பேர்லின் சுவர்: இருந்த காலமும் இறந்த காலமும்!!

Read Time:16 Minute, 54 Second

இருந்தாலும் அழிந்தாலும் சில வரலாற்றுச் சின்னங்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அவற்றின் தொன்மையை விட, வரலாற்றுப் பெருமை அவற்றுக்கு அவ்விடத்தை வழங்குகிறது.

உலக அரசியல் வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பிடித்த சின்னங்கள் வெகுசில. குறிப்பாகத் தேச அரசாங்கங்களின் தோற்றமும் மன்னராட்சியின் முடிவும் விளைவித்த, புதிய அரசு முறையும் அதன் விருத்தியும் அப்போக்கில் நடந்த உலகப் போர்களின் அவலங்களுக்குப் பிந்திய, தத்துவார்த்த அரசியல் வரலாற்றுச் சின்னங்கள் முக்கியமானவை.

ஆனால், அவைபற்றிப் பேசுதல் குறைவு. அவற்றுள் ஒன்று, இன்றுவரை முரண்படும் கதையாடல்களால், கட்டமைத்த பொய்களால் ஆன ஒரு சின்னமாகும். அதன் வரலாறு மறைக்கப்படுகிறது.

கடந்த வாரத்தோடு, ஜேர்மனியின் பேர்லின் சுவர் இருந்த காலத்தை, அது இடிபட்டதையடுத்த காலம் மீறியது. இது பேர்லின் சுவரை மீண்டும் நினைவுகூருதற்கான அடிப்படைகளை உருவாக்குகிறது. 1961ஆம் ஆண்டு, கட்டப்பட்ட இச்சுவர், 1989ஆம் ஆண்டு இடிபடும் வரை 10,316 நாட்கள் நிலைத்தது.

இம்மாதம் ஆறாம் திகதி, இச்சுவர் இடிபட்டு 10,317 நாட்கள் கடந்ததைக் குறித்தது. அத்துடன், அது இருந்த காலத்தை, இது இறந்த காலம் மிஞ்சியது.

பேர்லின் சுவரின் கதை, இரண்டாம் உலக போரின் முடிவுடன் தொடங்குகிறது. ஹிட்லரின் ஜேர்மனி, போரிற் தோற்றபின், ஜேர்மனியில் நேசநாட்டுப் படைகள் தங்கியிருந்தன. போருக்குப் பின் செய்த பொட்ஸ்டாம் உடன்படிக்கையின்படி, ஜேர்மனி நான்கு பிராந்தியங்களாகப் பிரிவுண்டது. அவை முறையே, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருந்தன.

போரின்பின், சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கும் இடையிலாக முரண்பாடு கெடுபிடிப் போராக மாறியதோடு, பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவற்றின் கீழிருந்த பகுதிகள் மேற்கு ஜேர்மனியாகவும் சோவியத் ஒன்றியத்தின் கீழிருந்த பகுதி கிழக்கு ஜேர்மனியாகவும் அறியப்பட்டன.

ஜேர்மனியின் தலைநகராயிருந்த பேர்லின் கிழக்கு ஜேர்மனிக்குட்பட்டதாயினும் அதுவும் முற்கூறிய நான்கு நாடுகளுக்கிடையே பிரிக்கப்பட்டது. அதுவும் மேற்கு பேர்லின், கிழக்கு பேர்லின் எனப் பிரிவுண்டது.

இவ்விரண்டு பேர்லின்களையும் பிரிக்கும் பேர்லின் சுவர் காலத்தால் பிற்பட்டது. அது கிழக்கு ஜேர்மனியால் எழுப்பப்பட்டது. கிழக்கு ஜேர்மனியர்கள், ‘சுதந்திர’ மேற்கு ஜேர்மனிக்குத் தப்பிச் செல்லாமலே அச் சுவர் எழுப்பப்பட்டது என நமக்குச் சொல்லப்படுகிறது.

மேற்கு ஜேர்மனி, சுதந்திரமான தேசமாயும் கிழக்கு ஜேர்மனி சர்வாதிகார நாடாயும் இருந்ததால், கிழக்கு ஜேர்மனியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றோரைக் கிழக்கு ஜேர்மன் படைகள் சுட்டுக் கொன்றன என்றே வரலாறு எழுதப்பட்டுள்ளது.

