பீஜிங் ஒலிம்பிக் 2008: இந்தியாவின் சானியா-சுனிதா சிறப்பு அனுமதியுடன் பங்கேற்பு
சீனாவில் தலைநகர் பீஜிங்கில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்பதற்கு இந்தியாவின் சானியா மிர்சா-சுனிதா ராவ் ஜோடி சிறப்பு அனுமதியுடன் (wild card) தகுதி பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின், முக்கிய போட்டியான டென்னிஸ்ஸில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் பங்கேற்பதற்கு இந்தியாவின் சானியா மிர்ஷா ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார். இந்த நிலையிலேயே மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்குபற்றுவதற்கு சானியா மிர்சா-சுனிதா ராவ் ஜோடி தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டிகள் ஓகஸ்ட் 10-17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் பங்கேற்பதற்கு சானியா மிர்ஷா, சுனிதா ராவ் ஆகிய இருவரது பெயர்களையும் இந்திய ஒலிம்பின் சம்மேனளம் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பிடம் பரிந்துரை செய்திருந்ததாகவும், அதன் பிரகாரமே தற்போது இந்த சிறப்பு அனுமதி கடைத்துள்ளதாகவும், இந்திய டென்னிஸ் சங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் ஆட்டங்களில் இந்தியாவின் மகேஷ் பூபதி-லியாண்டர் பயஸ் ஜோடி பங்கேற்கவுள்ளது. இந்த ஜோடி 2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.