சர்வதேசத்தை நாடும் முஸ்லிம்கள்(கட்டுரை )!!

Read Time:19 Minute, 1 Second

இது, இனவாதத்தை வன்முறையாக வெளிப்படுத்திய புயல். இப்போது சற்று அமைதி ஏற்பட்டது போன்ற, தோற்றப்பாடு காணப்படுகின்றது.

இது நிரந்தர அமைதியா அல்லது இரண்டு புயல்களுக்கு இடையிலான மயான அமைதியா என்பதைத்தான், இலங்கைவாழ் சிறுபான்மையினரால் குறிப்பாக, முஸ்லிம்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.

அம்பாறையில் தொடங்கி, கண்டியில் மையம் கொண்டிருந்த இனவன்முறைகள், முஸ்லிம்களுக்கு பில்லியன் கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதைவிடப் பெறுமதியான, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் முஸ்லிம்களின் நம்பிக்கையையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி இருக்கின்றது. அப்படிப் பார்த்தால், இவைதான், இந்த வன்முறையைத் திட்டமிட்டவர்களின் நோக்கங்களாக இருந்திருக்க வேண்டும். அல்லது, பல்வேறு நோக்கங்களைக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து, இந்த வன்முறையை வழிநடாத்தியிருக்க வேண்டும் என்ற அனுமானத்துக்கே வர வேண்டியிருக்கின்றது.

அம்பாறையிலும் கண்டி மற்றும் அதையண்டிய சுமார் 20 கிராமங்களிலும் நடாத்தப்பட்ட தாக்குதல்கள், மிலேச்சத்தனமானவையாக இருந்தன. காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை சி.சி.டி.வி. காட்சிகள் ஊடாகப் புலனாகின்றன.

குறிப்பாக, இந்தத் தாக்குதலில் முஸ்லிம்களின் உயிர்கள் நேடியாக இலக்குவைக்கப்படவில்லை. ஆனால் சொத்துகள், வர்த்தகங்கள், பொருளாதாரம், மத அடையாளங்கள், இருப்பு என்பனவெல்லாம் முற்றுமுழுதாக இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

இந்தச் சம்பவங்களின் முன்னணி – பின்னணிகளை நோக்குகின்ற போது, பல சந்தேகங்கள் எழுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், ஒரு சிங்களச் சகோதரின் மரணத்தால் மட்டும் நிகழ்ந்ததல்ல என்பதையும், அதற்குப் பின்னால், பெரும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அரசாங்கமே இப்போது ஏற்றுக் கொள்கின்றது.

எனவே, மேற்சொன்ன பல நோக்கங்களைக் கொண்டவர்களை, பிராந்தியத்தில் இயங்கும் இரண்டு அல்லது மூன்று முஸ்லிம், இஸ்லாமிய விரோதக் கடும்போக்குச் சக்திகள் ஆட்டுவித்திருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம், முஸ்லிம் ஆய்வாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான உலக ஒழுங்கையும் ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டு வருகின்ற, வலிந்து இனவாதத்தைத் திணிக்கும் பாங்கிலான பின்புலங்களையும் அறிந்தவர்கள், இதைப் பற்றி இலகுவாக விளங்கிக் கொள்வார்கள்.

இலங்கை முஸ்லிம்கள், சுயவிசாரணை செய்ய வேண்டிய தேவையும் இருக்கின்றது. அவர்கள், சில விடயங்களில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன், பல்லின சமூகம் கொண்ட நாட்டில், எப்படி வாழ்வது என்ற புரிதலுக்கு வரவேண்டும்.

எந்தெந்த நடவடிக்கைகள், ஏனைய மக்களால் – முஸ்லிம் அடிப்படைவாதமாக, இனவாதமாகப் பெருப்பித்துக் காண்பிக்கப்படுகின்றன என்பதை, முன்னுணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான உலக அரசியல் என்பது, பல நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டது. எங்கே அமைதி இருக்கின்றதோ, அங்கு கிளர்ச்சியைத் தோற்றுவித்து, யுத்தத்தை நடத்துவது; எங்கே பொருளாதார முன்னேற்றம் இருக்கின்றதோ, அங்கு நோயை, வறுமையை உட்புகுத்தி, நாட்டாமை வேலை பார்ப்பதுதான் உலக ‘பொலிஸ் காரர்களின்’வேலையாக இருந்து கொண்டிருக்கின்றது. இதில் ‘ரிசர்வ் பொலிஸ் காரர்களாக’ சில முஸ்லிம் நாடுகளும் பின்னர் இணைந்துள்ளமை கண்கூடு.

இலங்கையைப் பொறுத்தவரை, முதன்முதலாகப் பெரும் அழிவுகளைத் தந்த இனக்கலவரத்தைச் சந்தித்த சிறுபான்மையினம் முஸ்லிம்களே.