1961ஆம் ஆண்டு, சுவர் எழ முன்னர், பல கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனியில் வேலை செய்தார்கள். கிழக்கு ஜேர்மனியின் தரமான கல்வி முறையும் தொழிற் கல்விக்குக் வழங்கிய முக்கியத்துவமும் தரமான தொழில்வினைஞர்கள் உருவாகக் காரணமாயின.

அதையொத்த தரமான கல்வியோ தொழில்பயிற்சியோ மேற்கு ஜேர்மனியில் இருக்கவில்லை. எனவே, கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்கள், மேற்கு ஜேர்மன் தொழிற்றுறையின் உயிர்நாடியாக இருந்தனர்.

அத்துடன், கிழக்கு பேர்லினில் அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைத்ததால் அதை வாங்குதற்கு மேற்கு பேர்லின்வாசிகள் கிழக்குக்குச் சென்றார்கள். இந்நிலையில், மேற்கு ஜேர்மனியைக் கட்டுப்படுத்திய அமெரிக்க தலைமையிலான கூட்டணி, கிழக்கு ஜேர்மனிக்கு எதிரான விஷமப் பிரசாரத்தைத் தொடங்கியது.

பல்வகைக் கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்களை மேற்கில் நிரந்தரமாகத் தங்க வைக்க முயற்சிகள் தொடங்கின.

கிழக்கு ஜேர்மன் தொழிற்றுறையில் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டது. கிழக்கு ஜேர்மனியில் கலவரங்களைத் தூண்டி அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அமெரிக்க நோக்கங்களைத் வெளிப்படுத்திய அவை, தோற்றாலும், ஊடுருவலைத் தடுக்கவும் தொழிலாளரின் வெளியேறலைச் சீர்ப்படுத்தவும் எல்லையொன்றை உருவாக்கும் தேவை கிழக்கு ஜேர்மனிக்கு ஏற்பட்டது.

எனவே, 1961இல் கம்பிகளிலான ஒரு தடுப்பு வேலி உருவானது. அதைத் தொடர்ந்து, 1965இல் பாதுகாப்பை மேம்படுத்துமாறு, பேர்லினில் சீமெந்துச் சுவர் கட்டப்பட்டது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், கிழக்கு ஜேர்மனி தன் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்காகத் தனது தொழிலாளரை நாட்டுக்குள் வேலைக்கமர்த்தியதன் மூலம், கிழக்கு ஜேர்மனி தொழிலில் முன்னேறியது.

1963ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வரும் ‘நியூயோர்க் டைம்ஸ்’ பின்வருமாறு எழுதியது: ‘கிழக்கு ஜேர்மனி மேற்குக்குத் தொழிலாளரை அனுப்ப, கட்டுப்பாடுகளை விதித்தமை மேற்கு ஜேர்மனியில் பாரிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. 60,000 சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் நாளாந்தம் கிழக்கில் இருந்து மேற்கு பேர்லினுக்கு பயணம் செய்தார்கள். அவர்களே பேர்லின் கைத்தொழில்களின் அச்சாணியாக இருந்தார்கள். கிழக்கின் இந்நடவடிக்கை, மேற்கு ஜேர்மன் தொழிற்றுறையைப் கடுமையாகப் பாதித்துள்ளது’.

கவனிக்க வேண்டியது யாதெனில், ஜேர்மனியை இரண்டாகப் பிரித்தது அமெரிக்கவன்றி, சோவியத் யூனியன் அல்ல. கிழக்கு ஜரோப்பாவில் ஏராளமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை 1950களில் அமெரிக்கா சி.ஜ.ஏ மூலம் முன்னெடுத்தது. எனவே, மேற்கு ஜேர்மனில் இருந்து கிழக்குக்குக் போவோரைக் கண்காணித்தல் தவிர்க்கவியலாததானது.

அமெரிக்க சி.ஜ.ஏயின் உலகளாவியத் தலையீடுகள் பற்றி விரிவாக எழுதியுள்ள முன்னாள் சி.ஜ.ஏ உளவாளியான வில்லியம் ப்ளும் தனது, ‘Rogue State: A guide to World’s Only Super Power ’ எனும் நூலில் கிழக்கு ஜேர்மனியில் 1950களில் எவ்வாறான நாசகார நடவடிக்கைகளில் சி.ஜ.ஏ ஈடுபட்டது என விரிவாக எழுதியுள்ளார்.

