By 17 November 2017 0 Comments

ஐகோர்: புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்தல்..!! (கட்டுரை)

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை தவிர்க்கவியலாதது. அது இரந்து பெறுவதல்ல; தீரம்மிக்க புரட்சிகரப் போராட்டங்கள், பல்வேறு நாடுகளில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பெற்றுத் தந்ததை, நாம் வரலாறு நெடுகிலும் கண்டிருக்கிறோம்.
முதலாளித்துவமும் அதன் உச்ச வடிவமான ஏகாதிபத்தியமும் நவீன வடிவங்களில், உலகைக் கட்டுப்படுத்துகையில், அவைக்கெதிரான போராட்டங்களும் கூட்டிணைவாக வெளிப்படுகின்றன.

‘வோல் ஸ்ற்ரீட்’ முற்றுகையாளர்களும் தாஹீர் சதுக்கத்தில் திரண்டவர்களும் துனிஷியாவில் தீக்குளித்தவரும், தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்களும் இந்தியாவின் மாருதி நிறுவன ஊழியர்களும் ஒன்றையே எதிர்த்துப் போராடினர். ஒடுக்குமுறையாளர்கள் ஒன்றுபடுகையில், ஒடுக்கப்படுவோர் ஒன்றுபடுவதும் இயல்பானதே.

2010 ஆம் ஆண்டு, உலகளாவிய புரட்சிகர சக்திகளின் கூட்டிணைவாகத் தோன்றிய புரட்சிகரக் கட்சிகளினதும் அமைப்புகளினதும் சர்வதேச இணைப்பு (International Coordination of Revolutionary Parties of Organization – ICOR) இப்போது 42 நாடுகளைச் சேர்ந்த, 50 அமைப்புகளைக் கொண்ட உலகளாவிய புரட்சிகர சக்தியாக உருவெடுக்கிறது.

1990களில் எழுந்த ‘சோஷலிசம் தோற்றுவிட்டது’, ‘கம்யூனிசம் கல்லறைக்கு அனுப்பப்பட்டு விட்டது’ என்ற கோஷங்களைப் பொய்ப்பிக்கும் நிகழ்வுகள், கடந்த மூன்று தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக நடந்துள்ளன.

உலகெங்கும், மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளை, மார்க்சிச – லெனினிசத்தைத் தத்துவார்த்த தளமாகக் கொண்டு, உலகளாவிய புரட்சிகர சக்திகளை ஒன்றிணைக்கும் ஒன்றாக, ‘ஐகோர்’ இன் வளர்ச்சி குறிப்பிட்டுக் கூறத்தக்கது.
இன்று, உலக மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களின் அடிப்படை என்ன என, இங்கு வினவல் தகும். உலகப் பொருளாதாரத்தின் மீது, ஏகாதிபத்தியப் பிடியை நீடிக்க, அமெரிக்க ஏகாதிபத்தியம் பலவாறான பொறிமுறைகளை வகுத்துள்ளமையை அறிவோம்.

மூன்றாமுலக நாடுகள் மீதும், மக்கள் மீதும் தனது அரசியல், இராணுவ ஆதிக்கத்தையும் சுரண்டலையும் தொடர, ஏகாதிபத்தியம் வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு தந்திரங்களைப் பாவிக்கிறது.

இப்போது, ஏகாதிபத்திய நாடுகளின் தேசிய நலன் மீதான அழுத்தம், கொலனி யுகத்தில் இருந்ததிலும் பார்க்க மறைமுகமானது. எனினும், நிலவும் சமூக ஒழுங்குக்கு எதிரான சவால்களைக் கையாள, ‘அமெரிக்க வாழ்க்கை முறை’யைக் காத்தல் போன்று, சாடையான நிறவாதம் கலந்த தேசியவாதம், வெளிப்படையாகத் துணைக்கு அழைக்கப்படுகிறது.

