எனது பெயரை தவறாக பயன்படுத்தி…-நடிகர் கார்த்திக் பேட்டி

Read Time:6 Minute, 46 Second

karthik01.jpgஎனது பெயரை தவறாக பயன்படுத்தி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசில் புகார் செய்வேன் என்று பார்வர்டு பிளாக் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் கூறினார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவர் நடிகர் கார்த்திக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கூறியதாக எனது பெயரில் ஒரு அறிக்கையை யாரோ சிலர் கொடுத்துள்ளனர். அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

நானோ, எனது அலுவலகத்தில் இருந்தோ இதுபோன்ற ஒரு பொறுப்பற்ற அறிக்கையை கொடுக்கவில்லை என்பதை திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன். 25 வருடம் கலை உலகில் இருக்கிறேன். எனது தொழில் மீது ஆணையாக இதனை நான் தரவில்லை.

எனது பெயரை தவறாக பயன்படுத்தி யாரோ இதுபோன்ற ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக யாரோ மோசடி செய்து போலியாக எனது அறிக்கை போல தயார் செய்து கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இது மிகவும் தவறான, பொறுப்பில்லாத செயல். இதனை யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்படக் கூடியவர்கள். இதுபற்றி போலீசில் புகார் செய்ய இருக்கிறேன். எந்த பேக்ஸ் நம்பரில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்று விசாரித்து வருகிறேன். அது தெரிந்ததும் போலீசில் புகார் செய்யப்படும்.

நான் மதிக்கும் தலைவர்

எனது கட்சியினரிடமும் இதுபற்றி விசாரித்து வருகிறேன். எனது கட்சியை சேர்ந்தவர்கள் அனுப்பியிருந்தாலும் மிகவும் தவறான செயல். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார்கள்.

மிகப்பெரிய இயக்கத்தில், நான் மிகவும் மதிக்கக் கூடிய தலைவர். அவரை மன்னிப்பு கேட்க சொல்ல நான் யார்? என்னை யாருக்கும் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் அனைத்து தலைவர்களையும் மதிக்கிறேன். இதுபோன்ற வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லை. எல்லோரும் எனக்கு வேண்டும். நான் யாரையும் எதிரியாக நினைத்தது இல்லை. எனக்கு எதிரிகளும் இல்லை.

சட்டசபை தேர்தலின் போதே யாரையும் புண்படும்படி பேசக் கூடாது என்று கட்சியினருக்கும் வலியுறுத்தியவன் நான். விரைவில் யார் இதனை அனுப்பினார்கள் என்பதை கண்டுபிடித்துவிடுவோம்.

மாநில குழு

கட்சி மேலிட உத்தரவுப்படி மாநில குழுவை ஓரிரு நாளில் தான் நியமிக்க இருக்கிறேன். மாநில குழுவை நியமிக்காமலேயே கூட்டணி பற்றி கூறுவதற்கு அவசியம் இல்லை. மாநில குழு நியமிக்கப்பட்டவுடன் குழு கூடி விவாதித்து தான் கூட்டணி சேருவதா? தனித்து போட்டியிடுவதா? என்பது முடிவு செய்யப்படும். இந்த அறிக்கையின் காரணமாக யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கு நான் காரணமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேள்விகளுக்கு கார்த்திக் கூறியதாவது:-

கேள்வி:- அரசியல் எதிரிகள் அனுப்பியிருப்பார்கள் என்று கருதுகிறீர்களா?

பதில்:- நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. விரைவில் கண்டுபிடித்து விடுவோம்.

அரசியலைவிட்டே விலகலாமா?

கேள்வி:- இந்த அறிக்கையை பார்த்துவிட்டு அ.தி.மு.க. தரப்பில் இருந்து யாராவது தொடர்பு கொண்டார்களா?

பதில்:- யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அறிக்கையை பார்த்துவிட்டு நான் தான் எனது கட்சியினரிடம் விசாரித்தேன். இப்போது நானாகவே உங்களை அழைத்து இதனை தெரிவிக்கிறேன். மாநில குழுவை கூட்டி முடிவு எடுக்காமல் அறிவிக்க எனக்கே உரிமை இல்லை. இதனையெல்லாம் பார்க்கும்போது சில சமயங்களில் அரசியலை விட்டே போய்விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஒரு சிலர் இப்படி இருப்பதால் பெரும்பாலான மக்களை கைவிடக் கூடாது என்பதற்காக இருக்கிறேன்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி?

கேள்வி:- பார்வர்டு பிளாக்கில் பல பிரிவுகள் இருக்கிறது, அதில் உங்கள் முயற்சிகள் பிடிக்காத ஏதாவது ஒரு பிரிவின் செயலாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?

பதில்:- யார் வேண்டுமானாலும் இருக்கலாம். கட்சிக்கு உள்ளேயே இருக்கிறார்களா? வெளியே இருக்கிறார்களா? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பீர்களா?

பதில்:- எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

கேள்வி:- மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- எங்கள் கட்சியின் மாநில குழு கூட்டம் விரைவில் மதுரையில் நடக்க உள்ளது. அதில் இவைகள் பற்றி முடிவு எடுக்க உள்ளோம். இன்னும் சில நாட்களில் இதுபற்றி அறிவிப்போம்.

இவ்வாறு கார்த்திக் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போலந்தில் நாய்கள் அணிவகுப்பு
Next post புலிகளுடன் பேச்சுவார்த்தை : சிறிலங்க அரசு நிபந்தனை!