வீரப்பன் கதையை படமாக்கினால் வழக்கு தொடருவேன் மனைவி முத்துலட்சுமி ஆவேசம்

Read Time:5 Minute, 31 Second

Veerappan.Family.jpgஎன் அனுமதியில்லாமல் வீரப்பனின் கதையை படமாக்கினால் வழக்குதொடருவேன் என்று அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். சினிமாதுறையில் கற்பனை கதைகள், அரசியல் தலைவர்களின் உண்மைக்கதைகள் ஆகியவற்றை படமாக எடுப்பது உண்டு. சில சமயங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியவர்கள் பற்றியும் படமாக எடுப்பார்கள்.

அப்படி சிலர் சந்தனகடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே வீரப்பனின் வாழ்க்கையை படமாக எடுக்கக்கூடாது என்று அவனுடைய மனைவி முத்துலட்சுமி போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

இது குறித்து முத்துலட்சுமி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

படமாக்குகிறார்கள்

தமிழகத்தில் பெரிசு படத்தில் நடித்த மது என்பவர் வீரப்பன் கதையை, `வதம்’ என்ற பெயரில் படமாக எடுக்கப்போவதாக செய்தி வெளிவந்துள்ளது. அதேபோல கன்னடத்தில் சயனைடு என்ற படத்தை இயக்கிய ரமேஷ் மற்றும் இந்தியில் டைரக்டர் ராம்கோபால் ஆகியோரும் வீரப்பன் கதையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். ரமேஷ் என்பவர் கதை தொடர்பாக 2 போலீஸ் அதிகாரிகளை பார்த்து பேசியதாகவும் தெரியவந்துள்ளது.

வக்கீல் நோட்டீசு

அவர்கள் 3 பேருக்கும் திங்கட்கிழமை வக்கீல் நோட்டீஸ் அனுப்ப இருக்கிறேன். அதே நேரம் வீரப்பன் கதையை படமாக எடுக்கக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரவும் உள்ளேன். படம் எடுக்க தடைவிதிக்க உத்தரவு பெற முயற்சி எடுப்பேன். அப்படி படம் எடுப்பவர்கள் எங்களிடம் கேட்டு அனுமதி பெற்றுத்தான் எடுக்க வேண்டும்.

வீரப்பன் கொலையில் போலீசார் நடத்திய நாடகம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது. வீரப்பனுடன் நான் 3 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து இருக்கிறேன். அவருடன் வாழ்ந்து 2 குழந்தைகளை பெற்று இருக்கிறேன்.

எச்சரிக்கிறேன்

எனவே வீரப்பனின் கதையை எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வெளியிட விடமாட்டோம். வீரப்பன் கதையை படமாக்க நினைப்பவர்கள் அதை மறந்துவிட வேண்டும். அப்படி படமாக்கினால் என் வாழ்க்கையும், என் குழந்தைகள் வாழ்க்கையும் பாதிக்கும். ஆகவே வீரப்பன் கதையை படமாக்க நினைப்பவர்கள் இன்றோடு அதை மறந்துவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

வீரப்பன் கதை சாதாரண கதைஅல்ல. அதனை 3 படமாக தயாரிக்கும் அளவிற்கு கதை உள்ளது. சரியான நேரத்தில் சரியான வாய்ப்பு வரும்போது யாரும் புண்படாத வகையில் படம் வெளிவர வேண்டும். தற்பொழுது படம் வெளிவருவதை நாங்கள் விரும்பவில்லை. நான் என்குழந்தைகள் இருக்கும்வரை, வீரப்பன் பற்றிய புத்தகம், கேசட் என எதுவும் வெளியிட உரிமை இல்லை. அப்படி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.

சுப்ரீம் கோர்ட்டுக்கு

வீரப்பன் சயனைடு கொடுத்துத்தான் கொல்லப்பட்டார் என்ற வீடியோ ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு இருந்தேன். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. எனவே சுப்ரீம் கோர்ட்டை நாட இருக்கிறேன்.

வீரப்பன் 2000-ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு ஒரு கேசட் அனுப்பிவைத்தார். அந்த கேசட்டில் நான் சரண்டராகி விடுகிறேன் என்று கேட்டு இருந்தார். அந்த கேசட் இதுவரை வெளிவரவில்லை. வீரப்பன் திருந்தி நல்லவராக வாழ விரும்பினார்.

தேர்தலில் போட்டியில்லை

நான் தற்பொழுது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பலமுறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி கிடைக்க வழி செய்யவேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளேன். 15 ஆண்டுகள் போலீஸ் சித்ரவதையில் இருந்து தற்பொழுது தான் படிப்படியாக வெளியே வந்து கொண்டு இருக்கிறோம். நான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடமாட்டேன். இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

Veerappan.Wife.jpgVeerappan.Family.jpgVeerappan.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கப்பலில் பயணம் செய்ய வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்