உலகளாவிய சர்வதேச ஒருங்கமைவை, வரையறுத்துப் பாதுகாக்கும் வகிபாகத்தைத் தனதாக்குவதன் மூலம், ஏகாதிபத்தியம் தன் நவகொலனிய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுகிறது.

இராணுவக் குறுக்கீடு, ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டின் ஒரு முக்கிய கூறென்பதால், தேவைக்கேற்ப, தேசியப் பாதுகாப்புக்கும் பொருளாதார நலன்களுக்கும் மிரட்டல் எனச் சாடைகாட்டி, ஏகாதிபத்திய நாட்டுக்குள் அந்நியர் பற்றிய அச்சத்தையும் நிறவாதத்தையும் உசுப்பேற்றி, அயல் நாடுகளில் குறுக்கிடுவதை நியாயப்படுத்தவும் தொடர்ந்து பேணவும் வேண்டிய, சாக்குப்போக்குகள் உற்பத்தியாகின்றன.

இன்று, ஏகாதிபத்தியமும் நிதிமூலதனமும் பின்னிப்பிணைந்தும் உலகமயமாகியும் உள்ளதால், அவைக்கெதிரான போராட்டங்களும் இணைந்தும் உலகமயமாயும் இருத்தல் அவசியமாகிறது.

இன்று, உலகமயமாக்கலின் தீயவிளைவுகள் குறித்து, அமெரிக்கா பேசுகிறது. உலகப் பொருளாதார நெருக்கடி, புது வடிவங்களில் தொடர்கிறது. ஆதிக்க சக்திகளிடையே வேற்றுமைகள் வலுக்கின்றன; அவை போராக உருமாறலாம்.

இப்போக்கு ஐயத்துக்கு இடமின்றி, முதலாளித்துவத்தின் நெருக்கடியைச் சுட்டுகின்றன. அதேவேளை, இந்நெருக்கடி வேலையிழப்பு, வேலைநேரக்குறைப்பு, சம்பளவெட்டு, சமூகநலத்திட்டங்களின் ஒழிப்பு என, உழைக்கும் மக்கள் மீது பல்வேறு சுமைகளை ஏற்றுகிறது. இவை, போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என உழைப்பாளிகளுக்கு எடுத்துரைக்கின்றன.

உலகளாவிய முதலாளித்துவத்தின் மாற்றம், ஒருசீரற்ற தன்மையானது என்பதால், சோஷலிசத்துக்கான பாதையும், கட்டாயமாக, முதலாளிய விருத்தி மட்டத்துக்கும் நிலவும் உலக நிலைமைக்கும் அமைய வேறுபடும் என்பது ரஷ்யப் புரட்சிக்குப் பிந்திய வரலாற்று அனுபவமாகும்.

அத்துடன், புரட்சி செய்யவும் சோஷலிசத்தைக் கட்டியெழுப்பவும் எந்த நாட்டு மக்களும் பின்பற்றத் திட்டவட்டமான மாதிரியுரு என எதுவும் இல்லை என்றும் நடைமுறை காட்டியுள்ளது.

இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய விடயமொன்றுண்டு. புரட்சிகள் தோற்றுள்ளன; சோஷலிச அரசாங்கங்கள் வீழ்ந்துள்ளன. அது ஒரு நாட்டில் சோஷலிசத்தைக் கட்டியெழுப்பும் கொள்கையின் உள்ளார்ந்த குறைபாடல்ல. மாறாக, சோஷலிச சமுதாயத்தின் அக முரண்பாடுகளைச் சரியாகக் கையாளத் தவறியதாலும் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்த பின்பும் வர்க்கமும் வர்க்கப் போராட்டமும் தொடரும் வாய்ப்பை உணரத் தவறியதாலுமே, அவ்வாறு நிகழ்ந்தது என்பதை நினைவிலிருத்த வேண்டும்.

