மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபிஸ் சயீத் கட்சியை பதிவு செய்ய உத்தரவு!!
மும்பை தாக்குதல் குற்றாவளி ஹபிஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக்கை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபிஸ் சயீத். இவர் ஐநா மற்றும் அமெரிக்காவால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இவர் பாகிஸ்தான் அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ‘மில்லி முஸ்லிம் லீக்’ என்ற அமைப்பை தொடங்கினார்.
இதன்மூலம், அடுத்தாண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளர். எனவே, இந்த அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். ஆனால், கடந்தாண்டு அக்டோபர் 11ம் தேதி தேர்தல் ஆணையம் இதை நிராகரித்தது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் சயீத் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை நீதிபதி ஆமர் பரூக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மில்லி முஸ்லிம் லீக்கை கட்சியாக பதிவு செய்வதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மில்லி முஸ்லிம் லீக்கை அரசியல் கட்சியாக பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.