By 23 November 2017 0 Comments

இலங்கையின் ஹார்வி வைன்ஸ்டீன்கள் யார்?..!! (கட்டுரை)

உலகில் இடம்பெறும் விடயங்களைப் பற்றி, சிறியளவுக்கும் ஆர்வமில்லாதவராக இருந்தாலொழிய, ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் வன்புணர்வு, பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகியன பற்றி அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய தலைகள் எல்லாம், இக்குற்றச்சாட்டுகள் காரணமாக உருண்டுகொண்டிருக்கின்றன.

உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் தொடர்பான ஊடக அறிக்கையைத் தொடர்ந்து தான், இவ்விவகாரம் மிகவும் அதிகளவில் கவனம்பெற்றது. வைன்ஸ்டீனைத் தொடர்ந்து, இன்னும் பல திரைப்பட நட்சத்திரங்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் பின்னர், அலபாமாவின் அடுத்த செனட்டராக வருவதற்காகப் போட்டியிடும் றோய் மூர் சிக்கியிருந்தார். பின்னர், தற்போது செனட்டராக இருக்கும் அல் ஃபிராங்ளின் சிக்கிக் கொண்டார். அதேபோன்று, பல விருதுகளை வென்ற ஊடகவியலாளர்களான கிளென் த்ரஷ், சார்லி றோஸ் போன்றோர், சில நாட்களுக்கு முன்னர் சிக்கியிருந்தனர்.

இதில் குறிப்பிடத்தக்கதாக, அரசியல் பின்புலம், அரசியல் சார்பு போன்றனவற்றைத் தாண்டித் தான், இக்குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. குடியரசுக் கட்சியினர் மீதும் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன, ஜனநாயகக் கட்சியினர் மீதும் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. எனவே, அனைத்துப் பிரிவினருக்குமான பிரச்சினையாக இது எழுந்துள்ளது.

இதில் அநேகமான குற்றச்சாட்டுகள், பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பானவையாகவே இருக்கின்றன. ஆகவே, ஹார்வி வைன்ஸ்டீன் என்ற மாபெரும் செல்வாக்குக் கொண்ட நபர் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, “இவரைப் பற்றிக் குற்றஞ்சாட்டினால் நம்புவார்களா?” என்று பெண்கள் சந்தேகித்த ஏராளமான ஆண்கள் – உயர்நிலையில் காணப்படும் ஆண்கள் – வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் இவ்வாறு முன்வந்து, தமக்கு நேர்ந்த அனுபவங்களை வெளிப்படுத்தும் சூழல், மிக ஆரோக்கியமான ஒரு சூழலாகக் கருதப்படுகிறது.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம், மேற்குலகத்தின் பிரச்சினைகள் என்ற மேம்போக்கான பார்வை, ஒருசிலரிடத்தில் காணப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால், மேற்குலகில் காணப்படுவதை விடப் பெரியளவிலான பிரச்சினை இங்கு இருக்கக்கூடும் என்பது தான், எம்மால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
ஏனெனில், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தால் வெளியிடப்பட்ட தரவுகள், இலங்கையில் பாலியல் பிரச்சினையென்பது, எவ்வளவுக்கு மோசமானதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

​* இலங்கையின் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் 90 சதவீதமான பெண்கள் (15 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்டோர்), பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

* 74 சதவீதமான பெண்கள், தாங்கள் வேண்டுமென்றே தொடப்பட்டனர் எனக் கூறுகின்றனர்.

* 52 சதவீதமான பெண்கள், தங்களுக்கெதிரான பாலியல் குற்றத்தை மேற்கொள்ளும் நபரின் இனவிருத்தி உறுப்பு, தங்களது உடலோடு தொடுகைக்குள்ளாக்கப்பட்டது என்கின்றனர்.

