எனக்கு ராணுவத்தின் ஆதரவு எப்போதும் உண்டு: வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டேன்; முஷரப் பரபரப்பு பேச்சு
எனக்கு ராணுவத்தின் ஆதரவு எப்போதும் உண்டு, நான் வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டேன் என்று முஷரப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18-ந் தேதி நடந்த பொதுத்தேர்தலில் அதிபர் முஷரப் ஆதரவு பெற்ற கட்சி தோல்வி அடைந்தது. பெனாசிர் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அதிலிருந்து கடந்த 5 மாதங்களாக, முஷரப் பதவி நீக்கம் பற்றி பரபரப்பாக செய்தி வந்த வண்ணம் உள்ளது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவார் என்றும், அவரை ராணுவம் கைவிட்டு விட்டது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த செய்திகளை எல்லாம் முஷரப் முதல்முறையாக மறுத்துள்ளார். கராச்சியில் தொழில் அதிபர்கள் அளித்த விருந்தில் அவர் பேசியதாவது:- நான் கடந்த 3, 4 மாதங்களாக அமைதியாக இருந்தேன். ஆனால் நான் பயந்து விடவில்லை. பயம் என்றாலே என்ன என்று எனக்குத் தெரியாது. அதை யாரும் எனக்கு கற்றுக் கொடுக்கவும் இல்லை. எதிர்த்து தாக்குவதையும், தற்காத்து கொள்வதையும்தான் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். நான் பதவி விலகி வெளிநாட்டுக்கு ஓடி விடுவேன் என்றும், ராணுவம் என்னை கைவிட்டு விட்டது என்றும் கூறி வருகிறார்கள். இப்படி கூறுபவர்கள், வதந்தியை பரப்புபவர்கள் ஆவர். எனக்கு ராணுவத்தின் ஆதரவு எப்போதும் உண்டு. அது என் வாழ்நாளின் கடைசிவரை நீடிக்கும். என்னை ராணுவம் ஒருபோதும் கைவிடாது. நான் எந்த தவறோ, பாவமோ செய்யவில்லை. எனவே, நான் பதவி விலக மாட்டேன். ஒருவேளை பாகிஸ்தானின் பிரச்சினைகள் தீர்வதற்கு எனது ராஜினாமா உதவுமானால், அப்போது மட்டுமே நான் ராஜினாமா செய்வேன். அந்த சூழ்நிலையில், பதவி விலக ஒரு நாள் கூட எடுத்துக் கொள்ள மாட்டேன்.
வெளிநாட்டுக்கு ஓட மாட்டேன்
நான் வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டேன். பாகிஸ்தானில் நான் ஆற்ற வேண்டிய கடமை நிறைய உள்ளது. நிலையற்ற அரசு இருந்தால், தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது. எனவே, பாகிஸ்தானை தற்போதைய சிக்கலில் இருந்து விடுவிக்க, மற்ற கட்சிகளுடன் இணைந்து நான் பாடுபட வேண்டி உள்ளது. இதற்காக, அனைத்து கட்சிகளும் கடந்த காலத்தை மறந்து என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பாகிஸ்தான் அரசு 5 ஆண்டுகள் நீடித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
தீவிரவாத ஒழிப்பு
பாகிஸ்தானில் தலீபான் ஆதரவு தீவிரவாதிகளை ஒடுக்காவிட்டால், நாடு முழுவதும் `லால் மசூதிகள்’ பெருகி விடும். பழங்குடியின பகுதியில் தீவிரவாதிகள் மீது ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன். அங்குள்ள மக்கள் தீவிரவாதிகளை கைவிட்டு மிதவாதிகளை ஆதரிக்க தொடங்கி விட்டனர். பலுசிஸ்தானில் தீவிரவாத எண்ணம் பெருகுவது கவலை அளிக்கிறது. தீவிரவாதிகளை தாஜா செய்வதை விட்டு விட்டு, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு முஷரப் கூறினார்.