முரளிதரன் சொந்த மண்ணில் உலகச் சாதனை படைப்பதை முன்னிட்டு முத்திரை வெளியீடு!
இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கட் டெஸ்ட் போட்டி இன்று கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெறுகின்றது டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றுள்ள அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னின் உலக சாதனையை முரளிதரன் இப்போட்டியில் முறியடித்து விடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இதேவேளை, இன்றைய டெஸ்ட் போட்டியில் முரளிதரன் உலக சாதனை நிகழ்த்தப்போவதை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களம் முரளிதரனின் படத்தை தாங்கிய வட்ட வடிவிலான முத்திரையொன்றை வெளியிடத் தீர்மானித்துள்ளது. முரளிதரன் உலக சாதனை நிகழ்த்தும் தினத்தில் இம்முத்திரை வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வரலாற்றில் வட்ட வடிவிலான முத்திரையொன்று வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுமுன்னர் 1000 விக்கெட்டுக்களை வீழ்த்துவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள முரளிதரன், நான் இன்னும் 4 அல்லது 5 வருடங்கள் விளையாடுவேன். எனவே அந்த 1000 விக்கெட் சாதனையை மிக இலகுவாக முறியடித்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.