இத்தாலி நீதிமன்றத்தில் மொழி தெரியாது எனக்கூறி தப்பிக்க முயன்ற புலிகள்
இத்தாலியில் புலிகள் இயக்கத்துக்கான தடையைத் தொடர்ந்து இத்தாலிய பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கடந்த 17 ஆம் திகதி நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்கத்தின் இத்தாலியத் தலைவர், பிரதித் தலைவர் உட்பட 33 ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த தமிழர்களை இத்தாலியப் பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை இத்தாலிய நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகளின் பேரில் ஆஜர் செய்தபோது மேற்படி புலிகள் இயக்க இத்தாலிய பிரதிநிதியும் சகாக்களும் தமக்கு இத்தாலிய மொழி தெரியாதெனவும் அதனால் நீதிமன்றத்தில் இத்தாலிய மொழியில் வாக்குமூலம் அளிக்கவோ அல்லது வழக்கு விசாரணைகளை விளங்கிக்கொள்ளவோ முடியாதெனவும் கூறி பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் மீதான விசாரணைகளைத் திசை திருப்ப முயன்றுள்ளனர். ஆயினும் அவர்களின் இந்த விதண்டாவாதத்தையிட்டு கடும் எச்சரிக்கை செய்த நேப்பல் பிரதேச நீதிமன்ற நீதிபதி, அவர்களை ஜூன் 30 ஆம் திகதி வரை தடுப்புக் காவல் சிறையில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி பெண் நீதிபதியாகிய அவர் இட்டுள்ள உத்தரவில் இத்தாலியில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் மேற்படி புலிகள் இயக்கத்தவர்கள் இத்தாலியப் பாஷை தெரியாதெனச் சொல்வது ஏற்றுக் கொள்ளமுடியாத வாதம் என நிராகரித்துள்ளார். இவர்கள் மீது பயங்கரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள இத்தாலியப் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் தரப்பில் தாக்கல் செய்த பத்திரத்தில் மேற்படி புலிகள் இயக்கத்தினர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்காக இத்தாலியின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழர்களிடமிருந்து நீண்ட காலமாக நிதி சேகரித்து வந்துள்ளார்கள் எனவும் இவ்வாறு அவர்களிடம் பலாத்காரமாக “கப்பப்பணம்’ வாங்கி வந்தார்கள் எனவும் இந்தவகையில் மேற்படி இத்தாலியப் புலிகள் இயக்கப் பிரதிநிதியும் சகாக்களும் வருடம் ஒன்றுக்கு சுமார் 4 மில்லியன் யூரோ பணத்தை சேகரித்து வந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியப் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேற்படி கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தினர் மீதான விசாரணை நேப்பல் நீதிமன்றத்தில் மீண்டும் நாளை 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.