லண்டனில் கிட்டு, குமரப்பா ஞாபகார்த்தக் கூட்டம்
ஐக்கிய இராச்சியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும் அங்கு நாட்டின் தலைநகர் லண்டனிலேயே புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான செயற்பாடுகள் பகிரங்கமாக நடந்து வருகின்றன. இவ்வாறு லண்டனில் இயங்கும் தமிழர்கள் அமைப்பாகிய பிரிட்டிஷ் ரமிழ்ஸ் போரம் எனப்படும் பிரிட்டிஷ் தமிழர்கள் கூட்டமைப்பும் மற்றும் ரமிழ் யுத் ஒகனிசேசன் எனப்படும் தமிழ் இளைஞர் அமைப்பும் தமிழர்கள் நலன்காக்கும் அமைப்புகள் என்ற போர்வையில் புலிகள் இயக்கத்துக்காகப் பெரும் தொகையில் நிதி உதவிகளைச் சேகரித்து வருகிறது. அத்துடன் இந்த அமைப்புகள் தமது ஏற்பாட்டில் லண்டனில் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக உயிரிழந்த புலிகள் இயக்கத் தலைவர்களின் ஞாபகார்த்தக் கூட்டங்கள் மற்றும் புலிகள் இயக்கம் சார்ந்த மாநாடுகளையும் கொண்டாட்ட நிகழ்வுகளையும் நடத்தி வந்துள்ளது. இந்த வகையில் எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணிவரை லண்டனிலுள்ள விளையாட்டு அரங்கு ஒன்றில் பெரும் கூட்ட நிகழ்வும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் றோம்டன் பகுதியிலுள்ள றிச்சாட் ஏவன்ஸ் பிளேயிஸ் பீல்ட் எனப்படும் மேற்படி விளையாட்டு அரங்கிலேயே புலிகள் இயக்க விழா நடைபெறுகிறது. இதுபற்றி வெளியாகியிருக்கும் லண்டன் தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த தலைவர்களாகிய கிட்டு, குமரப்பா, புலேந்திரன் மற்றும் கரும்புலி மில்லர் ஆகியோரின் ஞாபகார்த்தமாகவே மேற்படி விழா நடைபெறவுள்ளது. பிரிட்டனில் புலிகள் இயக்கமும் அதன் ஆதரவுச் செயற்பாடுகளும் சட்ட பூர்வமாக முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பிரிட்டனின் தலைநகர் லண்டன் மாநகரின் இதயப் பகுதியிலுள்ள றோம்டன் பிரதேசத்தில் பிரபல ரிச்சாட் ஏவன்ஸ் பிளேயிஸ் பீல்ட் விளையாட்டு அரங்கில் புலிகள் இயக்கத் தலைவர்களின் ஞாபகார்த்த விழா பகிரங்கமாக நடைபெறுவதைத் தடுக்க பிரிட்டிஷ் அரசு எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என லண்டன் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.