By 20 February 2018 0 Comments

யூ டியூப் நாயகி!!

புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தால் குழந்தைகள் விரும்பித் தேடும் இடம் பெப்பிள்ஸ் நிறுவனத்தின் கடையாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கான ரைம்ஸ் சிடி, கணித சிடி, பால பாடங்கள் சிடி என எல்லாவற்றிற்கும் புகழ் பெற்ற நிறுவனம் பெப்பிள்ஸ். அதன் இயக்குனரான கோபி சுதா இப்போது ஒரு யூடியூப் பிரபலம். குறைந்த காலமான ஒரு வருடத்தில் அவர் யூ டியூப்பில் இவ்வளவு பிரபலமாக காரணம் என்ன? நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சுதா. “சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்தவுடன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பிறகு எனது கணவரின் பெப்பிள்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகப் பொறுப்பேற்றபோது என் கணவர் பிஸினஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.

முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பிறகு வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். மார்க்கெட்டிங் பார்த்துக்கொள்கிறேன். கிட்டதட்ட 20 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக வியாபாரம் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் அதையும் தாண்டி எனக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளம் வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து வந்தது. அதற்கொரு காலமும் கனிந்தது. சமையலில் எனக்கு சின்ன வயதில் இருந்தே நல்ல ஆர்வம் இருந்தது. அதுமட்டுமில்லாமல் எனக்கு விருந்தோம்பல் என்ற விஷயமும் பிடித்தமானதாக இருந்தது. அம்மா, அப்பா இருவரும் வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார்கள். குறைந்தபட்சம் ஒரு காபி, டீயாவது கொடுக்காமல் வெறும் வயிற்றோடு அனுப்பமாட்டார்கள்.

அதே பழக்கம் என்னிடமும் வந்துவிட்டது. வீட்டிற்கு வந்தவர்களை கவனிப்பது அவர்களுக்கு வித்தியாசமாக சமைத்து கொடுத்து, அதை அவர்கள் சாப்பிட்டு மகிழ்ந்து பாராட்டும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் பார்த்து பார்த்து சமைப்பேன். சமைக்கும் போது அதிலேயே ஆழ்ந்து விடுவேன். சமையல் நன்றாக வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் சமைப்பேன். அதனால் சமையல் எப்பவும் நன்றாக வரும். ஒரு சமயம் என் மகளின் தோழி வீட்டிற்கு வந்திருந்தாள். அவளுக்காக ஸ்பெஷலாக மஷ்ரூம் பிரியாணியும், கடாய் சிக்கனும் செய்தேன். அதை செய்யும்போது அப்படியே வீடியோ எடுத்தோம். சாப்பிட்டு ‘நல்லா இருக்கு’ என்று அந்தப் பெண் பாராட்டினாள்.

என்னவோ தோன்ற அந்த வீடியோவை யூ டியூப்பில் அப்லோட் செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து சமையல் வீடியோக்களை பதிவிட்டேன். பெரும்பாலும் கோவை மாவட்டத்தின் எளிய உணவு வகைகளை செய்து பதிவேற்றம் செய்தேன். அவை எளிய முறையில் மக்களுக்கு புரியும் வகையில் இருக்கும் உணவுகள். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யும் வீட்டு உணவாகவும் ஆரோக்கியமான உணவாகவும் கிராமத்து சமையலாகவும் இருந்ததால் எனது வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. என்னுடைய நெருங்கிய உறவினர் மகள் ஐ.டி துறையில் வேலையில் இருக்கிறாள்.

அவளுடைய தோழிகள் என்னுடைய சமையல் வீடியோக்களை அவளிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவளுக்கு ஆச்சரியம். அந்த அளவிற்கு என்னுடைய வீடியோக்கள் பிரபலமாகி உள்ளதை என்னிடம் தெரிவித்தாள். அதன் பிறகு மேலும் நிறைய வீடியோக்களை பதிவேற்றினேன். இந்தப் பொருட்களை பயன்படுத்துவதால் இன்னின்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் சேர்த்து பதிவிடுகிறேன். உதாரணத்திற்கு கருப்பட்டி சேர்த்த உணவென்றால் கருப்பட்டியில் இரண்டு வகை உண்டு. ஒன்று தென்னங்கருப்பட்டி, மற்றொன்று பனங்கருப்பட்டி. பனங்கருப்பட்டி பயன்படுத்துவதுதான் நல்லது. அது ரத்த சோகை மற்றும் ரத்த சுத்திகரிப்புக்கு நல்லது. மூட்டுவலிக்கும் நல்லது என்பது மாதிரியான நல்ல தகவல்களை கொடுப்பேன்.