தவிர, இலங்கை பொலிஸின், கடந்தாண்டுக்கான குற்றத் தரவுகளின்படி, 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மீதான வன்புணர்வு தொடர்பாக, 350 சம்பவங்கள், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு முறைப்பாடு, சட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு எனக் குறிப்பிடப்படுகிறது. வெறுமனே 3 முறைப்பாடுகள் தான், போலியான முறைப்பாடுகள் என்று குறிப்பிடப்படுகிறது. மிகுதி 346 முறைப்பாடுகளும், உண்மையான சம்பவத்தைப் பற்றிய முறைப்பாடுகளே என, பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே, இவ்வளவு பிரச்சினைகளைக் கொண்ட இலங்கைச் சமூகத்தில், உயர் அதிகாரம் படைத்தோர் மாத்திரம் நியாயமாகச் செயற்பட்டிருப்பர் என்று எதிர்பார்ப்பது, முட்டாள்தனமாகவே அமைந்துபோகும்.

இதில் முக்கியமாக, இப்படியான உயர் அதிகாரம் படைத்தோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது, “இவர்கள் பிரபல்யத்துக்காக அல்லது பணத்துக்காகத் தான் இப்படிச் செய்கிறார்கள்” என்ற, பொதுவான குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், தரவுகளும் யதார்த்தமும், வேறு கதை சொல்கின்றன.

உதாரணமாக, இலங்கையில் இடம்பெற்ற பாலியல் குற்றங்கள் தொடர்பான மேற்குறிப்பிடப்பட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, வன்புணர்வு தொடர்பாக, வெறுமனே 0.85 சதவீதமான முறைப்பாடுகள் மாத்திரமே, பொய்யான முறைப்பாடுகளாகக் காணப்படுகின்றன. இது, மிகப்பெரிய எண்ணிக்கை கிடையாது.

அதிலும், இலங்கை போன்ற நாடுகளில், பாலியல் குற்றங்களை முறையிடுவதில் தயக்கம் காணப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொல்லைகளை அனுபவித்த பெண்களில் வெறுமனே 4 சதவீதத்தினர் தான், பொலிஸ் துணையை நாடியிருக்கின்றனர். இலங்கையின் சமுதாயக் கட்டமைப்பின் காரணமாக ஏற்பட்ட தயக்கமாக இருக்கலாம்; ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் பொலிஸ் துறையின் மீதான நம்பிக்கையின்மையாக இருக்கலாம்; காரணம் என்னவாக இருந்தாலும், பெண்கள் முறையிடுவது குறைவாக இருப்பதையே நாங்கள் காண்கிறோம்.

வன்புணர்வுகள் தொடர்பான இலங்கைக்கான தரவுகள் இல்லாத போதிலும், உலகளாவிய ரீதியில் 50 தொடக்கம் 90 சதவீதமான வன்புணர்வுகள், பொலிஸ் முறைப்பாட்டுக்குச் செல்வதில்லை என, பல்வேறு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையில் மாத்திரம் அந்நிலைமை சிறப்பாகக் காணப்படுமென எதிர்பார்ப்பது தவறானது.

அதேபோல், “பிரபல்யத்துக்காக” வன்புணர்வுக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் அடிப்படையற்றது. உலகில் இதுவரை, “நான் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டேன்” என்று முறைப்பாடு செய்த பெண்ணொருவர், அதன்மூலமாகப் பிரபல்யம் பெற்று, அதன்மூலமாக வசதிபடைத்து வாழ்ந்தார் என்ற வரலாறு காணப்படுகிறதா? வன்புணர்வுக்கு உள்ளாகுவது என்பது, இன்னமும் சமுதாயத்தில் கடுமையான அழுத்தங்களையும் தனிமைப்படுத்தலையும் ஏற்படுத்துகின்ற விடயமாகவே காணப்படுகிறது. எனவே, இவ்விடயத்தில் பொய் சொல்வதற்கான தேவை அல்லது வாய்ப்பு என்பது, புறக்கணிக்கக்கூடிய அளவிலேயே காணப்படுகிறது.

