By 24 June 2008 0 Comments

மக்கள் வருமானத்தின் நான்குவீதம் ஜனாதிபதியின் செலவீனம்

சர்வதேசமெங்கும் விலைவாசிகள் அதிகரித்துச் செல்கின்ற இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா அரசும் மக்களும் முகம் கொடுத்துள்ள இந்த இக்கட்டான வேளையில் செய்யப்பட வேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால் பட்டியை இறுக்கிக்கொள்வதாகும். அதாவது செலவினங்களைக் கட்டுப்படுத்துவதாகும் . அத்தியாவசியமற்ற செலவினங்களை வெட்டிவிடுதலாகும். நிலைமை எவ்வாறாக இருந்தாலும் இந்த நாட்டில் நிகழ்ந்து கொண்டிருப்பது எந்தவொரு வகையிலும் பிரச்சினைகள் தடைகள் ஏற்படாத முறையில் எந்தவொரு இறக்குமதிக் கட்டுப்பாடுமின்றி அதி ஆடம்பர வாகனங்களும் அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருட்களும் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு குவிக்கப்படுவதாகும். இவ்வாறான இறக்குமதிகளுக்கான செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. முழுநாடுமே பாரியதொரு பொருளாதார யுத்தத்திற்குள் வெகுவிரைவில் பிரவேசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதற்கான மற்றுமொரு முக்கிய காரணம் என்னவென்றால் நமது அரசு தரப்பு செலவினங்கள் குறைக்கப்படுவதற்கான முயற்சிகள் இல்லாமையாகும். இன்று உலகிலேயே மிகக் கூடுதல் எண்ணிக்கையில் அமைச்சர்களைக் கொண்ட பெரியதொரு அமைச்சரவையை நாம் பராமரித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களின் செயற்பாடுகளுக்காக வழங்கப்படும் படிக்கொடுப்பனவுகளும் எரிபொருள் செலவினங்களும், வாகனங்களை இறக்குமதி செய்து கொடுப்பதற்கான செலவினங்களும் மிக மிகப் பாரியதாகும்.

இது நமது நாடு தாங்கிக்கொள்ள முடியாத வகையில் மிக உயர்மட்டச் செலவினங்களாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி அலுவலகம் சார்ந்த அனைத்துச் செயற்பாடுகள் நடவடிக்கைகளுக்காகச் செலவாகும் நிதி மிகப்பெரிய தொகையாகவே உள்ளது.

பிரிட்டிஷ் அரச குடும்பச் செலவினம் பற்றி தெரிவிக்கப்படும் அறிக்கை ஒன்றிற்கேற்ப பிரிட்டிஷ் அரச குடும்பப் பராமரிப்பு செயற்பாடுகள், நடவடிக்கைகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் செலவிடும் நிதியம் ஒரு சராசரி பிரிட்டிஷ் பிரஜை ஒருவரின் தனிநபர் வருமானத்தின் நூற்றுக்கு 0.003 வீதமாக மட்டுமே உள்ளது.

ஆனால், நமது நாட்டிலோ ஜனாதிபதி சார்ந்த செலவினங்களுக்காக ஒரு ஸ்ரீலங்கா பிரஜையின் சராசரி தனிநபர் வருமானத்தில் நூற்றுக்கு 4 வீதமான பணம் செலவிடப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. இதுவும் இந்த நாட்டுக்கு சுமக்க முடியாத உயர்மட்டச் செலவினமாகும்.

மொத்தத்தில் இந்த நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலைமைக்குப் பிரதான காரணம் கட்டுப்பாடு மேற்பார்வை சோதனையற்ற முறையில் செலவுகள் செய்யப்படுவதாகும். தற்போது “மிஹின் ஏயர்’ விமான சேவை போன்ற திட்டங்கள் சம்மந்தமாகச் செலவிடப்படுவது பற்றி நாட்டில் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.