குறிப்பாக, அங்கு முன்னெடுத்த ‘ Operation Gladio ‘ நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வாசிக்கப் பயனுள்ளவை.

அமெரிக்காவை மையமாகக் கொண்டியங்கும் ‘வூட்ரோ வில்சன் சர்வதேச நிலையம்’ கெடுபிடிப் போர்க் காலம் பற்றிய தனது ஆய்வறிக்கைகளில் பின்வருமாறு கூறுகிறது. ‘கிழக்கு ஜேர்மனியின் திறந்த எல்லை, அங்கு நாசகார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைதியின்மையை ஏற்படுத்தவும் வாய்ப்பாக இருந்தது. அதேவேளை, அங்கு கட்டிய பேர்லின் சுவர் மிகப்பெரும் பாதுகாப்பைக் கொடுத்தது என்பதை மறுக்கவியலாது’. இச்சுவரை எழுப்பும் தேவையை அமெரிக்காவும் அதன் நேசநாடுகளுமே உருவாக்கின என, விளங்குதல் வேண்டும்.

1985ஆம் ஆண்டு, மேற்கு ஜேர்மனியில் வாழ்ந்த 20,000 விவசாயிகள் அங்குள்ள முதலாளித்துவ முறை சுரண்டுகிறது என்றும், மனிதர்களை மனிதர்களாகவன்றிப் பண்டங்களாகக் கருதுகிறது என்றும் கருதிக் கிழக்கு ஜேர்மனிக்குச் சென்றனர். அதற்கு முன், 1984இல் மேற்கு ஜேர்மன் அரசானது, 14,300 ஜேர்மனியர், கிழக்கு ஜேர்மனிக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தனர் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டது.

கிழக்கு ஜேர்மனியில் இருந்து தப்பிப்போகச் சுவரைக் கடக்க முயன்ற ஆயிரக்கணக்கானோரையும் மேற்கில் இருந்து கிழக்குக்கு வரமுயன்றோரையும் கிழக்கு ஜேர்மன் படையினர் சுட்டுக் கொன்றார்கள் என, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. இதற்கு இரண்டு நிகழ்வுகளை சுட்டலாம்.

மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த வெர்னர் ஸிபில்ஸ்கி என்பவர், கிழக்கு ஜேர்மன் காவல்படை தப்பியோடும் அகதிகளைச் சுடுவதில்லை என நண்பர்களுடன் வாதிட்டார். நண்பர்கள் அதை மறுக்கவே அதைத் தானே நிரூபிப்பதாகப் பந்தயம் கட்டிச் சொன்னபடியே, சுவரேறிக் குதித்து, கிழக்கு பெர்லின் சென்றார்.

ஸிபிலிஸ்கியை கிழக்கு ஜெர்மன் காவலர்கள் சுட்டுக்கொன்றனர் என மேற்கு ஜேர்மனியில் வதந்தி பரவியது. சில நாட்களின் பின்னர், ஸிபில்ஸ்கி அதே சுவரேறிக் குதித்து, மேற்கு ஜேர்மனியை வந்தடைந்தார்.

அவ்வாறே, 1980ஆம் ஆண்டு, ஜோன் ரன்னிங்ஸ் என்ற அமெரிக்க சமாதானச் செயற்பாட்டாளர் பதினெட்டு முறை பெர்லின் சுவர் தாண்டிக் குதித்தார்.

கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் யாதெனில், கிழக்கு ஜேர்மனியில் நாற்சிசம் முற்றாக ஒழிக்கப்பட்டது. நிறவெறியோ துவேஷமோ எஞ்சவில்லை. மேற்கு ஜேர்மனியிலோ அரச உயர்பதவிகளில் நாசிகள் இருந்தார்கள். சமூகத்தின் முக்கியமான அம்சமாக நிறவெறி இருந்தது. அதன் தொடர்ச்சியை இன்றைய ஒன்றிணைந்த ஜேர்மனியில் காண்கிறோம்.

நாற்சிசத்தைத் தோற்கடித்தமையை அடையாளப்படுத்த, ஹிட்லரின் றைக்ஸ்டாக் கட்டடத்தின் உச்சியில் செங்கொடி ஏற்றப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது பிரிட்டனின் கொடி எதுவும் அங்கு ஏற்றப்படவில்லை என்பதை நினைவுகூர்வது நல்லது.

