By 23 March 2018 0 Comments

நெய் நிஜமாகவே ஆபத்தானதா(மருத்துவம்)?!

அலசல்

நெய் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும், உடலில் கொழுப்பு அதிகரிக்கும், அஜீரணம் ஏற்படும், ஜீரணமாக காலதாமதம் ஆகும் என்று இக்கால இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மூலமாக நெய் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இது உண்மையா? இதற்கு காரணம் என்ன? இதற்கு ஓரு சரியான தீர்வு சொல்லும்படி ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்…

‘‘அடுக்கடுக்காக இப்படி நெய் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கான காரணங்களை தெரிந்துகொள்ளும் முன்னர், அதன் மருத்துவ சிறப்புகளை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். எத்தனை வகை எண்ணெய் வஸ்துக்கள் இருந்தாலும் அவற்றில் மிகச் சிறந்தது பசு நெய்யே. அச்சு வெல்லம், கருப்பட்டி போன்றவையே அதிக இனிப்புச் சுவையுடையது சர்க்கரை என்று நாம் நினைக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும்விட இவ்வுலகிலேயே மிகச் சிறந்த இனிப்புச் சுவையுடையது பசு நெய்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு மருத்துவ சிறப்புகளை உடைய நெய் என்று குறிப்பிடுவது இந்த பசு நெய்யைத்தான். பசு நெய் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அப்பொருளின் சுவை மற்றும் செயல்படும் திறனை அதிகரிக்கும் தன்மையுடையது. கொடுக்கப்படுகிற உணவு அல்லது மருந்தினை நெய்யுடன் கலந்து கொடுக்கும்போது, அது மிக விரைவாக மூளையைச் சென்றடைகிறது. இதன் மூலம் சிந்தனைத்திறன், புத்திக்கூர்மை, ஞாபகசக்தி போன்றவற்றை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது உடலில் வனப்பை உண்டாக்குகிறது.

உடல் பித்தத்தைக் குறைப்பதற்கு இந்த உலகில் உள்ள மிகச் சிறந்த பொருள் பசு நெய்தான். காலை, மதியம், மாலை மற்றும் இரவு போன்ற நேரங்களில் மதிய நேரமே உடலில் பித்தம் அதிகரித்து இருக்கும் என்பதால், மதிய உணவில் முறையாக தயாரிக்கப்பட்ட பசு நெய்யை சேர்த்துக்கொள்வது நல்லது. அது நஞ்சை முறிக்க, கண் பார்வைத்திறன் அதிகரிக்க பெரிதும் உதவுவதோடு விந்தணுக்கள் அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இப்படி பல்வேறு மருத்துவ சிறப்புகளை உடைய நெய் மீது குற்றம் சுமத்தப்படுவதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்வோம்.

குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவருக்கும் உகந்த பசு நெய்யை கீழ்க்கண்ட முறையில் தயாரித்தால்தான் மேற்கண்ட பலன்களை நாம் பெற முடியும். பசு மாட்டுக்கு இயற்கைமுறை உணவுகளான புல், தாவரங்கள், மரங்களின் இலைதழைகள் மற்றும் புண்ணாக்கு, வைக்கோல், கஞ்சி போன்றவற்றையே கொடுக்க வேண்டும். இதுபோன்ற நம் பாரம்பரிய முறையில் வளர்கிற பசுவிடமிருந்து கிடைத்த பாலை தயிராக மாற்ற வேண்டும்.

தயிர் சரியான பக்குவம் அடைந்தவுடன் அதை முறையாகக் கடைந்து, அதிலிருந்து வெண்ணெய் எடுத்த பின்பு அந்த வெண்ணெயை உருக்கி நெய்யாக்க வேண்டும். இப்படி தயாரிக்கப்பட்ட பசு நெய்யின் சுவை, நிறம், திடம் மற்றும் பயன்படுத்தப்படும் அளவு போன்ற எந்த காரணத்திற்காகவும் அதில் எவ்வித மாறுதல்களையும் செய்யக்கூடாது. அதுவே சுத்தமான நெய்யாகவும் இருக்கும்.

கலப்பின பசுக்களிடமிருந்து கிடைத்த பால் அல்லது மாட்டுக்கு முறையான உணவுப் பொருட்கள் கொடுக்காமல் கிடைத்த பாலில் பல்வேறு வேதிப் பொருட்கள் கலந்து, அது தயிர்தானா என்கிற அளவுக்கு தயிராக்கி அதிலிருந்து தயார் செய்யப்படுகிற நெய் சுத்தமானதாகவும், மேலே சொன்ன உடல் ஆரோக்கிய நலன்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வாய்ப்பே இல்லை’’ என்றவரிடம் நெய்யை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டோம்…
‘‘நெய் பயன்படுத்தும்போது உணவு சூடாக இருக்க வேண்டும். காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் நெய் பயன்படுத்துதல் சரியானதல்ல. ஆனால், நாம் காலையில் நெய் கலந்த பொங்கல், தோசை என்றும் மாலை நெய் சார்ந்த இனிப்பு, பலகாரம் என்றும் இரவில் நெய் ரோஸ்ட் என்றும் சாப்பிடுகிறோம்.