ஆகவே, வன்புணர்வு அல்லது பாலியல் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடு அல்லது குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போது, அதற்காக எழுகின்ற முதலாவது எண்ணமாக, “இது உண்மையாகவே இருக்கும்” என்பது தான் இருக்க வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, அவநம்பிக்கையை வெளிப்படுத்துதல் என்பது, அக்குற்றங்களால் பாதிக்கப்பட்டோரை, நிச்சயமாகவே பாதிக்கும்.

இவற்றுக்கு மத்தியில் தான், இலங்கையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய வேண்டிய தேவையுள்ளது. ஏனென்றால், ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஏனைய நாடுகளிலும் இப்பிரச்சினை காணப்படுமாயின், இலங்கையிலும் நிச்சயமாகக் காணப்படும். இதில் இருக்கின்ற பிரதான சிக்கலாக, வன்புணர்வு தொடர்பான சட்டங்களில் தெளிவின்மை காணப்படுவதும், சமுதாய அழுத்தங்களுக்கு அஞ்சுவதும் காணப்படுகிறது.

இலங்கைச் சட்டத்தின்படி, பொலிஸ் காவலிலோ அல்லது அவ்வாறான இடங்களிலோ வைத்து, உடலுறவுக்கான அனுமதி பெறப்படினும், அது வன்புணர்வு என்றே எடுத்துக் கொள்ளப்படும். அவ்வாறான இடங்களில் அச்சுறுத்தல், பலத்தைப் பயன்படுத்துதல் போன்றன மூலமாக அனுமதி பெறப்படும் என்பதாலேயே, இந்த ஏற்பாடு காணப்படுகிறது. அதேபோல், பெண்ணொருவர் மதுபோதையிலோ அல்லது தெளிவற்ற மனநிலையிலோ இருக்கும் போது பெறப்பட்ட அனுமதியும், ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதேபோல், ஆணொருவர் தன்னை மணமுடித்திருக்கிறார் எனப் பெண்ணொருவர் எண்ணி, உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது வன்புணர்வாகவே இருக்கும். 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் வைத்துக்கொள்ளப்படும் உடலுறவும், வன்புணர்வாகவே சட்டத்தின்படி கருதப்படும். இவை எல்லாம், சட்டத்தின்படி தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, நிறுவனமொன்றின் உயரதிகாரியொருவர், பணியை வழங்குவதற்காகவோ அல்லது பதவியுயர்வு வழங்குவதற்காகவோ, பாலியல் இலஞ்சம் கோருவதும், சட்டப்படி தவறானது.

மேற்குறிப்பிட்ட விடயங்களைப் பற்றிய தெளிவுபடுத்தல், பெண்களிடத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல், பாலியல் ரீதியான பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் முன்வைக்கும் பெண்கள், பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும். அதன்மூலமாகவே, இன்னும் அதிகமான பெண்கள், தங்களின் உடல், உள உரிமைகள் மீறப்பட்டு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளான விடயங்களை வெளிப்படுத்த முன்வருவார்கள். அப்படி இடம்பெற்றால் மாத்திரமே, சமுதாயத்தில் களையெடுக்கப்பட வேண்டி இருக்கின்ற ஏராளமான குற்றவாளிகள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இவற்றை எல்லாம், நாம் செய்ய வேண்டி இருக்கிறது; அதுவும் உடனடியாகச் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், ஒரு விடயம் சம்பந்தமான சமூகக் கவனம், மிகக்குறைந்தளவிலேயே காணப்படும். பாலியல் குற்றங்கள் தொடர்பாகத் தற்போது ஏற்பட்டிருக்கின்ற இக்கவனம் மறைந்து போவதற்குள், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானது. அதன்மூலமாகவே, வைன்ஸ்டீன் போன்ற, சக்திவாய்ந்த நபர்களைக் கண்டுபிடித்து, அவர்களை அகற்ற முடியும். அவ்வாறான நடவடிக்கைகளை நாம் எடுக்காவிடின், “பெண்கள் நாட்டின் கண்கள்” என்று வசனம் பேசிக் கொண்டிருப்பதால், எவ்விதப் பிரயோசனமும் இல்லை என்பது தான் உண்மையானது.Post a Comment

Protected by WP Anti Spam