மக்களைப் பிரித்த பேர்லின் சுவர் இடிபட்ட போது, பிரித்தானியப் பிரதமராக இருந்த மார்கிரட் தட்சர், அச்சுவரை இடிக்கக்கூடாது எனவும் அதை இடிப்பது மேற்குல சமூக விழுமியங்களுக்குத் தீங்கானது எனவும் சொன்னார். பிரான்ஸின் ஜனாதிபதியாயிருந்த பிரான்சுவா மித்ரோன் ஒன்றுபட்ட ஜேர்மனி, ஹிட்லரை விட மோசமாயிருக்கும் என்றும் அது ஐரோப்பாவுக்குச் சவாலானதாக அமையும் எனவும் எச்சரித்தார்.

இவை ஜேர்மன் மக்களைப் பிரித்தது யார் என்ற வினாவுக்கு விடையைத் தருகின்றன. அதைப் போலவே, இன்றும் கொரிய இணைப்பை மேற்குலகு தடுத்துவருகிறது. பேர்லின் சுவரை நினைவுகூர்கையில், ஜேர்மன் மக்களை மேற்குலகு எவ்வாறு தனது நலன்களுக்காகப் பிரித்தது என்ற அடிப்படையில் நினைவுகூரப்பட வேண்டும்.

பேர்லின் சுவர் பற்றியும் கிழக்கு ஜேர்மனியின் வாழ்க்கை பற்றியும் அறிய வேண்டுவோர் விக்டர் குரொஸ்மனை வாசிக்க வேண்டும். அமெரிக்கப் படைவீரான அவர், இரண்டாம் உலகப் போரில் கடமையாற்றிய பின், கிழக்கு ஜேர்மனியில் வசித்தார். இன்னமும் அவர் ஜேர்மனியில் வசிக்கிறார்.

ஹவார்ட் பல்கலைக்கழகத்திலும் லிப்சிக்கில் உள்ள கார்ள் மார்க்ஸ் பல்கலைக்கழகத்திலும் பட்டம்பெற்ற ஒரே மனிதர் என்ற பெருமைக்குரிய அவரது எழுத்துகள் கிழக்கு ஜேர்மனியின் வளமிகு காலத்தை விவரிக்கின்றன. குறிப்பாக அவரது சுயசரிதையான ‘Crossing the River: a Memoir of the American Left, the Cold War and Life in East Germany’ கிழக்கு ஜேர்மனி பற்றிப் கட்டப்பட்ட பொய்களைக் களைய உதவும் முக்கியமான ஒரு நூலாகும்.

1999ஆம் ஆண்டு பேர்லின் சுவரின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி, முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் USA Today என்ற அமெரிக்கப் பத்திரிகை நடத்திய கருத்துகணிப்பில் 51 சதவீதமான பேர் இப்போதையை விடக் கம்யூனிசத்தின் கீழ், தாம் மகிழ்வாக இருந்ததாகத் தெரிவித்திருந்தனர்.

பேர்லின் சுவரை எவ்வாறு நினைவுகூர்வது என்ற வினா இயல்பானது. பேர்லின் சுவரின் வீழ்ச்சி ‘கம்யூனிசத்தின் தோல்வி’ என அறிவிக்கப்பட்டது. இன்றுவரை இருமைய உலகின் முடிவையும் ஒருமைய உலகின் தோற்றத்தையும் கோடுபிரிக்கும் காலவோட்ட நிகழ்வு பேர்லின் சுவரின் தகர்ப்பெனலாம்.

பேர்லின் சுவர் தகர்ந்து, சோவியத் ஒன்றியத்தின் முடிவுக்கு வந்ததை பிரான்சிஸ் ஃபுக்குயாமா ‘வரலாற்றின் முடிவு’ என அறிவித்தார். அவ்வாறு அறிவித்து 25 ஆண்டுகட்கு மேலாகிவிட்டது. வரலாறும் முடியவில்லை, கம்யூனிசமும் அழியவில்லை. பூக்களைக் களையலாமளூ அதனால் வசந்தத்தை நிறுத்தவியலாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது இடத்தில் இளைஞருக்கு முத்தம் கொடுத்த ஓவியா! (வீடியோ)
Next post அழுத்தத்தை அதிகரிக்க இணக்கம்!!