அமைதி பேச்சுவார்த்தைக்கு முயற்சி தென்கொரிய குழு வடகொரியா சென்றது!!
வடகொரியா – அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவதற்காக தென்கொரிய பிரதிநிதிகள் குழு நேற்று இரண்டு நாள் பயணமாக வடகொரியா சென்றது. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வடகொரியாவிற்கு ஐ.நாவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், தென்கொரியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜங் யுன் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, தென்கொரியாவில் கடந்த மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரிய வீரர்கள் கலந்து கொண்டனர். வடகொரியா சார்பில் கிம் ஜங் யுன்னின் சகோதரி கிம் யோ ஜங் கலந்து கொண்டார்.
இவரது பயணம் வடகொரியா – தென்கொரிய இடையே புதிய புரிதலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு வடகொரியா வரும்படி கிம் யோ ஜங் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அமெரிக்கா – வடகொரியா இடையே அமைதி பேச்சுவார்த்தையை நடத்த வலியுறுத்தும் வகையில், தென்கொரியாவை சேர்ந்த 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இரண்டு நாள் பயணமாக நேற்று வடகொரியா சென்றது.
இந்த குழுவுக்கு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய் யங் தலைமை வகித்துள்ளார். மேலும், உளவுப்பிரிவு தலைவர் சூ ஹூன்னும் சென்றுள்ளார். வடகொரியா சென்றுள்ள தென்கொரியா குழு இன்று நாடு திரும்புகிறது. பின்னர், நாளை அமெரிக்கா செல்கிறது. அப்போது, வடகொரியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரத்தை அமெரிக்க பிரதிநிதிகளிடம் விளக்க உள்ளது.