பிரதமர் கொய்ராலா பதவி விலக மறுப்பதால் நேபாளத்தில் மாவோயிஸ்டு மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா

Read Time:4 Minute, 31 Second

நேபாளத்தில் புதிய ஆட்சி அமைக்க வசதியாக பிரதமர் கொய்ராலா ராஜினாமா செய்ய மறுப்பதால், மாவோயிஸ்டு மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனால் கொய்ராலா அரசு மெஜாரிட்டி இழந்தது. நேபாளத்தில் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையில் கூட்டணி மந்திரிசபை நடந்து வருகிறது. இதில் மாவோயிஸ்டு கட்சியும் அடங்கும். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி நடந்த அரசியல் நிர்ணய சபையில் மாவோயிஸ்டு கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 610 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், மாவோயிஸ்டு கட்சி 220 இடங்களைப் பிடித்தது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருப்பினும், சில கட்சிகளின் ஆதரவுடன் மெஜாரிட்டியை பெற்றது. ஆனால் தேர்தல் முடிவடைந்து 2 மாதங்கள் ஆன போதிலும், பிரதமர் கொய்ராலா பதவி விலக மறுத்து வருகிறார். அவர் நாட்டின் தலைவராகவும், ஆட்சியின் தலைவராகவும் இருக்கிறார். நிர்வாகம், ராணுவம், போலீஸ் ஆகியவை அவரது கட்டுப்பாட்டில் உள்ளதால், அவரை நிர்ப்பந்தப்படுத்த யாராலும் முடியவில்லை. மேலும், தான் பதவி விலக வேண்டுமானால், புதிதாக ஜனாதிபதி பதவியை உருவாக்கி, தன்னை அதில் நியமிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தி வருகிறார். அதை மாவோயிஸ்டுகள் ஏற்கவில்லை.

கூண்டோடு விலகல்

இந்நிலையில், பதவி விலகுமாறு பிரதமரை வற்புறுத்தும் வகையில், மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த 5 மந்திரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி கிருஷ்ண பகதூர் மகரா, பணித்துறை மந்திரி ஹிசிலா யாமி, உள்ளூர் மேம்பாட்டுத்துறை மந்திரி தேவ் குருங், வனத்துறை மந்திரி மாத்ரிகா பிரசாத் யாதவ், பெண்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி பம்பா புசல் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதங்களை மாவோயிஸ்டு கட்சி தலைவர் பிரசந்தாவிடம் சமர்ப்பித்தனர்.

கொய்ராலா அரசில் இருந்து ஏற்கனவே ஒரு கட்சி விலகி விட்டது. தற்போது மாவோயிஸ்டு கட்சியும் விலகி விட்டது. மீதி இருப்பது, கொய்ராலாவின் நேபாள காங்கிரசும், வேறு 2 சிறிய கட்சிகளும்தான். எனவே, கொய்ராலா அரசு மெஜாரிட்டி இழந்து விட்டது.

எனவே, வேறு வழியின்றி கொய்ராலா ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு அமைக்க வசதியாகவே, பதவியை ராஜினாமா செய்தோம் என்று பதவி விலகிய மாவோயிஸ்டு மந்திரி பம்பா புசல் தெரிவித்தார். கொய்ராலா பதவி விலகக்கோரி, போராட்டம் நடத்தும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.

விரைவில் புதிய அரசு

மாவோயிஸ்டு கட்சி தலைமையில் ஜுன் 18-ந் தேதிக்கு முன்பாக புதிய அரசு அமைக்கப்படும் என்று மாவோயிஸ்டு தலைவர் பாபுராம் பட்டாரை அறிவித்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு முன்பு, நேபாள அரண்மனையில் இளவரசர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் மன்னர் வீரேந்திரா உள்பட அரச குடும்பத்தினர் 10 பேர் பலியானார்கள். ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு, இந்த கொலைகள் பற்றி பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் பாபுராம் பட்டாரை தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலில் குதிக்கிறார் பெனாசிரின் மகள்; தாயின் இலட்சியத்தை நிறைவேற்ற சபதம்
Next post தெஹிவளையில் 22 தமிழர்கள் கைது