எவ்வாறாயினும் அரசியல் நோக்கங்களுக்காகப் பெருந்தொகையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசதரப்பில் செய்யப்பட்ட பெரும் செலவினங்கள் பற்றி யாரும் கேள்வி எழுப்புவதில்லை. இவ்வாறு பெருந்தொகையில் வேலைவாய்ப்புகளை வழங்கியதன் மூலம் வேலையில்லாப் பிரச்சினையைக் குறைக்க அரசுக்கு முடிந்திருப்பது உண்மைதான். ஆயினும் இந்த வேலைவாய்ப்புகள் மூலம் புதிய உற்பத்தி விளைவோ அல்லது உற்பத்தி அபிவிருத்தி விளைவோ ஏற்படாத வகையில் வேலை வாய்ப்புத் திட்டங்கள் அமைந்திருப்பதே இங்கு முக்கிய பிரச்சினையாகும். ஆனால் இந்த வேலைவாய்ப்புகளுக்காக சம்பளக் கொடுப்பனவுகள் வேறொரு பிரிவில் செய்யப்படும் உற்பத்திகள் மூலமாகவோ அல்லது பண நோட்டுகளை அச்சிடுவது மூலமாகவோ தான் வழங்கப்படுகின்றன. எவ்வறாக வழங்கப்பட்டாலும் பொருளாதார நெருக்கடியும் பிரச்சினைகளும் மேலும் உக்கிரமடைவதே மேற்படி செயற்பாடுகளின் இறுதிப் பிரதி பலனாகவும் பெறுபேறாகவும் அமைகிறது.

அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி காரணமாகத் தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்புக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மாதச்சம்பளத்தை ரூபா 5000 ஆக அதிகரிக்கும்படி அவர்கள் கூறுகின்றனர். தற்போதுள்ள பொருளாதாரப் பிரச்சினையான நிலையில் அரசாங்கத்தால் இலகுவாக நிறைவேற்றக்கூடிய காரியம் மேலும் பணநோட்டுகளை அச்சடிப்பதாகும். ஆனால் இதன்மூலம் ஏற்படும் பிரதிபலன் என்னவெனில் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்படும் சம்பளத்தின் பெறுமதி மீண்டும் குறைந்துவிடுவதாகும். ஏனெனில் மேலதிக பணநோட்டுகள் அச்சிடுவதால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அதிகரிக்கப்படும் சம்பளத்தின் பெறுமதி குறைவடைந்து தொடர்ந்தும் சம்பளம் வாழ்க்கைக்குப் போதாத நிலை உருவாகிறது. இதைப்பற்றி தொழிற்சங்கங்கள் சிந்திக்காது அவர்களுடைய கோரிக்கை தொழிலாளர்களின் அன்றாட பிரச்சினைகளைச் சரிசெய்வதே.

தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி அரசாங்கமும் அன்றாட அரசியல்வாதிகளுக்கேற்பவே அதாவது அப்போதைய அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கத்திலேயே செயற்படுவதாகத் தெரிகிறது. இந்த வகையில் தற்போது அரசியல் இலாபம் பெறும் நோக்கில் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன்மூலம் ஜனநாயகம் என்னவோ மேலும் சக்தி பெறும் என்று கருதமுடியாது. ஏனென்றால் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவோ, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவோ சுயாதீன அரச சேவை ஆணைக்குழுவோ இல்லாத நிலைமையே தற்போது உள்ளது. எனவே நமக்கு கிடைக்கப்போவது ஜனநாயகம் இல்லாத தேர்தல் தான் இதற்காகப் பெரும் நிதி செலவிடப்படுதல் இறுதியில் மக்களின் பொருளாதார யுத்தத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அரசியல் நோக்கங்களுக்காகத் திட்டமிடப்படாத வகையில் செலவுகள் செய்யப்படுவதால் தமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்வது பொருளாதார நிபுணர்கள் சொல்வதால் அல்ல. எமது அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களே நாம் பயங்கரமானதொரு பொருளாதார நெருக்கடி நிலையை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. இந்தப் பயங்கரமான பொருளாதார யுத்தத்தில் நாம் வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்கு முகம் கொடுத்து அதற்கான திட்டங்கள் வகுக்கும் பொறுப்பை அரசியல் தலைவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கேற்ப அவசியமற்ற செலவினங்களை நிறுத்தி, உற்பத்தி ரீதியில் அபிவிருத்தியையும் அதிகரிப்பையும் ஏற்படுத்தும் திட்டங்களில் செலவிடும் பொருளாதார உபாயமார்க்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நாட்டை தற்போதுள்ள கீழடைவு நிலையிலிருந்து தூக்கிவிடவேண்டும்.

அரசியல்வாதிகளும், அரசுத் தலைவர்களும் இந்தக் கடப்பாட்டை நிறைவேற்றாத நிலையில் அதனை நிறைவேற்றச் செய்வதற்காக அணிதிரள வேண்டியது சமூக அமைப்புகளினதும் மக்களினதும் பெரும் பொறுப்பாகும்.Post a Comment

Protected by WP Anti Spam