(மகளிர் பக்கம்)கார்மேகக் கூந்தல் வேண்டுமா?

Read Time:12 Minute, 10 Second

கூந்தல்… இந்த நான்கு எழுத்து வார்த்தைதான் எத்தனை வசீகரமானது. பெண்களின் கூந்தலை வைத்து, சங்க இலக்கியத்தில் புலவர்களும், கவிஞர்களும் திரைப்படப் பாடலாசிரியர்களும் எத்தனை எத்தனை கற்பனைகளைக் கவிதைகளை பாடல்களாக இயற்றியுள்ளனர். ஆண்-பெண் இருபாலரும் தங்கள் கூந்தலின் கருமை நிறத்திற்காக எடுக்கும் சிரத்தைகள் அதிகம்.

என்றாலும் நவீன வாழ்க்கை தரும் வேகத்தில், தங்களின் அழகிய கூந்தலை பராமரிக்க முடியாமலும், விளம்பரம் தரும் மோகத்தால் அதற்கு அடிமையாகி, அழகு நிலையங்களை அணுகி இயற்கைக்கு மாறாய், கூந்தலின் வடிவத்தையும், தன்மையையும் மாற்ற எத்தனிக்கும் ஒவ்வொரு செயலும் கூந்தல் அழிவின் ஆரம்பமே… இது இருவருக்கும் பொருந்தும். ஆரோக்கியம் சார்ந்த அழகே கூந்தலுக்கும் நல்லது.

முடியில் மூன்றுவிதமான தன்மைகள் உண்டு. சுருள் முடி, நீள் முடி அல்லது கோரை முடி, அலை அலையான முடி ஆகியவையே அவை. பொடுகு, முடிகொட்டுதல், நரை முடி, முடி படியாமல் பறப்பது, பேன் தொல்லை போன்றவை முடியால் வரும் முக்கியமான பிரச்சனைகள். முடியில் அழுக்கு படிதல், ஈரப்பசையற்று, வறட்டுத்தன்மையோடு இருப்பது, தலையில் அதிகமாக வேர்வை சுரந்து, முடிக்கால்களில் உள்ள துளைகளை அடைத்தல், பொடுகுப் பிரச்சனை போன்றவை வராமல் முடியினை பாதுகாக்க வேண்டும். தலையில் தடவப்படும், அதிகமான எண்ணையாலும் முடி பிசுபிசுப்பாகி அழுக்கேறும்.

இயற்கையாகச் செய்யும் எதுவுமே ஆரோக்கியம் சார்ந்தது. நல்லது. எந்த ஒரு இயற்கை மாற்றமும் உடனடியாக நிகழாதுதான். இருப்பினும் நம்மைச் சுற்றி எளிதாகக் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு நாமாகவே, முடியில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி பண்ணுவது, கருப்பு நிற முடி வளர்ச்சியினை இயற்கை வழியைப் பின்பற்றி எவ்வாறு தூண்டுவது என்பதைக் காணலாம்.

வீட்டிலே தயாரிக்கும் மூலிகை சீகைக்காய்
சீகைக்காய், ஆவாரம் பூ, பன்னீர் ரோஜாவின் இதழ்கள், செம்பருத்தி இழை, மகிழம்பூ, புக்கக்காய், பூலாங் கிழங்கு, பொடுதலையான் இலை, சம்பங்கி விதை, வெந்தயம், பாசிப்பயறு, காய்ந்த நெல்லிக்காய், வெட்டி வேர், நன்னாரி வேர் இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை வாங்கி நிழலில் நன்றாக உலர்த்தி, அரைத்து வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் எண்ணைக் குளியல் எடுக்க வேண்டும். இந்த மூலிகைத் தயாரிப்பை பயன்படுத்திக் குளித்தால் முடி கட்டாயம் கருமை நிறத்தில் எந்த பாதிப்பும் இன்றி செழுமையாக வளரும். இந்தத் தயாரிப்பினை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட முறையினை செய்ய நேரமில்லை என்றால், எண்ணைக் குளியல் எடுப்பதற்கு முதல் நாள் இரவு தேவையான சீகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம் மூன்றையும் தண்ணீரில் நனைத்து ஊறவைத்து, அத்துடன் செம்பருத்தி இலை, பூ, நான்கு மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் தடவி குளித்தால் கூந்தலுக்கு மிகவும் நல்லது. பிரச்சனையின்றி முடி சிறப்பாக வளரும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளையும் பின்பற்ற நேரமில்லை, சுத்தமாக முடியாது என நினைப்பவர்கள் இயற்கை மூலிகை எண்ணை தயாரித்து வாரம் இருமுறை அந்த எண்ணெயினை பயன்படுத்தி குளிக்கலாம். இந்த மூலிகை எண்ணெயை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தயாரித்தால் போதும். மருதாணி இலை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை, பூ, வெந்தயம், நான்கு மிளகு, காய்ந்த நெல்லி, நல்ல எண்ணை கால் கப், தேங்காய் எண்ணை முக்கால் கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அகன்ற பாத்திரத்தில் இரண்டு எண்ணையையும் சேர்த்து, மிதமான சூட்டில் சூடுபடுத்தி, வெந்தயம், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி இலை, காய்ந்த நெல்லி, மிளகு, செம்பருத்தி இலை, பூ இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு இரண்டு நாள் தலையில் இந்த எண்ணெயை தேய்த்து முடியினை சுத்தம் செய்தல் வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது முடி கொட்டுதல், நரை முடி பிரச்சனை, நுனி முடி பிளவு, சளி பிடித்தல், முடியின் வறட்சித் தன்மை போன்றவை வராது. எண்ணை வடிகட்டிய கசடை தலை மற்றும் உடலில் தேய்த்துக் குளித்தாலும் மிகச் சிறந்த மாய்ச்சரைசராக விளங்குவதுடன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முடி தொடர்பான சென்ற இதழ் கேள்விகளுக்கான பதில்கள்…

