அல்கொய்தா இயக்க தலைவன் பின்லேடனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒபாமா கருத்து
அல்கொய்தா தலைவன் பின்லேடனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்தார். பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 2001, செப்டம்பர் 11-ல் பயணிகள் விமானங்களை கடத்தி அமெரிக்காவில் தாக்குதல் நடத்தினர். நிïயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரங்களை தகர்த்ததுடன், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனிலும் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பின்லேடனை பிடிக்க ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. ஆனால் பின்லேடனை இன்னும் பிடித்தபாடில்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளவராக கருதப்படும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பின்லேடன் உயிருடன் பிடிபட்டால், அவனை அமெரிக்கா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகத்தின் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். பொதுவாக மரண தண்டனையை நான் ஆதரிப்பதில்லை. கடுமையான குற்றச்செயல்கள் புரிந்தவர்களுக்கு மட்டுமே அந்த தண்டனை வழங்க வேண்டும். ஆனால் பின்லேடனும், அவனது ஆட்களும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்று குவித்து உள்ளனர். இதனால் அவனுக்கு மரண தண்டனை வழங்குவது நியாயமானதே. இதற்கு முதலில் அவனை உயிருடன் பிடிக்க வேண்டும்.
ஒடுக்க தவறி விட்டோம்
கடந்த 5 ஆண்டுகளில் ஈராக் பிரச்சினை காரணமாக அல்-கொய்தாவை ஒடுக்க தவறி விட்டோம். இப்போது ஆப்கானில் அதன் விளைவுகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். ஆப்கான் அதிபர் கர்சாய், அந்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறி விட்டார். எனவே அங்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது. தலீபான்களும், அல்-கொய்தாவினரும் மீண்டும் பலம் பெற அனுமதித்து வருகிறோம். இது பெரிய தவறாகும். நான் அதிபரானால், இந்த தவறுகள் சரி செய்யப்படும். இவ்வாறு ஒபாமா பேட்டியில் கூறி உள்ளார்.