By 15 March 2018 0 Comments

அழகே… என் ஆரோக்கியமே(மருத்துவம் )..!!

2 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் சருமப் பிரச்னைகள் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அதன்பிறகு, குழந்தைகள் மெதுவாக வளர்ந்து வளர் இளம்பருவத்தை அடையும்போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும் தெரிந்து கொள்வோம்…

வளர் இளம்பருவத்தை அடையும்போது ஆண் பிள்ளைகளுக்குக் குரலின் தன்மை மாறும். அக்குள் மற்றும் பிறப்புறுப்பின் அருகே முடி முளைக்கும். இருபாலரின் அக்குள், ஆசன வாய் மற்றும் பிறப்புறுப்பின் அருகே Apocrine gland என்ற ஒரு சுரப்பி உள்ளது. விலங்குகளில் இந்த சுரப்பி எதிர்பாலினத்தை ஈர்க்க ஒருவித திரவத்தை சுரக்கும்.

ஆனால், மனிதர்களில் இந்த திரவம் எந்தவித மணமும் இல்லாமல் சுரந்தாலும் அங்கேயிருக்கும் பாக்டீரியாக்கள் அதன் சருமத்தின் மேல் செயல்புரிந்து ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இது வளர் இளம்பருவத்தினரை ஒருவித தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும்.

இந்த Apocrine gland சுரப்பிதான் காதில் Ceruminous gland ஆக மாறி மெழுகாக சுரந்து காது சவ்வைப் பாதுகாக்கிறது. பெண்களில் Mammary gland ஆக மார்பில் பாலை சுரக்கச் செய்து குழந்தைகளையும் காக்கிறது. Ciliary gland-ஆக கண் இமையில் இருந்து கண்கள் நகரும்போது Lubricant-ஆக வேலைசெய்கிறது.

வளர் இளம்பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாறுதல் மார்பு வளர்ச்சி, பிறப்புறுப்பு வளர்ச்சி, அக்குள் மற்றும் பிறப்புறுப்பின் அருகே முடி முளைத்தல் அதன் பின் பூப்பெய்தல் போன்ற நிகழ்வுக்கும் இதுவே காரணம். அக்குளில் முடி முளைப்பது மற்றும் வியர்வை துர்நாற்றம் அடிப்பது என்பது இரு பாலினருக்கும் பொதுவான பிரச்னை.

சிலர் அக்குளில் முடி வளர்ந்தவுடன் சரியாக சுத்தம் செய்யாமல் விட்டு விடுவார்கள். அப்படி விட்டுவிட்டால் அக்குளில் உள்ள முடியில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம். அதை Trichomycosis axillaris என்போம். அதேபோல் பிறப்புறுப்பின் அருகே(Pubic area) உள்ள முடியில் தொற்று ஏற்பட்டால் அதற்கு Trichomycosis pubis என்று பெயர். இதை ஏற்படுத்துவது Corynebacterium tenuis என்ற பாக்டீரியா. பல வைத்தியங்கள் இதற்கு இருந்தாலும் பாதிக்கப்பட்ட முடியை நீக்குவது இதற்கான எளிய வைத்தியம்.

அக்குளில் துர்நாற்றம் ஏற்படுத்துவதை Bromhidrosis என்று அழைப்பர். இரு வேளை குளிப்பது, அக்குளில் உள்ள முடியை நீக்கி விடுவது மற்றும் வேர்வை படிந்த ஆடையை உடனே மாற்றி விடுவது போன்ற செயல்களால் வியர்வை துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம். தரமான டியோடரண்டை பயன்படுத்துவதும் நல்ல வழி.

பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடையும்போது சில சிறார்கள் விதைப்பையை(Scrotum) சுத்தம் செய்யாமல் விட்டு விடுவார்கள். இயற்கையிலேயே விதைகளைக் குளிர்வாக வைத்துக் கொள்ள விதைப்பையில் தோல் சுருக்கம் சுருக்கமாக இருக்கும். சரியாக குளிக்காத பட்சத்தில் அந்த சுருக்கங்களில் அழுக்கு எளிதாக சேர்ந்துவிடும்.

