவீதமான பங்குகளை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும், 5 பில்லியன் ரூபாய் பெறுமதியிலான 27.03 சதவீதமான பங்குகளை ஊழியர் சேமலாப நிதியமும், 5 பில்லியன் ரூபாய் பெறுமதியிலான 27.03 சதவீதமான பங்குகளை லிட்ரோ காஸ் லங்கா (தனியார்) நிறுவனமும் கொண்டிருந்தன.

கான்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினதும் அதனது துணை நிறுவனமான லிட்ரோ காஸ் நிறுவனத்தினதும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அங்கிகாரம் வழங்கிய போதிலும், 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க, ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியம், முதலிடுவதா என்பது குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியது.

கடும் அழுத்தம்

சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக, ஜூலை 13, 2012ஆம் திகதியிடப்பட்ட நிதிச் சபையின் கடிதம், செலிங்கோ நிறுவனத்திடமிருந்து அரசால் பெற்றுக் கொள்ளப்பட்ட சொத்து, கான்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிலோ லங்கா நிறுவனத்துக்குச் சட்டபூர்வமாக மாற்றப்பட்டுள்ளதா என வினவியது.

அத்தோடு, கான்வில் நிறுவனத்தில் முதலிடுவதற்கான அங்கிகாரமும் கோரப்பட்டது. இதன்போது, கிரான்ட் ஹையட் றீஜென்சி செயற்றிட்டம் முடிவடையும் வரை, ஹெலன்கொ ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா உள்ளிட்ட ஏனைய புதிய ஹொட்டல் செயற்றிட்டங்களை, கான்வில் ஹோல்டிங்ஸ் ஆரம்பிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டது.

அதனால், ஜனவரி 3, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற, இல: 1/2013ஆம் திகதியிடப்பட்ட, ஊழியர் சேமலாப நிதியத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தின்போது, 5 பில்லியன் ரூபாயை முதலிடுவதற்கு முடிவெடுக்கப்பட்டதோடு, நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், பங்குதாரர்களின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரத்தை, ஊழியர் சேமலாப நிதியத்தின் அத்தியட்சகருக்கு வழங்கியது.

நிபந்தனைகளை மீறுதல்

கிரான்ட் ஹையட் றீஜென்சி செயற்றிட்டம் நிறைவடையும் வரை, அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் வரை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் மத்திய வங்கியின் நிதிச் சபையிலும் பங்குகள் பட்டியலிடப்படும் வரை, கான்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் வெளியேறக்கூடாது என்பது, நிபந்தனைகளுள் ஒன்றாகும்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் நேரடி, மறைமுக நலன்களைப் பாதுகாப்பதற்காக, பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கு வழிவகுக்கவே, இந்நிபந்தனை வழங்கப்பட்டது.
“செயற்றிட்டமொன்று தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது, பலனை வழங்க ஆரம்பிக்காத, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட பின்னர் தான் பலனை வழங்க ஆரம்பிக்கும் நிலையில், அதில் 5 பில்லியன் ரூபாயை முதலிடுவதற்கு, ஊழியர் சேமலாப நிதியம் ஏன் கட்டாயப்படுத்தப்பட்டது என்பது குறித்து நாம் குழப்பமடைகிறோம். கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் இந்த நிறுவனத்தின் பட்டியல்படுத்தல் திகதி, தெரியாததாக உள்ளது.

“ஊழியர் சேமலாப நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்பவர்களுக்கு மேலதிக வரப்பிரசாதங்களை வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கில், பொருத்தமான பத்திரத்தில் முதலிட்டிருக்கலாம். பல ஆண்டுகளுக்குப் பலன்கள் கிடைக்காத செயற்றிட்டத்தில் முதலிட்டமை மூலம், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு, ஒட்டுமொத்தமாக இழப்பு ஏற்பட்டது” என, ஊழியர் சேமலாப நிதியத்தின் தகவல்கள் மூலங்கள் தெரிவித்தன.

