By 27 December 2017 0 Comments

பெண்களின் ஆடைக்கு ஒரு அழகு ‘முடிச்சு’..!!

பெண்கள் தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றவர்களின் பார்வையை ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆடைகளில் அழகிய டிசைன்கள் மட்டுன்றி குஞ்சலம், பாசிமணிகள் போன்ற அலங்கார முடிச்சு வேலைப்பாடுகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இளைய தலைமுறையினரின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது. அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு உயிரோட்டம் கொடுப்பதாக ‘பேஷன் நாட்’ அமைந்திருக்கிறது.

ஆடைக்கு விதவிதமான அழகு தோரணங்களாக அமைந்திருக்கும் இந்த ‘நாட்’ இல்லாமல் பேஷன் நிறைவடைவதில்லை. குழந்தைகள் உடையானாலும், யுவதிகள் உடையானாலும் ‘பேஷன் நாட்’க்குத்தான் முதலிடம். கோனிகர் நவீன உடைகள் எல்லாவற்றிலும் ஆடைகளுடன் அசைந்தாடும் ‘பேஷன் நாட்’கள் முக்கிய அங்கம் வகிக்கிறது. அவைதான் உடைக்கு அழகு சேர்ப்பதாக ஆடை வடிவமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

ஆடை மட்டுமல்ல, தோல் பைகள், பர்ஸ்கள், கையில் அணியும் பேண்ட்கள், காதணிகள் எல்லாமே ஒருவித அசைவுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அசைவு என்பது உளவியல் ரீதியாக அனைவரின் பார்வையையும் ஒரு கணம் ஈர்க்கும் விஷயம். அதனை பேஷனுடன் முடிச்சு போட்டுவிட்டார்கள்.

இது பழையகால பேஷன் என்றாலும் ஜிமிக்கி கம்மல் போல மீண்டும் புதுப்பொலிவுடன் உலா வர தொடங்கி இருக்கிறது. குறிப்பாக திருமணம் மற்றும் விழாக்காலங்களில் அணியும் உடைகள் அணிகலன்களில் குஞ்சங்கள் இடம் பெற்றிருக்கும். அத்துடன் மணிகள், பட்டு நூல்கள், ஓசை எழுப்பும் முத்துக்கள் உள்ளிட்டபல அழகிய பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

பேஷன் டிசைனர் மாயா அகர்வால் ‘பேஷன் நாட்’ வகை உடை களுக்குள்ள வரவேற்பை பற்றி சொல்கிறார்: ‘நவீன உடைகளில் ‘பேஷன் நாட்’கள் தவறாமல் இடம்பிடித்துவிடுகிறது. எல்லாத்தரப்பு மக்களையும் கவர்வதுதான் முதன்மை காரணம். இந்த ‘நாட்’களை தயாரிக்க பல மணி நேரமாகிறது. உடைக்குப் பொருத்தமாகவும், உறுத்தாமலும் இருக்க வேண்டும்.

உடையின் எந்தப் பகுதிக்கு அது பொருத்தமாக இருக்கும் என்பதை தீர்மானிப்பதில் அதன் அழகியல் வெளிப்படும். நவீன ஆடைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்த முடிச்சுகளை வடிமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேலைநாட்டு நவநாகரிக உடைகள் வசதிக்காக உடுத்தப்படுபவை. ஆனால் இந்திய பாரம்பரிய உடைகள் அழகுக்காக அணியப்படுகிறது.

வெளிநாட்டில் உள்ள பெண்கள் பெரும்பாலும் விரும்புவது இந்த ‘நாட்’களைத் தான். உடையின் கலைநயம் மிக்க கைவேலையே அதுதான். பேஷன் டிசைனரின் திறமையும் அந்த ‘நாட்’டில் தான் அடங்கியுள்ளது. இதனை கற்றுக்கொடுப்பதற்கென்று தனி நிறுவனங்கள் இருக்கின்றன. பேஷன் உடை தைப்பவர்களால் கூட இந்த வகை டிசைன்களை உருவாக்க முடியாது.

உடையின் விலையை நிர்ணயிப்பது இந்த பேஷன் தான். ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, பீகார் போன்ற மாநில பாரம்பரிய உடைகளில் இந்த ‘நாட்’கள் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். குர்தா, கோளி, காக்ரா, லங்கோட்டா, பாரந்தா போன்ற உடைகளில் இந்த வேலைப்பாடுகளை அதிகம் காணலாம். இதற்காகவே பிரசித்திப் பெற்றவை இந்த உடைகள். இப்போது தென்னிந்தியா விலும் இந்த பேஷன் பரவி விட்டது.

இந்த வகை பேஷன் உடைகளை அணிந்துக் கொள்வதை தான் பெண்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ப காதுகளி லும் முன்னும் பின்னும் அசையும் காதணிகளை விரும்பி தேர்வு செய்கிறார்கள். அதனால் கூடுமானவரை கனமில்லாத தயாரிப்பு களையே பேஷன் டிசைனர்கள் முயற்சிக்கிறார்கள். பெரும்பாலும் முதுகில் உள்ள ‘நாட்’கள் தான் அந்த உடைக்கு சிறப்பை சேர்க்கும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ‘ரெடிமேட் நாட்’டுகளை கொண்டும் உடையை அலங்கரித்துவிடலாம். தோல் பைகளிலும் இந்த வகை முத்துக்கள் இணைக்கப்பட்ட ‘நாட்’கள் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண பையை உடைக்கு ஏற்ப பேஷன் பையாக மாற்றிவிடலாம்.Post a Comment

Protected by WP Anti Spam