ஈரானில் சாலை விபத்து: 25 பேர் பலி
ஈரானில் செவ்வாய்க்கிழமை பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். தலைநகர் தெஹ்ரானில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக ஈரான் வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விபத்து குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. உலகில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்கு ஆண்டுதோறும் 26 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சாலை விதிகளை மதிக்காதது, உடனடி சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாதது போன்றவையே உயிரிழப்பு அதிகமாவதற்கு காரணம்.