உலக சாதனை படைத்தார் மனு பாகர்!!(மகளிர் பக்கம்)
மெக்ஸிகோ நாட்டில் குவாடலஜாரா நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான இளம் வீராங்கனை மனு பாகர் 10 மீட்டருக்கான ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். இவர் தன்னோடு போட்டியிட்ட மெக்ஸிகோவின் அல்ஜண்ட்ரா ஜாவாலாவை 0.4 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்தியாவின் மனு பாகர் கடந்த 2 ஆண்டுகளாகத் தான் துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டு வருகிறார். இந்த இரண்டே ஆண்டுகளில், அண்டர் 18 பிரிவு, ஜூனியர் (அண்டர் 21), சீனியர் என 3 பிரிவுகளிலும் தேசிய அளவில் பல போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்தார்.
இந்த வெற்றி குறித்து பேசிய மனு பாகர், “வருங்காலத்தில் மென்மேலும் பல சாதனைகள் புரிய இந்த தங்கப் பதக்கம் எனக்கு ஊக்கமளிக்கிறது. எனக்கு ஊக்கமளித்த என் குடும்பத்தினர், பயிற்சியாளருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்”, என தெரிவித்தார். இதற்கு முன்பு, இந்தியாவின் ககன் நரங் மற்றும் ராஹி சர்னோபாட் ஆகியோர் இச்சாதனையை புரிந்தனர். இருவருமே தங்களுடைய 23வது வயதில், இத்தகைய உலக சாதனையை புரிந்தனர். இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை படைத்த இளம் வீராங்கனை என்ற பெருமையை மனு பாகர் பெற்றுள்ளார்.