1915ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் கலவரத்துக்குப் பிறகு, 70களில் இடம்பெற்ற கலவரம், 1983 கலவர சூழல், அதன்பிறகு அளுத்கம மற்றும் கின்தொட்டை என்று ஒவ்வொரு காலத்திலும் இன, மத ரீதியான வன்முறைகள், முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன.

கண்டி வன்முறைகளிலும் கூட, முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத உதவிகளைச் செய்த, சில பௌத்த தேரர்கள், சிங்கள மக்கள் போன்றவர்கள் இந்த அழிவுகளுக்கு காரணம் கிடையாது. ஆனால், முஸ்லிம்கள் நடப்பதையெல்லாம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று யாரும் நினைக்கவும் கூடாது.

இல்லாத, ஒரு மலட்டுத்தன்மை மாத்திரைக்காக, அம்பாறை நகரில் பள்ளிவாசல்களும் கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமான மரணம் ஒன்றை, பொய்யாகக் காரணம் காட்டி, கண்டியின் சுற்றுவட்டாரத்தில் இருந்த முஸ்லிம்களின் சொத்துகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் முழுவதுமாகச் சாம்பராக்கப்பட்டிருக்கின்றன.

தாக்குவதற்கு வந்தவர்கள், வெளியூர்களில் இருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்டிருக்கின்றார்கள். பல நாட்களுக்கு முன்னரே, பெற்றோல் குண்டு செய்வது எவ்வாறு என்று அவர்கள் கூகுளில் தேடியிருக்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.

தாக்குவதற்கு வந்தவர்கள், தைரியசாலிகளாகக் காணப்படவில்லை. என்றாலும், தாக்க வரும்போது, பெற்றோல் குண்டுகள், பொல்லுகள், பெற்றோல், எரியூட்டக்கூடிய பொருட்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு வந்திருக்கின்றார்கள்.

பணத்தையும் தேவையான பொருட்களையும் கொள்ளையிட்ட பின்னரே, கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. எனவே, இது நன்கு திட்டமிடப்பட்டு நடந்திருக்கின்றது என்பதில், யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்க, பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பார்த்துக் கொண்டிருக்கவே, பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது மிகவும் மோசமான ஒரு நிலைமையாகும்.

திகண நகரின் ஊடாக, ஊர்வலம் வந்தவர்கள் தாக்குதல் நடத்திய வேளையிலேயே, பாதுகாப்புத் தரப்பினர் உடன் களத்தில் இறங்கி, அவர்களை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். கடைசிக் கட்டத்தில் பயன்படுத்திய துப்பாக்கி சார்ந்த குறைந்தபட்ச அதிகாரத்தை, அப்போதே (ஆரம்பத்தில்) பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை.

அம்பாறையில் நடைபெற்ற சம்பவங்கள் விடயத்தில், ஒருவித மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்த அரசாங்கம், திகண, கண்டி கலவரங்களிலாவது உடனடியாகச் சட்டத்தை நிலைநாட்டியிருக்க வேண்டும்.

அப்படிச் செய்திருந்தால் திகணவில் இருந்து 12 கிலோமீற்றர் பயணித்து, கண்டியைச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கும் வன்முறைகள் பரவலடைந்திருக்க மாட்டாது. அதுமட்டுமன்றி, ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், இந்த வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. எனவே, ‘அதற்காகத்தான் வேண்டுமென்று இதைச் செய்கின்றார்கள்’ என்று அறிக்கை விடத் தெரிந்த அரசாங்கத்துக்கு இதைக் கட்டுப்படுத்துவதற்கு பல நாட்கள் தேவைப்பட்டன.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் இரண்டின் தலைவர்களும், ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டனர். சில கறுப்பு ஆடுகள் ஒழிந்து கொண்டாலும், அநேக முஸ்லிம் அரசியல்வாதிகள் சற்று சமூக அக்கறையுடன் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இந்த அடக்குமுறைக்கு எதிராக, முஸ்லிம்கள் எழுந்து நிற்கவேண்டும் என்ற நிலைப்பாடும், ஒரு தரப்பாரிடையே இருந்தது. இப்படியான ஒரு நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமாச் செய்ய வேண்டுமென, சாதாரண மக்கள் எண்ணினர்.

ஆயினும், எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் பதவியை இராஜினாமாச் செய்யவில்லை. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான தைரியத்தை, முஸ்லிம் அரசியல்வாதிகள் இம்முறை பெற்றிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது, முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் ஐ.நாவின் கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு சென்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்துமாறும், பகிரங்கமாக நடமாடித் திரியும் கலவரக்காரர்களைக் கைது செய்யுமாறும், முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து, பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், கலவரச் சூழல் உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்பதுடன், நன்கு திட்டமிட்ட வகையிலும் பட்டப்பகலிலும் காடையர் கூட்டம், இரண்டு நாட்களுக்கும் மேலாகத் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தது.

