ஆறு மாத காலப்பகுதியில் புலிகளின் 228 சடலங்கள் படையினரால் கையளிப்பு!
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் 228 புலிகளின் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மததிய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது, இக்காலப்பகுதியில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து 511 பொது மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டையும் மீறி பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். இராணுவத்துக்கு ஆட்சேட்பு நடவடிக்கைகளின் மூன்றாம் கட்டம் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 8000 பேரை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம்வரை தொடர்ந்து நடைபெறும். இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்காக வழங்கப்பட்ட மன்னிப்புக் காலத்தில் 5000 வீரர்கள் மீண்டும் சேவையில் இணைந்துள்ளனர். எஞ்சியோரைக் கைது செய்வதற்காக பொலிஸாரும் இராணுவப் பொலிஸாரும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். வன்னியிலும் மன்னார் பிரதேசத்திலும் இராணுவத்தின் 57 ஆம் 58 ஆம் படையணிகள் மொத்தம் 1043 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை புலிகளிடம்; இருந்து கைப்பற்றியுள்ளனர். புலிகளின் விநியோக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய மூன்று வீதிகளை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் புலிகள் பலத்த பின்னடைவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். படையினர் முன்னேறிச் செல்லும் இடங்களில் உள்ள சமய வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்டுகின்றன. அவற்றுக்கு சேதம் ஏற்படு;ம் வகையில் ஒரு துப்பாக்கிச் சூட்டைக்கூட படையினர் நடத்துவதில்லை என்றும் பிரிகேடியர் கூறினார்.