கொழும்பிலுள்ள நற்பெயருள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றால் மேற்கொள்ளப்பட்ட, தடயவியல் கணக்காய்வு அறிக்கையின்படி, கிரான்ட் ஹையட் றீஜென்சி செயற்றிட்டத்தை விரிவுபடுத்துவதற்காக, 2013ஆம் ஆண்டில், அருகிலிருந்த மூன்று சொத்துகளை உரிமைப்படுத்தியதில், மோசடியான முறை பின்பற்றப்பட்டது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மோசடியெனச் சந்தேகம்

2013ஆம் ஆண்டு ஜூலைக்கும் நவம்பருக்கும் இடையில், அருகிலிருந்த சொத்துகளான இல. 112, காலி வீதி, கொழும்பு 3இல் அமைந்திருந்த ரன்முத்து ஹொட்டல்ஸ் நிறுவனம், இல. 108 காலி வீதி, கொழும்பு 3இல் அமைந்திருந்த ஜே.சி. இராமநாயக்க, இல. 134, காலி வீதி, கொழும்பு 3இல் அமைந்துள்ள செலிங்கொ காப்புறுதி தனியார் நிறுவனம் ஆகியன, கொள்முதல் செய்யப்பட்டன.

அறிக்கையின்படி, ரன்முத்து ஹொட்டல்ஸிடமிருந்து 62.77 பேர்ச்செஸ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரச பிரதம விலைமதிப்பாளரால் ஜூன் 13, 2013இல் மதிக்கப்பட்டதன்படி, காணிக்கு 303.2 மில்லியன் ரூபாயும், கட்டடத்துக்கு 196.8 மில்லியன் ரூபாயுமென, மொத்தமாக 500 மில்லியன் ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது விலைமதிப்பு, ஜூலை 30, 2013இல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், காணியின் மதிப்பு 483.2 மில்லியன் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது, கட்டடத்தின் பெறுமதி அதே அளவில் காணப்பட்டுள்ளது, இதனால் மொத்த மதிப்பு 680 மில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. ஆனால், காரணங்கள் எவையும் குறிப்பிடாமல், 689.071 மில்லியன் ரூபாய்க்கு, குறித்த சொத்து வாங்கப்பட்டுள்ளது. கணக்காய்வு அறிக்கையின்படி, சினோ லங்கா நிறுவனம், செலிங்கோ காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 20.1 பேர்ச்சஸ் காணி வாங்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது விலைமதிப்பிடல், ஜனவரி 9, 2013இல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காணிக்கு 100 மில்லியன் ரூபாயும், கட்டடத்துக்கு 91.5 மில்லியன் ரூபாயும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பு, 191.5 மில்லியன் ரூபாயாகும். பின்னர், ஒக்டோபர் 22, 2013இல், மீண்டும் விலைமதிப்பிடப்பட்டது. காணியினதும் கட்டடத்தினதும் மொத்த மதிப்பு, 252 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டது. மூன்றாவது விலைமதிப்பிடல், நவம்பர் 22, 2013இல் மேற்கொள்ளப்பட்டது. அதன்போது, காணியின் மதிப்பு 168.5 மில்லியன் ரூபாயாக உயர்ந்திருந்ததோடு, முதலாவது மதிப்பிடலில் காணப்பட்ட அதே பெறுமதியில், கட்டடத்தின் மதிப்புக் காணப்பட்டது. இதனால் மொத்த மதிப்பு, 260 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கொடுப்பனவாக, 270 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஜே.சி. ராமநாயக்க சொத்து, 15 பேர்ச்சஸ் அளவிலானது. அதற்கான ஒரே விலைமதிப்பிடல், ஓகஸ்ட் 23, 2013இல் மேற்கொள்ளப்பட்டது. காணியின் மதிப்பாக 105 மில்லியன் ரூபாயும், கட்டடத்தின் மதிப்பாக 15 மில்லியன் ரூபாயும் மதிப்பிடப்பட்டது.

எனவே, மொத்த மதிப்பாக 120 மில்லியன் ரூபாய் காணப்பட்டது. ஆனால் சினோ லங்கா ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா நிறுவனம், அச்சொத்துக்காக 130 மில்லியன் ரூபாயைச் செலுத்தியது.

“கொடுப்பனவு அட்டைகள் சரிபார்க்கப்பட்ட பொது, இந்த அளவிலான பணம், குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் மோசடியிருக்கிறது என்று நாம் இன்னமும் நம்புகிறோம். அரச பிரதம விலைமதிப்பாளர், அரச மதிப்பிடலை மேற்கொண்டிருந்தால், அதை விட அதிகமாக மதிப்பிட்டு, பணத்தை அதிகமாக வழங்குவதற்கு சினோ லங்கா நிறுவனம் ஏன் முடிவெடுத்தது?” என, தகவல் மூலங்கள் கேள்வியெழுப்புகின்றன.