மணத்தக்காளி கீரை வாய் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு நல்லது, மீன் குழம்பை சட்டியில் வைத்தால் என்ன பலன் என இது போன்ற தகவல்களை சமையலுடன் சொல்வேன். இது பயனுடையதாக இருந்தது என்று நிறைய கமெண்டுகள் வந்தன. எந்த ஊருக்குப்போனாலும் வித்தியாசமான சமையல் சாப்பிட நேர்ந்தால் அதன் ரெசிபிக்களை கேட்டு தெரிந்துகொள்வேன். நாம் அறிந்திராத கீரை வகைகள், அதன் பலன்கள் என எல்லாவற்றையும் தெரிந்து அதனை முறையாக மக்களுக்குக் கற்றுத் தருவேன். தற்போது தினம் எனது வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களை நெருங்கி கொண்டிருக்கிறது. தினமும் குறைந்தது 20 கமெண்டுகளுக்காவது பதில் சொல்லி விடுவேன்.

முன்பெல்லாம் நான் சமைப்பதை வேற யாராவது கேமராவில் சூட் செய்வார்கள். பிறகு நானே ஃபோகஸ் செய்யக் கற்றுக்கொண்டேன். மற்றவர்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தாமதமாகாமல் நானே படமெடுத்துவிடுவதால் உணவும் வீணாகாது. காலை ஆறு மணியில் இருந்து பத்து மணி வரை இதற்காக செலவிடுவேன். எட்டு மணிக்கெல்லாம் சூட்டிங் ஆரம்பித்துவிடுவேன். சூட்டிங்கிற்கு முன்பு ட்ரையல் பார்க்கும் பழக்கமெல்லாம் கிடையாது. பிரசென்டேஷன் அழகாக இருக்க வேண்டும். முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து அதனை சூட் செய்து விடுவேன்.

பிறகு கேமராவை ஓர் இடத்தில் ஃபிக்ஸ் செய்துவிட்டு சமையல் செய்ய ஆரம்பிப்பேன். பிறகு அதனை பதிவிடுவேன். ‘நீங்க கற்றுத் தருவது ப்ரஃபஷனலாக இல்லாமல் வீடுகளில் நம் அம்மாக்கள் கற்றுத் தருவது போல் இல்லாமல் இயல்பாக இருக்கிறது. அதனால் எங்களுக்கு பிடிக்கிறது. இனிமேல் இது போலவே கற்றுத் தாருங்கள்’ என நிறைய பேர் கமெண்டில் சொல்கிறார்கள். இதுவரை 200 உணவு வகைகளை வெற்றிகரமாக பதிவிட்டிருப்பேன். இந்த ஒரு வருடத்தில் கிடைத்த பெரிய ரீச் என்னை இதில் மேலும் மேலும் சாதிக்கத் தூண்டியது.

இது போக நான் வீட்டில் என் மகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும்போது எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் இந்திக்காரர்களின் பிள்ளைகளும் என்னிடம் தமிழ் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். கற்றுத் தந்தேன். நான் நன்றாகச் சொல்லித் தருவதாகச் சொன்னார்கள். அதனால் சமையலோடு மட்டுமில்லாமல் தமிழ் எழுத்துப் பயிற்சி வீடியோக்களையும் வெளியிட ஆரம்பித்தேன். உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்களை எளிய முறையில் விளக்கமாக கற்றுத்தருகிறேன்.

ஆடியோ மற்றும் வீடியோவாக இருப்பதால் பிள்ளைகளுக்கு மனதில் எளிதாக பதிந்துவிடும். அதுவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தக்கட்டமாக டிஎன்பிஎஸ்ஸிக்கான கேள்வி பதில் வீடியோக்களை தயாரித்து வெளியிடுகிறேன். இதற்காக வரலாற்றைப் படித்து சரியான தகவல்களை திரட்டி வெளியிடுகிறேன். இது இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவும் பெருமளவு வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போது நான் எதிர்பார்த்த எனக்கான அடையாளம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார் சுதா.Post a Comment

Protected by WP Anti Spam