முடியில் ஏற்படும் வறட்டுத் தன்மையை எப்படி சரி செய்வது?
நம் முடிக்கால்களுக்கு இடையில் உள்ள கபாலத்தில் எண்ணெய் போன்ற ஒரு திரவம் சுரக்கும். அதற்குப் பெயர் சீபம். சீபம் சுரப்பது குறைவாக இருந்தால் முடி வறட்டுத்தன்மை அடையும். வெளியில் செல்லும்போது தலைமுடியை தூசிபடாதவாறு பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் முடி விரைவில் பாழாகி வறட்டுத் தன்மையை அடையும். அடிக்கடி சீப்பு கொண்டு தலை சீவுவதால் ஸ்கால்பில் சுரக்கும் சீபமும் சீப்பின் வழியாக முடி நுனிவரை பரவும்.

தலையில் ரத்த ஓட்டம் சீராகும்.சுருள் முடிக்காரர்களுக்கு முடி அடர்த்தியாக இருப்பதால் வறட்டுத் தன்மை இருக்காது. எளிதில் முடி சிக்கு பிடிக்கும். நீளமுடி உள்ளவர்களுக்கும் வறட்டுத் தன்மையினால் முடி செம்பட்டை நிறமாகத் தெரியும். அலை அலையான முடி உள்ளவர்களுக்கு தலைமுடி சீவாதது போல எப்போதும் அடங்காமல் இருக்கும்.

வறட்சித் தன்மை நீங்க, அவகடோ பழத்தின்(Butter fruit) சதைப்பகுதியினை தலையில் தடவினால் அது முடிக்கு நல்ல ஈரப்பதத்தைத் தரும். தயிரை தலையில் தடவினாலும் நல்லது. அதேபோல் பியரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு முடியில் அடித்து பிறகு தலைக்கு குளித்தால் அதுவும் முடிக்கால்களுக்கு ஈரத்தன்மையை அளிக்கும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது முடிந்தால் இரண்டு முறை எண்ணெய் குளியல் செய்தால் முடியின் வறட்டுத்தன்மை நீங்கும்.

எத்தனை நாளைக்கு ஒரு முறை முடியை வெட்டி குறைக்கலாம்?
நுனி முடியினை வெட்டுவது முடிக்கு மிகவும் நல்லது. முடி நுனியில் ஏற்படும் பிளவுத் தன்மை குறையும். செடி நீளமாக வளர எப்படி நுனி காம்பினை வெட்டுகிறோமோ, அதே மாதிரி சத்துக் குறைவான நுனி முடிகளை, நீளமுடிக் காரர்கள் இரண்டு மாதத்திற்கொரு முறையும், சுருள் முடி உள்ளவர்கள் மூன்று மாதத்திற்கொரு முறையும் நுனியினை வெட்டி சீராக்கலாம்.

முடியில் ஏற்றும் நிறம் (Hair colouring) நீண்ட நாட்கள் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக தலையில் படக் கூடாது. கருப்பு வண்ண நிறங்களிலான ஷாம்பூவை பயன்படுத்துதல் கூடாது. நல்ல தரமான ஷாம்பூவை கேட்டு வாங்கி வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தினால் போதும். அதிகமாக சூடு உள்ள நீரில் முடியினை சுத்தம் செய்யக் கூடாது. முடி அழகிற்காக ஹேர் ஸ்ப்ரே போன்றவைகளைப் பயன்படுத்தவே கூடாது.

முடியினை ஸ்டிரெய்ட்டெனிங் செய்வது முடிக்கு நன்மையா? கெடுதலா?
கண்டிப்பாக கெடுதலே. இதனால் முடியின் உடையும் தன்மை அதிகமாகும். முடியில் வறட்டுத் தன்மை எளிதில் உருவாகும். ஸ்டிரெய்ட்டெனிங் செய்ய அதிகமான கெமிக்கல் தயாரிப்பு பொருட்களை முடியில் செலுத்துவதால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு நிறைய உள்ளது. முடி கொட்டுதலும் அதிகம் ஏற்படும். ஸ்டிரெய்ட்டெனிங் செய்தே ஆக வேண்டும் என்றால் அதற்கான முறையான பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணரை அணுகுவதே சிறந்தது.

வெள்ளை முடியை தலையிலிருந்து நீக்குவதால் அருகில் நிறைய வெள்ளை முடி தோன்றும் என்ற தகவல் உண்மையா?
இது முற்றிலும் தவறான கருத்து. வலுக்கட்டாயமாக பறித்தால் முடியின் அமைப்பான ஃபாலிக்கல் பாதிப்படையும். சுற்றி இருக்கும் முடியையும் பாதிப்படைய வைக்கும் அவ்வளவே. அருகில் இருக்கும் முடி வெள்ளையாகும் என்பது ஒரு மாயை.

இனி வரும் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…
தலைமுடியில் பொடுகுத் தொல்லை ஏன்வருகிறது?
பொடுகு வந்தால் எப்படி சரி செய்வது?
தலையில் பொடுகு அதிகமானால் விளைவு என்ன?
யார் யாருக்கு பொடுகுத் தொல்லை அதிகமாக வரும்?
பதில்கள் அடுத்த இதழில்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல…!!
Next post ஸ்ரீதேவி கடைசியாக நடித்த விளம்பர படம்! (வீடியோ)