நவகொலனிய ஏகாதிபத்தியத்தின் காலகட்டத்தில், ஏகாதிபத்தியமே உழைக்கும் மக்களினதும் ஒடுக்கப்பட்ட தேசங்களினதும் பிரதான எதிரி. எனவே, ஏகாதிபத்திய எதிர்ப்பைச் சகல நிலைகளிலும் முன்னெடுப்பது அவசியம்.

இதனாலேயே, ‘ஐகோர்’ அமைப்பின் தேவையும் அதன் வெற்றிகரமான முன்னேற்றமும் அவசியமாகின. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள, புரட்சிகர சக்திகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கடமை சர்வதேசியத்துடன் இணைந்ததாகும்.

ஒக்டோபர் கடைசி வாரம், ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு, ‘ஐகோர்’ அமைப்பு, மூன்று நாள் சர்வதேசத் தத்துவார்த்த கருத்தரங்கொன்றை நடத்தியது. 49 நாடுகளிலிருந்து 116 அமைப்புகள் அக்கருத்தரங்குக்குப் பேராளர்களை அனுப்பியிருந்தன.
பொதுக் கருத்தரங்காக அமைந்த இந்நிகழ்வில் 1,100க்கும் மேலானோர் பங்குபற்றினர். இது, உலகளாவிய புரட்சிகர சக்திகள் ஒன்றுபடுவதுடன் இணைந்து செயற்படும்; சாத்தியத்தை உணர்த்தியது.

புரட்சிகர சக்திகள் ஒன்றுபடுவது, வரலாறு நெடுகிலும் நடந்துள்ளன. இவ்வகையில், ‘முதலாவது அகிலம்’ என அறியப்படும் ‘சர்வதேச தொழிலாளர்களின் ஒன்றியம்’ (International Workingmen’s Association) அல்லது ‘முதலாவது அகிலம்’ (First International) 1864ஆம் ஆண்டு இலண்டனில் நிறுவப்பட்டது.

அது, பல்வேறு இடதுசாரி அரசியல் குழுக்களையும் தொழிலாளர் சங்கங்களையும் கூட்டிணைக்க உருவான, ஒரு சர்வதேசப் பொதுவுடமைக் கொள்கை அமைப்பு ஆகும்.
அதன், உருவாக்கத்தில் கார்ல் மார்க்ஸும் பிரெட்ரிக் ஏங்கல்ஸும் முக்கிய பங்காற்றினர்.

அதன் முதலாவது காங்கிரஸ், 1866இல் ஜெனீவாவில் ஒன்றுகூடியது. 1848இல் ஐரோப்பாவில் உருவான புரட்சிகர மனநிலையின் விளைவாக, பல ஐரோப்பிய நாடுகள், ஜனநாயகத்துக்கும் சமத்துவத்துக்குமான போராட்டங்களைக் கண்டன.

அதன் பயனாகவே, தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ‘முதலாம் அகிலம்’ தோன்றியது. 1872இல் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் ‘அரசிலிக் கொள்கை’யினருக்கும் இடையே எழுந்த முரண்பாட்டால் பிளவுண்ட ‘முதலாம் அகிலம்’ 1876இல் கலைக்கப்பட்டது. முதலாம் அகிலத்தின் பிரதான ஆவணங்களை எழுதிய வகையில், கார்ல் மார்க்ஸின் பணி முக்கியமானது.

அரசாங்கத்தின் வர்க்கத் தன்மை பற்றி, குறிப்பாக முதலாளித்துவ அரசின் தன்மை பற்றி, தெளிவுபடுத்தி, தொழிலாளி வர்க்கம் பின்பற்றுவதற்கு உகந்த கொள்கை நிலைப்பாட்டையும் தொழிற்சங்கங்களின் பணியையும் ஜனநாயக வாக்குரிமையையும் பெண்களின் நிலையையும் பற்றி விவாதித்த ‘முதலாம் அகிலம்’ ஒரு கூட்டுச் சிந்தனைத் தளத்தை உருவாக்கியது. “உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்” என்ற புரட்சிகர முழக்கம், முதன்முதலாக ஒரு கோஷமாக முன்வைக்கப்பட்டது.

