பாலியல் பலாத்காரம் – பல்கலைக்கழக பேராசிரியர் மீது குற்றச்சாட்டு!
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் மீது மாணவியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக வசந்த் கஞ்ச் பொலிஸ் நிலையத்தில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பேராசிரியர் மீது விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு பேராசிரியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ´மாணவிகள் என் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர். நான் அவர்கள் வகுப்பிற்கு வராமல் இருப்பது குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். அதனால் என் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர்´ என கூறினார்.
இந்நிலையில், இன்று ஏராளமான வாழ்க்கை அறிவியல் கல்வித்துறை மாணவர்கள் கல்லூரி டீன் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். விசாரணையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இது குறித்து டீனிடம் கடிதம் கொடுத்தனர்.
அக்கடிதத்தில், பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக அனைத்து அலுவலக பணியிலிருந்தும் அவரை சஸ்பெண்ட் செய்வது குறித்து துணை வேந்தர் மற்றும் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.