By 20 February 2018 0 Comments

‘டர்பன் அணிந்தவர்களை வெறுக்கிறேன்’ சீக்கியரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய அமெரிக்கர்!!

அமெரிக்காவில் வாடகை கார் ஓட்டும் சீக்கியரின் தலையில் துப்பாக்கியை வைத்து, ‘டர்பன் அணிந்தவர்களை வெறுக்கிறேன்’ என அமெரிக்கர் மிரட்டியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் நகரில் உபர் நிறுவனத்துக்கு சொந்தமான வாடகை காரை குர்ஜித் சிங் என்ற சீக்கியர் ஓட்டுகிறார். இவர் கடந்த மாதம் 29ம் தேதி மோலின் என்ற இடத்தில் 2 பயணிகளை ஏற்றினார். அப்போது, பயணிகளில் ஒருவர் குர்ஜித் சிங்கிடம், ‘நீ யார்? எந்த நாட்டுக்காரன்?’ என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு குர்ஜித் சிங்கும் பொறுமையாக பதிலளித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பயணி மிரட்டல் பாணியில் பேசியபோது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. கோபமடைந்த அந்த பயணி தன்னிடம் இருந்த துப்பாக்கியை திடீரென எடுத்து, குர்ஜித்தின் தலை மீது வைத்தார். ‘நீ என்ன சீக்கியரா? நான் சீக்கியர்களை வெறுக்கிறேன். டர்பன் அணிந்தவர்களை எனக்கு பிடிக்காது’ என ஆவேசமாக கூறியுள்ளார். பயந்து போன குர்ஜித் காரை ஓரம் கட்டி, பயணிகளை இறக்கி விட்டு தப்பியுள்ளார். இது பற்றி ராக்லேண்ட் ஷெரீப்பிடம் சீக்கிய அமைப்பு புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, குர்ஜித் சிங்கிடமும், மிரட்டிய பயணியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இதுவரை அந்த பயணி கைது செய்யப்படவில்லை. குர்ஜித் சிங்கின் பெற்றோர் இந்தியாவில் வசிக்கின்றனர்.

அமெரிக்காவில் குர்ஜித் சட்டப்பூர்வ அனுமதி பெற்று வேலை செய்து வருகிறார். அவருக்கு ஆங்கிலம் நன்றாக தெரியாது.
அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் அதிகமாகி வருகிறது. அவர்கள் தாடி வைத்திருப்பதால் முஸ்லிம்களுக்கும் அவர்களுக்கும் பெரியளவில் வித்தியாசம் தெரிவதில்லை. டர்பன் அணிந்தால் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. நியூயார்க் இரட்டை கோபுரம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களை அமெரிக்கர்கள் வெறுக்கின்றனர்.

முஸ்லிம்கள் என நினைத்து பல்வேறு நேரங்களில் சீக்கியர்களை அவர்கள் தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலின்போதும், சீக்கிய ஒருவர் அரேபிய முஸ்லிம் என நினைத்து படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக, தங்கள் மீதான தாக்குதலை கைவிடும்படி வலியுறுத்தவும், அமெரிக்கர்களிடம் தங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘நாங்கள் சீக்கியர்கள்’ என்ற பெயரில் சீக்கியர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Protected by WP Anti Spam