தொழிலாளி வர்க்கத்தின், அரசியல் கட்சியை உருவாக்கும் தேவையை, எடுத்துக்காட்டிய ‘முதலாம் அகிலம்’ அதன் அடிப்படை நடைமுறைகளை விளக்கியது.

விவசாயி வர்க்கத்துடன் அதன் உறவும், போர் பற்றிய அதன் கண்ணோட்டமும் தேசிய இனப்பிரச்சினை பற்றிய அதன் பார்வையும் ஆயுதம் தாங்கிய போராட்ட வழிமுறைகளும் ‘பாரிஸ் கம்யூன்’ அனுபவங்களின் பாடங்களும் ‘முதலாம் அகிலம்’ தந்த முக்கியமான பங்களிப்புகளாகும். தொழிலாளி வர்க்கம், தனது உடனடிக் கோரிக்கைகளைப் புரட்சி இலட்சியங்களோடு இணைப்பது எவ்வாறு என்றும் ‘அகிலம்’ விவாதித்தது.

‘முதலாம் அகிலம்’ கலைக்கப்பட்டபின், 1889இல் தோன்றிய ‘இரண்டாம் அகிலம்’, முதலாம் உலகப்போரூடாக, 1916 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. அதன் உருவாக்கத்தில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸின் பணி முக்கியமானது. 1905இல், லெனின் அதில் இணைந்தார். 1889,மே முதலாம் திகதி, தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டமையும் 1910இல் சர்வதேச பெண்கள் தினத்தின் பிரகடனமும் எட்டு மணித்தியால வேலைநேரக் கோரிக்கையும் முன்வைத்தமை, இரண்டாம் அகிலத்தின் முக்கிய சாதனைகளாகும்.

படிப்படியாகச் சந்தர்ப்பவாத ஆதிக்கத்துக்கு உட்பட்ட ‘இரண்டாம் அகிலம்’, முதலாம் உலக யுத்தம் மூண்டபின், பகை முகாம்களாகச் சிதைந்தது. ஒவ்வொரு முகாமும் அதன் ‘சொந்த’ நாட்டின் முதலாளித்துவத்துடன் கைகோர்த்தது. இரண்டாவது அகிலத்தில் இருந்த பெரும்பாலான கட்சிகள் சமூகவெறி, தேசியவெறி நிலைப்பாடுகளை ஏற்றதால், அவை தொழிலாளி வர்க்கத்தின், அதாவது அனைத்து உழைக்கும் மக்களினதும் நலன்களுக்குத் துரோகமிழைத்து, முதலாம் உலக யுத்தத்தில் ஆக்கிரமிப்பாளர்களான முதலாளித்துவ அரசாங்கங்களை ஆதரித்தன.

ஆகவே, சித்தாந்த வழியிலும் நிறுவன வழியிலும் ‘இரண்டாவது அகிலம்’ நகர நேர்ந்தது. அதனால், அது சர்வதேசப் பாட்டாளி வர்க்க நிறுவனமாக நீடியாமல் மடிந்தது. இந்தப் பின்புலத்தில், ஒக்டோபர் சோஷலிசப் புரட்சி, மனிதகுல வரலாற்றிலே ஒரு புதிய காலகட்டத்தைத் தொடக்கி வைத்தது.

பாட்டாளி வர்க்கப் புரட்சிகளுக்கும் தேசவிடுதலை இயக்க‍ங்களின் சக்திவாய்ந்த முன்னேற்றத்துக்குமான சகாப்தத்தை, மனித குலம், சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதற்கான சகாப்தத்தைத் தொடக்கி வைத்தது.

