By 17 December 2017 0 Comments

நம் உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்..!!

நம் உடல், அதன் செயல்பாடுகள் குறித்த புதிய ஆச்சரியத் தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

* பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்தான் அதிகம் கனவில் வருகிறதாம். இது ஏன் என்பது தங்களின் விஞ்ஞான ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

* தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம்.

* நீண்ட நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம். அதற்குக் காரணம், காட்சியை காண்பதற்கு மூளையின் சரிபாதி சக்தி செலவிடப்படுவதுதான்.

* காட்சிகள் எல்லாம் தலைகீழாகத் தெரிவது மாதிரியான கண்ணாடியை சில மனிதர்களிடம் கொடுத்து விஞ்ஞானிகள் சோதித்தார்கள். ஓரிரு நாட்களில் அவர்களுக்கு காட்சிகள் நேராகவே தெரிய ஆரம்பித்தன. இது மூளை செய்த மாயாஜாலம். அதேபோல கண்ணாடியை எடுத்த பின்பு காட்சிகளை நேராக ஒரே நாளில் அவர்களால் காண முடிந்தது.

* ஆண்களைவிட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள். அதேபோல வாசனை அறியும் திறனும் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம்.

* சிம்பன்சிகளின் உடம்பில் அதிக முடி இருப்பதாக நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் நம்முடைய உடம்பிலும் அவ்வளவு முடி உள்ளது. நம்முடைய முடி மெல்லியது, குட்டையானது என்பதுதான் வித்தியாசம்.

* ‘ஐலேஸ் மைட்ஸ்’ எனப்படும் நுண்ணுயிரி நம் இமை முடிகளில் உயிர்வாழ்கிறது. நுண்ணோக்கியில் பார்த்தால் இதைக் கண்டுபிடிக்க முடியும்.

* நாம் ஒருநாளைக்கு 10 ஆயிரம் லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறோம்.

* நம் உடம்பில் உள்ள இரும்புச்சத்தில் 8 செ.மீ. நீளமுள்ள ஆணி செய்யலாம்.

* ‘வேற்றுக்கிரகவாசியின் கை’ என்பது மூளை சம்பந்தமான ஒரு நோய். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் கை தானாக அனிச்சையாக நகர்ந்துகொண்டு இருக்கும்.

* குடல் வால் ஒரு பயனில்லாத உறுப்பு என்ற கருத்து பல காலமாக நிலவிவந்தது. ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்பின்படி, சாப்பிடும் உணவு செரிமானமாகத் தேவைப்படும் ஒருவகை பாக்டீரியா குடல் வாலில் தங்கியிருக்கிறது என்று தெரியவந்தது.

* நம் மூக்கின் இரு நாசித்துவாரங்களிலும் எப்போதும் நாம் மூச்சை இழுத்துவிடுவது இல்லை. மூச்சை உள்ளிழுப்பதும் வெளிவிடுவதும் இரு நாசிகளுக்கும் அவ்வப்போது மாறும்.

* நம் குடலில், மெல்லிய இரும்பு தகட்டை கரைக்கக்கூடிய சக்தியில் என்சைம்கள் சுரக்கின்றன. அதுதான் நாம் சாப்பிடும் இறைச்சியை செரிமானம் செய்கிறது. இந்த நொதிகளால் குடலின் உட்புறச்சுவர் சேதம் அடையாதா என்றால், அதற்குத்தானே மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருதடவை குடலின் உட்சுவர் வளர்கிறது? என்கிறார்கள்.

* மனித எலும்புகள் கான்கிரீட்டைவிட பலம் வாய்ந்தவை.

* உடம்பில் உள்ள பெரிய செல், பெண்களின் கருமுட்டை. அதேபோல சிறிய செல், ஆண்களின் உயிரணு.

* ரத்தத்தில் இருக்கும் ஒரு சிவப்பு ரத்த செல், நம் உடலை ஒரு நிமிடத்தில் முழுவதும் சுற்றிவிடும்.

* ஒரு மனிதனின் வாழ்நாளில் அவரது வாயில் 10 ஆயிரம் காலன் உமிழ்நீர் உற்பத்தி ஆகிறதாம்.

* பிறந்த குழந்தைக்கு 350 எலும்புகள் உடலில் இருக்கின்றன. வளர வளர அது 206 ஆக குறைந்துவிடுகிறது. காரணம் பல எலும்புகள் ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. அதேபோல, ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும், மனிதனின் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்று என்று தெரிவிக்கப்படுகிறது.Post a Comment

Protected by WP Anti Spam