எனவே, இதை இப்படியே விட்டுவிட முடியாது என்பதையும் இது மிகவும் பாரதூரமானது என்பதையும் முஸ்லிம் தலைமைகள் விளங்கிக் கொண்டனர். தமது அழுத்தங்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்காத வருத்தமும் அவர்களுக்கு இருந்தது.

இந்தப் பின்னணியிலேயே, ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அநியாயங்கள் குறித்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துர் ரஹ்மான் கருத்துகளை முன்வைத்தார்.

அத்துடன், என்னதான் சமூக வலைத்தளங்களை முடக்கியிருந்தாலும், பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியாது என்பது போல, முஸ்லிம்கள், சிங்கள இனவாதக் குழுவினரால் தாக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி, சர்வதேசத்தின் காதுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அதனால், மனித உரிமைசார் அதிகாரிகள், இதுகுறித்துக் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.

இதற்குச் சமாந்தரமாக, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிப் பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனை, முஸ்லிம் அரசியல்வாதிகள் சந்தித்தது மிகவும் முக்கியமான விடயமாகும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர்களான கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர், இச்சந்திப்பில் கலந்து கொண்டு, நிலைமைகளை எடுத்துக் கூறினர்.

இந்த வன்முறை சம்பவத்தில், ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு, ஐ.சீ.சீ.பி.ஆர் சட்டத்தின் கீழ், அதிகபட்ச தண்டனை வழங்க, ஐ.நா வலியுறுத்த வேண்டும் எனவும், கைது செய்யப்படாமல் தப்பியிருக்கும் வன்முறையாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த, ஐ.நா உதவ வேண்டுமெனவும் இச்சந்திப்பின்போது முஸ்லிம் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், சிறுபான்மை மக்களுக்கும் பொலிஸார், நீதியாகக் கடமைகளை மேற்கொள்ளும் பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும் என்றும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

முஸ்லிம்கள், ஒருபோதும் இந்தளவுக்கு ஐ.நாவிடமோ, வெளிநாடுகளிடமோ இதுகாலவரை உதவி கோரியது கிடையாது. நமது பிரச்சினைகளைத் நாமே பேசித் தீர்க்க வேண்டும்; உள்வீட்டுப் பிரச்சினைகளை வேறெங்கும் கதைத்து, சுமுகத் தீர்வைக் காண்பது கடினம் என்று முஸ்லிம்கள் நம்பியிருந்தனர்.

முஸ்லிம்களின் விவகாரத்தை, சர்வதேசத்தின் கையில் கொடுத்தால் என்ன நடக்குமோ என்ற அச்சமும் இருந்தது. எனவேதான், தமிழர்களைப் போல, முஸ்லிம்கள் சர்வதேசத்தின் உதவியை நாடவில்லை.

ஆனால், சர்வதேசத்தை நாடவைத்த நிலையை, இனவாதிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்த அதிகார வர்க்கமும் ஏற்படுத்தி இருக்கின்றது.

நூற்றுக்கணக்கான வீடுகள், வர்த்தக நிலையங்கள், 24 பள்ளிவாசல்களை இலக்குவைத்துத் தாக்கி, பல பில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய பிறகும், இதற்குப் பின்னால் இருக்கின்ற காரணிகளை ஓரளவுக்கு அறியக் கூடியதாக இருக்கின்ற சூழலிலும், முஸ்லிம்கள் கையைக் கட்டிக் கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. எனவேதான், முஸ்லிம்கள் ஐ.நாவை நாடியுள்ளனர்.

அதுமட்டுமன்றி, இலங்கையில் வன்முறைக்கு இடமளித்தமை சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றது.

ஆனால், இந்தச் சம்பவத்துடன் தொடர்புட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மட்டுமன்றி, அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவும் வேண்டும். அத்துடன் அரசாங்கம், இதற்குப் பின்னால் இருக்கின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சூத்திரதாரிகள் யார் என்பதை, முகத்திரை கிழித்து, சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்குக் காட்ட வேண்டும்.

வயிறுபுடைக்க வளர்ந்திருக்கின்ற இந்த இனவாதத்தை, அரசாங்கம் இனியும் கட்டுப்படுத்தவில்லை என்றால், முஸ்லிம்கள் மேலும் மேலும் சர்வதேசத் தலையீட்டைக் கோர முற்படுகின்றபோது, அரசாங்கத்துக்குச் சர்வதேசத் தலையிடிகள் அதிகரிக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 7 விஷயங்கள்( வீடியோ )!!
Next post ​தெதுரு ஓயாவில் மிதந்து வந்த சடலம் ​!!