விடுதலைப்புலிகளுடன் அமைதி பேச்சு நடத்த சம்மதம் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

Read Time:4 Minute, 25 Second

SL.army-ltte.jpgவிடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளது. இது பற்றி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகள் வசம் இருந்த சம்பூர் பகுதியை கைப்பற்றிய ராணுவம், முகமாலை பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றது. கடந்த 2 மாதமாக நடந்து வரும் இச்சண்டையில் ராணுவத்தினர், விடுதலைப்புலிகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பலியாகி விட்டனர்.

முதலில் மறுப்பு

இதனிடையே புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக இருப்பதாக நார்வே சமாதான தூதர் எரிக் சோல்கைம் அறிவித்தார். இதையடுத்து நார்வேயின் ஆஸ்லோ நகரில் இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த நன்கொடை நாடுகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நார்வே தூதரின் அறிவிப்பை இலங்கை அரசு நேற்று முதலில் மறுத்தது. விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருப்பதாக நார்வே தூதர் எரிக் சோல்கைம் கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இலங்கை அரசை பொறுத்தவரை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இது சம்பந்தமாக எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் ராம்புக்வெல்லா கொழும்பில் தெரிவித்தார்.

நிலையை மாற்றி கொண்டது

ஆனால் இலங்கை அரசு சிறிது நேரத்தில் தனது நிலையை மாற்றிக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தது. இதுபற்றி கொழும்பில் நேற்று வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் நாங்கள் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் உள்ளோம். எனினும் பேச்சுவார்த்தைக்கான தேதி மற்றும் இடம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி முடிவு செய்ய, எங்களுடன் நார்வே தூதர்கள் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் கடந்த காலங்களில் தங்களை பலப்படுத்திக் கொள்ளவும், தேவையான ஆயுதங்களை குவிக்கவும் அமைதி பேச்சுவார்த்தையை பயன்படுத்திக் கொண்டனர். இது மீண்டும் நடைபெறாமல் தடுக்க, போர் நிறுத்த உடன்பாட்டை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பதட்டம் தணியும்

இதுபற்றி அந்நாட்டு ராணுவம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. வடக்கு-கிழக்குப் பகுதியில் அடுத்த மாதம் பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன் யாழ்ப்பாணம் பகுதியில் விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் சில உயர் ராணுவ அதிகாரிகள் தீவிரமாக உள்ளதாக தெரிகிறது.

எனினும் இலங்கை அரசின் தற்போதைய அறிவிப்பால், வடக்கு-கிழக்குப் பகுதிகளில் போர் பதட்டம் என்று ராணுவ வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டோனிபிளேருக்கு தொழிற்சங்க கூட்டத்தில் எதிர்ப்பு
Next post பிரதான நோக்கம் தோல்வியடைந்ததால் இஸ்ரேலிய ராணுவ தளபதி விலகல்