பிரதமர் மோடி கருத்து திரிபுராவில் பெற்றது சாதாரண வெற்றியல்ல!!
3 மாநில தேர்தலில் பாஜ வெற்றிபெற்றதை தொடர்ந்து டெல்லியில் உள்ள புதிய பாஜ தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜவின் தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் பிரதமர் மோடி கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுலை குற்றம்சாட்டும் விதமாக, `சிலர் பதவியில் உயர்ந்துள்ளனர். ஆனால் அவர்களது நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என தெரிவித்தார். தொடர்ந்து மோடி பேசியதாவது: பாஜ தலைவர் அமித்ஷா பல மாநிலங்களில் தேர்தல் வெற்றி மூலம் வளர்ச்சி அடைந்துள்ளார். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல், குழப்பம் மற்றும் பீதியை பரப்பின. அதற்கு மக்கள் ஓட்டு மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னெப்போதையும் விட தற்போது மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. வடகிழக்கு மாநில மக்கள் ஒடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை பாஜவின் கடுமையான முயற்சியால் அதில் இருந்து விடுதலை பெற செய்துள்ளோம். இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக இந்த மாநிலங்களில் இரவு பகல் பாராது மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு அவர்களது பிரச்னையை தீர்த்து வைத்தனர். இவ்வாறு மோடி பேசினார். முன்னதாக, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ பெற்ற வெற்றி சாதாரணமான ஒன்றல்ல. பூஜ்யத்தில் இருந்து உச்சத்தை தொட்ட வெற்றி. இந்த மகத்தான வெற்றிக்கு பாஜ.வின் நிலையான வளர்ச்சி கொள்கையே காரணம். இதற்காக கடுமையாக உழைத்த பாஜ நிர்வாகிகளுக்கு தலை வணங்குகிறேன். பொதுமக்கள் எதிர்மறையான, சீர்குலைக்கும் அரசியலை எந்த சூழ்நிலையிலும் விரும்பவில்லை. திரிபுராவில் முரட்டு படையின் ஆதிக்கம், மிரட்டலையும் மீறி ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. எனவே, திரிபுராவில் தகுதியான ஆட்சியை வழங்குவோம்’ என்று கூறியுள்ளார்.