லெனினின் தலைமையில் மாபெரும் ரஷ்யப் புரட்சியின் வெற்றி, புதுவகைப் புரட்சிகரக் கட்சிகளை அமைத்து, அவற்றைக் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைக்கும் வரலாற்றுத் தேவையை உணர்த்தியது.

ஒரு புதிய புரட்சிகர அகிலத்தை நிறுவ வேண்டுமென்ற கருத்தை, முதல் உலகப் போரின் தொடக்கத்தில், இரண்டாவது அகிலத்தின் சிதைவைத் தொடர்ந்து, லெனினும் அவரது தோழர்களும் முன்வைத்தனர்.

ஒக்டோபர் புரட்சி, உலகின் தொழிலாளி வர்க்க, தேச விடுதலை இயக்கங்கள் எழவும் ஓங்கவும் ஊக்குவித்தது. பின்லாந்தில் தொழிலாளர் புரட்சி (1918 ஜனவரி), ஒஸ்ற்றியா-ஹங்கேரியில் முதலாளித்துவ – ஜனநாயகப் புரட்சி (1918-19) அம் முடியரசில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளில் விடுதலைப் போராட்டங்கள் (1918 ஆண்டின் இறுதி), ஜெர்மனியில் நவம்பர் புரட்சி (1918) ஆகியன அத்தகைய எழுச்சிகளாகும்.

இவை, சர்வதேசிய ரீதியிலான கூட்டிணைவைக் கோரின. இது புரட்சிப் போராட்டத்தின் பொதுப் பணிகளை நிறைவேற்றுவதில், சர்வதேசப் பாட்டாளி வர்க்கக் கடப்பாடும் சுயகட்டுப்பாடும், ஒவ்வொரு கட்சியும் தேசியக் கட்டுக்கோப்புக்கு உட்பட்ட அதன் செயல்களுக்குக் கிடைக்கும் வெற்றி குறித்தும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வருங்காலம் குறித்தும் அதற்குள்ள வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்திருப்பதும், அவ்வப்போதைய நிலைமைகளில் மிகவும் பயனுள்ள, பொருத்தமான வடிவங்களில், புரட்சிகர முறையில், பரஸ்பரம் உதவுதலும் அவசியம் என உணர்த்தியது.

1919இல், மொஸ்கோவில் லெனினின் தலைமையில், ‘மூன்றாம் அகிலம்’ அல்லது ‘கம்யூனிஸ்ட் அகிலம்’ (கோமின்டேர்ண்) அமைந்தது. அதில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குழுக்களும் பிற இடதுசாரி சோஷலிசக் கட்சிகளும் குழுக்களும் என, சுமார் 35 பாட்டாளி வர்க்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

1943ஆம் ஆண்டு, ‘கம்யூனிஸ்ட் அகிலம்’, இரண்டாம் உலகப் போர்ச் சூழலில், கலைபடும் வரை உலகத் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசக் குரலாகக் ஒலித்தது. இன்று, கிட்டத்தட்ட 75 ஆண்டுகளின் பின், அதேவகையில் அமைந்த ஓர் அமைப்பாக, ‘ஐகோர்’ உருவெடுத்து முன்னேறுகிறது. இது இன்னொரு புரட்சிகர காலகட்டத்தை நோக்கி உலகம் நகர்வதைக் காட்டுகிறது.

ஒருபுறம் உலகப் பொருளாதார நெருக்கடியும் மறுபுறம் வலதுசாரித் தேசியவாதிகளின் எழுச்சியும் சோஷலிசத்துக்கு மாற்றில்லை என்பதற்கு அது சான்று கூறுகிறது. உலகில் உழைக்கும் மக்களுக்குப் போராடுவதைத் தவிர வழியில்லை; அவர்களின் குரலை வலுப்படுத்துவதும் உலகளாவிய ஒன்றிணைப்பதும் காலத்தின் தேவை. அதுவே பாட்டாளிவர்க்க அதிகாரத்துக்கான வழியாகும்Post a Comment

Protected by WP Anti Spam