இதனை Dermatitis neglecta என்று அழைப்பர். ஆண் குறியில் முன் தோலை பின் தள்ளி சாதாரண குளிர்ந்த நீரினால் தினமும் சுத்தம் செய்வதும் அவசியம். அவ்வாறு சுத்தம் செய்யாவிடில் Balanoposthitis என்ற சருமப் பிரச்னை ஏற்படலாம். பெண்களுக்கு பூப்பெய்துவதற்கு முன்பே அவர்களுக்கு அதனைப் பற்றி சொல்லி பூப்பெய்தலை கண்டு பயப்படாமல் இருக்க சொல்லித் தரவும் தயார் படுத்தவும் வேண்டும். உள்ளாடைகள் எப்பொழுதும் பருத்தியிலேயே அணிவது அவசியம்.

நாப்கின்களில் பல வகை உள்ளதால் அவர்கள் சொரசொரப்பு இல்லாத மேல்பாகம் உறுத்தாத மெலிதான பருத்தியைக் கொண்டு செய்யப்பட்ட நாப்கின்களை உபயோகப்படுத்த வேண்டும். நாப்கின்களை 4-5 மணி நேரத்துக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டியதின் அவசியத்தையும் அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். சொரசொரப்பான மேல் உறையுடைய நாப்கின்களை அணிந்தால் எரிச்சல் ஏற்படலாம்.

அரிப்பு உண்டாகலாம் அல்லது Intertrigo என்றழைக்கப்படும் இரு தோல்கள் உராயும்போது ஏற்படும் கிருமி தொற்று பொதுவாக Candida என்னும் பூஞ்சையினால் ஏற்படலாம். சில வகை நைலான் மெட்டீரியலால் செய்யப்பட்ட நாப்கின்களால் ஒவ்வாமை ஏற்படலாம். இதனை Allergic contact dermatitis என்று அழைப்பர்.

பொடுகும் இந்த வயதில்தான் ஆரம்பிக்கும். எண்ணெய் சுரப்பிகள் தலையில் நன்கு வேலை செய்ய ஆரம்பிப்பதால் தலைமுடிகளில் பிசுபிசுப்பு ஏற்படலாம். அதிக வெயில் கொண்ட நம் ஊரின் தட்பவெப்பநிலைக்கும் வெயிலுக்கும், வேர்வைக்கும் தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. ஆனால், ஷாம்பூவை அதிக நேரம் தலையில் வைக்கக் கூடாது.

ஈரத்தோடு கூந்தலை வேக வேகமாக சீவினால் முடியில் பிளவு ஏற்படலாம். எனவே, பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளால் தினமும் தலைக்கு குளிக்க முடியாவிடில் வாரம் 2-3 முறைகளாவது தலைக்கு குளிப்பது முக்கியம். தலைக்குக் குளித்த பின் சாதாரண ஃபேன் காற்றில் கூந்தலை காய வைக்க வேண்டும்.

சிலர் Sinusitis பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு தலை அடிக்கடி குளித்தால் ஏற்றுக் கொள்ளாது. அவர்கள் வேண்டுமானால் டிரையர் உபயோகிக்கலாம். ஆனால், அந்த டிரையரில் குளிர்ந்த காற்று வரக்கூடிய வசதி உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். சூடான காற்று வரக்கூடிய டிரையரை அடிக்கடி உபயோகித்தால் கூந்தல் வீணாகி விடும்.

மேற்கூறிய சருமப் பிரச்னைகள் அனைத்தும் சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடியவை என்றாலும், மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானதும், பருவ காலத்தில் மிகவும் தொல்லை கொடுக்கக்கூடியதுமான சரும நோய்தான் பரு. அதைப்பற்றி அடுத்த இதழில் தெரிந்து கொள்வோம்.Post a Comment

Protected by WP Anti Spam