கான்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஹெலன்கோ ஹொட்டல்ஸ் உட்பட வேறு ஹொட்டல் செயற்றிட்டங்களில் பணத்தை முதலிட முடியாது என, சட்டமா அதிபரால் 2012ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு மத்தியில், கான்வில் ஹொல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பெப்ரவரி 24, 2014இல், 500 மில்லியன் ரூபாயை, ஹெலன்கோ ஹொட்டல்ஸ் மற்றும் ஸ்பா (தனியார்) நிறுவனத்துக்குப் பரிமாற்றம் செய்ய அங்கிகாரம் வழங்கினர். அதன் பின்னர் மீண்டும், ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னதாக, டிசெம்பர் 29, 2014இல், மீண்டும் 3.5 பில்லியன் ரூபாயைப் பரிமாற்றம் செய்ய அங்கிகாரம் வழங்கப்பட்டது.
இரண்டு பரிமாற்றங்களுக்கும், கான்வில் பணிப்பாளர் சபை உறுப்பினர்களால் பெப்ரவரி 24, 2014, டிசெம்பர் 29, 2014 ஆகிய திகதிகளில் அங்கிகாரம் வழங்கப்பட்ட போதிலும், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் “பி” அறிக்கையின்படி, ஹெலன்கொ நிறுவனத்தின் இலங்கை வங்கி, கூட்டாண்மைக் கிளையின் கணக்குக்கு (கணக்கு இல.: 7278012), பெப்ரவரி 11, 2014இல் 50 மில்லியன் ரூபாயும், பெப்ரவரி 19, 2014இல் 450 மில்லியன் ரூபாயும் பரிமாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு 500 மில்லியன் ரூபாய் பரிமாற்றப்பட்ட போது, இந்தப் பணத்துக்கான அங்கிகாரம் பெறப்பட்டிருக்கவில்லை. அதேபோல், அங்கிகாரம் பெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் டிசெம்பர் 26, 2014இல், 3.5 பில்லியன் ரூபாய் பரிமாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச கொள்முதல் நடைமுறைகளுக்கு மாறாக, கிரான்ட் ஹையட் செயற்றிட்டத்துக்கான உருக்குக் கொள்முதல் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதையும், இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது. இரண்டாவது மிகக்குறைந்த தொகையைக் கோரியவருக்கே, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு, 16.426 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

மெல்வையர் றோலிங் (தனியார்) நிறுவனம், மிகக்குறைந்த தொகையான, ஒரு தொன்னுக்கு 110,160 ரூபாயைக் கோரியிருந்தது. ஆனால், அப்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இன்னொரு நிறுவனம், ஒரு தொன்னுக்கு 114,897 ரூபாய் என்ற, இரண்டாவது மிகக்குறைவான தொகையைக் கோரியிருந்தது.

அறிக்கையின்படி, விலைமனுத் திறப்புக்கு, மனுக்களைச் சமர்ப்பித்தோர் அழைக்கப்படவில்லை என்றும், பின்னர் மார்ச் 21, 2013இல் குடாபலகே, இரண்டாவது மிகக்குறைந்த தொகையைச் சமர்ப்பித்தோருக்கு, ஏற்புக் கடிதத்தை அனுப்பினார் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், ஹம்பாந்தோட்டைச் செயற்றிட்டத்தில் சுற்றுவேலி அமைப்பதற்கு, கட்டுமானப் பணியாளருக்கு 9 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது என்றும் அறிக்கையிடப்படுகிறது. ஆனால் கணக்காய்வின் போது இந்நிறுவனம், ஹம்பாந்தோட்டைச் செயற்றிட்டத்தில் ஏதாவது பணிகளை முன்னெடுத்தது என்பதையோ, குறித்த பணத்தைப் பெற்றது என்பதையோ மறுக்கிறது.

தொழில் ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீர, வெளிநாட்டில் காணப்பட்டார். தொடர்புகொள்ளப்பட்ட போது மேலதிக ஆணையாளர் நாயகம் சி.என். விதானாச்சி, கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். இப்பத்திரிகையால் தொடர்புகொள்ளப்பட்ட போது, கான்வில் ஹோல்டிங்ஸ்/ இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமலசூரிய, ஒரு மணித்தியாலத்தில் அழைக்குமாறு கோரினார். ஆனால் அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்மாவதி படத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: தீபிகா படுகோனே ஆவேசம்..!!
Next post ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி..!!