இவை எல்லாம் முற்றிலும் தவறான உணவுப் பழக்கவழக்க முறை என்பதை நாம் புரிந்து கொள்வதோடு, சரியான உணவுப் பழக்கவழக்க முறைகளை அறிந்து, அதை பின்பற்றுவதே நமது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. நெய்யை அதிகமாக விரும்பி சாப்பிடுவோர்க்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். இதனால் ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்கள் அதை தவிர்க்க வேண்டும். பசு நெய்யை தகுதியானவர்கள், தகுதியான நேரத்தில், சரியான முறையில் எடுத்துக் கொண்டால் உடல்பருமன் ஏற்படாது. உடலில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

அதனால், பாரம்பரிய உணவுகள் மேல் குற்றம் சொல்லாதீர்கள்.அவை யாவும் என்றைக்கும் நம் உடலுக்கு நன்மை அளிப்பவையே. நெய் உற்பத்தி செய்வது, அவரவர் உடல்நிலை அறிந்து உண்பது, எந்தெந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களிலும் தவறு செய்வது நாம்தான். இப்படி அதை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் பல்வேறு முரண்பாடுகள் நம்மிடையே நிலவி வருகிறது.

முள்ளின் மீது நாம்போய் மிதித்துவிட்டு, முள் குத்திவிட்டது என்று அதன் மீது குற்றம் சுமத்திப் பேசுவது போலவே, தற்போது நெய்யின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை சரியான முறையில் தயாரித்து, சரியாக பயன்படுத்தாத நம் மேல்தான் தவறு. நெய்யின் மேல் எந்தத் தவறும் இல்லை’’ என்கிறார் மருத்துவர் பாலமுருகன்.

நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அதன் பயன்கள் பற்றிய முக்கியமான 10 தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி.

1. நெய்யில் Medium Chain Fatty Acid அதிகம் உள்ளது. இதை நம் உடலிலுள்ள ஈரல் நேரடியாக எடுத்துக்கொண்டு நமக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால் அதிக ஆற்றல் தேவைப்படும் விளையாட்டு வீரர்களுக்கு இது மிகவும் உகந்தது.

2.இதில் நீரில் கரையும் வைட்டமின்களான A மற்றும் E உள்ளது. வைட்டமின் A கண்களுக்கு இன்றியமையாதது. வைட்டமின் E உடலிலுள்ள இனப்பெருக்க மண்டலம் நன்றாக செயல்பட உதவுகிறது.

3.இதில் வைட்டமின் K 2 மற்றும் Conjugated Linoleic Acid (CLA) என்கிற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. புல் மட்டுமே சாப்பிடும் மாட்டினுடைய பாலில் இச்சத்து அதிகம் உள்ளது. இது அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியது.

4.நெய் உடலில் பசியைத் தூண்டுகிறது.

5.இதிலுள்ள Butyric Acid உடல் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

6.இது குடலில் ஏற்படக்கூடிய புண்கள், வீக்கம் மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.

7.இதில் உள்ள Omega 3 Fatty acid, Omega 6 Fatty acid போன்றவை தாயின் கருவிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

8.சில குழந்தைகளுக்கு Lactose intolerance அல்லது Casein intolerance பிரச்னை இருக்கும். இப்பிரச்னையுடைய குழந்தையின் உடல் இச்சத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும். இதனால் அவர்களால் பால் சாப்பிட முடியாது. ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு நெய் சாப்பிட கொடுக்கலாம்.

9.மற்ற எண்ணெய் வகைகளை சூடாக்கும்போது அதிக வெப்பநிலையில் அதன் தன்மை மாறி உடல்நலனுக்கு ஒவ்வாததாக மாறுகிறது. ஆனால் நெய்யை 250 டிகிரி செல்சியஸ் அல்லது 482 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் சூடாக்கினாலும் அதன் தன்மையும் மாறாது, கெட்டும் போகாது.

10.நெய்யை எந்தவித குளிர்பதன பெட்டிகளிலும் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. அதை எல்லா விதமான வெளிப்புற வெப்பநிலையிலும், சாதாரணமாக ஒரு டப்பா அல்லது பாத்திரத்தில் பாதுகாத்துவைத்து ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தவும் முடியும், அதன் பயன்களையும் முழுமையாகப் பெற முடியும்.

– க.கதிரவன்
படங்கள்: ஆர்.கோபால் | மாடல்: பூஜாPost a Comment

Protected by WP Anti Spam