இலங்கைக்கு மற்றுமொரு ‘முரளிதரனாக’ அஜந்த மெண்டிஸ்?
ஆசியக் கிண்ணக் கிரிக்கட்டின் இறுதியாட்டத்தில் இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர்களை திக்குமுக்காடச் செய்து 6 விக்கட்டுக்களைக் கைப்பற்றி, இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவிருந்து இளம் சுழற்பந்து வீச்சாளரான அஜந்த மெண்டிஸ், இலங்கை அணிக்கு கிடைத்த மற்றுமொரு முரளிதரனானக் விமர்சகர்களால் கூறப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியில் முத்தையா முரளிதரனுக்கு பின்னர் சுழற்பந்து வீச்சுத்துறையில் சொல்லிக்கொள்ளும் படியாக யாரும் சாதிக்கவில்லை. குமார் தர்மசேன, உப்புல் சந்தான, மலிங்க பண்டார போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கைக்காக விளையாடியுள்ள போதிலும், அவர்களினால் தொடர்ந்தும் திறமைகளை வெளிக்காட்ட முடியவில்லை. இந்த நிலையிலேயே, புறச்சுழற்பந்து வீச்சாளரான 23 வயதுடைய அஜந்த மெண்டிஸ் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளுக்காக முரளிதரனுக்கு ஓய்வு வழங்கப்பட்டு இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இந்த தொடரின் போது இரண்டு போட்டிகளில் ஆடிய மெண்டிஸ் ஓரளவு திறமைகளை வெளிப்படுத்தினார். ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியில் இரண்டாவது சழற்பந்து வீச்சாளராக இணைத்துக்கொள்ளப்பட்ட அஜந்த மெண்டிஸ், போட்டித் தொடரில் தான் விளையாடிய 5 போட்டிகளில் 17 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். இந்தத் தொடரின் ஆட்டநாயகன் விருததையும், இரண்டு போட்டி சிறப்பாட்டக்காரர் விருதையும் இவர் பெற்றுள்ளார். இவரின் பந்து வீச்சு முறமை எதிரணி வீரர்களுக்கு சிக்கலாக விளங்குகின்றது.
ஆசியக் கிண்ண இறுதியாட்டத்தில் இந்திய அணியை சிதறடித்த அஜந்த மெண்டிஸ், இலங்கை அணியில் முரளிதரனுக்கு அடுத்த நிலையில் சுழற்பந்து வீச்சில் சாதிக்க முடியமென்று முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும், எதிர்காலத்திலும் இவ்வாறான சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாலே அவரின் இருப்பு, அணியில் நிரந்தரமாகும். பார்க்கலாம் மற்றுமொரு முரளிதரன் கிடைத்துள்ளாரா என்று?