வெப்பாலை!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 33 Second

நாம் சாலை ஓரங்களிலும், காடு, மலைப் பகுதிகளிலும் சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு தாவரம் வெப்பாலை. சுமார் 10 மீட்டர் உயரம் வளரக்கூடியதாகவும், பீன்ஸ் போன்ற காய்களைக் கொத்துக் கொத்தாக பெற்றிருக்கும் மரம் இது. இதன் இலைகள் 8 முதல் 15 செ.மீ நீளத்துக்கு வேப்பிலையைப் போன்ற வடிவ அமைப்பினைப் பெற்றிருக்கும். வெப்பாலையின் பூக்கள் வெண்ணிற நறுமணமுடையதாக மல்லிகைப் பூ போன்ற வடிவில் ஒவ்வொரு கிளையின் முனையிலும் மலரும். மிகுதியான பால் உள்ள மரமான வெப்பாலை மிகுதியான மருத்துவ பலன்களும் கொண்டது என்பதையே இந்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம்.

வெப்பாலை இந்திய மண்ணைத் தாயகமாகக் கொண்டது என்றும் பர்மா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் மிகுதியாகக் காணக்கூடியது, வளரக்கூடியதும் கூட. வெப்பாலையின் இலை, பட்டை, வித்து ஆகியன மருந்தாகிப் பயன் தரவல்லது. இது கசப்புச் சுவையுடையது அல்ல. வெப்பாலையைப் போலவே தோற்றமுடைய வேறு ஒரு மூலிகை உண்டு. அது மிக கசப்புடையது. இதைத் தவறாக வெப்பாலை என்று புரிந்துகொள்ளும் குழப்பம் ஏற்படும். அது உண்மையில் குடசப்பாலை அல்லது குளப்பாலை எனப்படும். இதை நன்கு புரிந்து பயன்படுத்துதல் வேண்டும். Wrightia tinctoria என்னும் தாவரப் பெயரால் வெப்பாலை இனங் காணப்பெறும்.

இது Apocynaceae என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். தந்த நிற மரம் என்று இது ஆங்கில மொழியில் அழைக்கப்பெறும். ஸ்வேதகுடஜா என்பது இதன் வடமொழிப் பெயர். இரும்பாலை, நிலப்பாலை என்றெல்லாம் கூட இதற்குத் தமிழ்ப் பெயர்கள் உண்டு. பாலியல் உணர்வைத் தூண்டக்கூடியது வெப்பாலையின் பட்டை என்பதால் இது காமவர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறது. வெப்பு எனப்படும் உஷ்ண சம்பந்தமான நோய்களைக் கண்டிக்கக் கூடியது என்பதால் இதற்கு வெப்பாலை என்று பெயர் வந்தது. உஷ்ண நோய்களான வயிற்றுக் கழிச்சல், சரும நோய்கள், உடற்சூடு, காய்ச்சல் போன்ற நோய் களைத் தணிக்கும் திறன் கொண்டது வெப்பாலை.

பேதி மற்றும் சீதபேதியை நிறுத்தவல்லது. மூலம் என்னும் ஆசனவாய்ப் பற்றிய நோய்களையும் பல்வேறு சரும நோய்களையும் போக்கி உடலைப் பாதுகாக்கவல்லது. இதன் விதைகளும் ரத்த சீதபேதிகளைத் தணிக்கவல்லது. குருதி ஒழுக்கோ, நீர் ஒழுக்கோ எவ்விதத்தாயினும், உடலை எங்கு பற்றியதாயினும் அதை வற்றச் செய்யும் நன் மருந்தாவது. உடலில் வியர்வையைத் தூண்டி வெப்பத்தை தணித்து காய்ச்சலையும் உடல் வலியையும் போக்குவிக்கக் கூடியது. இதன் பட்டைப் பகுதி மற்றும் விதைகள் இந்திய மருத்துவ முறைகளாக சித்த, ஆயுர்வேத முறைகளில் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பொருமல், பித்த சம்பந்தமான நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இது கல்லீரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தக் கூடியதாகவும், குருதிச் சீர்பாட்டுக்காகவும், முத்தோஷக் கேடுகளை (வாத, பித்த, சிலேத்துமம்) சமன்படுத்தி ஆரோக்கியத்தை நிலைப்படுத்த வல்லதாகவும் விளங்குகிறது. வெப்பாலையில் உள்ள மருந்து வேதிப்பொருட்களும், குணங்களும் வெப்பாலையின் விதை நீக்கிய காய்கள் Cycloartane என்னும் வேதிப்பொருள் சீதபேதியையும், கடுங் கழிச்சலையும் போக்கவல்லது. இதில் Beta sitosterol என்னும் வேதிப்பொருள் மிகுந்துள்ளது. இது குருதியில் மிகுந்துள்ள கொழுப்புச் சத்துவத்தைக் கரைக்கவல்லது. மார்பு நோய் அல்லது இதயநோய் இதனைத் தொடர்ந்து வரும் இதய அடைப்பு வராது தவிர்க்க உதவுகிறது.

மேலும் ப்ரோஸ்ட்டேட் கோளத்தின் வீக்கத்தையும் கட்டுப்படுத்தி சிறுநீரை தாராளமாகக் கழியச் செய்கிறது. வெப்பாலை மரப்பட்டையினின்று பிரித்தெடுக்கப் பெறும் Beta amyrin என்னும் வேதிப்பொருள் வலித்தணிப்பானாகவும், வீக்கத்தைக் கரைப்பதாகவும் விளங்குகிறது. மேலும் இது மலேரியா என்னும் குளிர்காய்ச்சல், மூட்டுவாதம், பல்வலி, வீக்கம் இவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன் தருகிறது. இது புண்களை விரைந்து ஆற்றும் ஓர் உன்னத குணம் படைத்தது. வெப்பாலை மரப்பட்டையில் Ursolic acid என்று குறிப்பிடப் பெறும் அமிலத்தன்மை மிகுதியாக உள்ளது.

இந்த அர்சோலிக் அமிலம் உடலின் தசை வளர்ச்சிக்குப் பயன் தருகிறது. மேலும் இது குருதியில் சேர்ந்த மிகுதியான கொழுப்புச் சத்துவத்தை கரைத்து வெளியேற்றக்கூடியது. இதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. ரத்தத்தில் மிகுந்திருக்கும் சர்க்கரையின் அளவையும் இது கட்டுப்படுத்தவல்லது. கொழுப்புச் சத்துவங்களில் கெட்ட கொழுப்பாக நின்று பல்வேறு துயரங்களைத் தூண்டுவிக்கும் டிரைகிளிசரைட்ஸ் என்னும் கொழுப்பு சேராமலும் சேர்ந்ததைக் கரைக்கவும் மருந்தாகிறது.

வெப்பாலை மருந்தாகும் விதம்

* வெப்பாலை மரப்பட்டைச் சூரணம் ஓரிரு தேக்கரண்டி எடுத்துத் தீநீராகப் பருகுகிறபோது பாற்பெருக்கியாகவும், பல்வேறு வயிற்று நோய்களைத்
தணிப்பதாகவும் பயன் தருகிறது.

* வெப்பாலை மரப்பட்டைச் சூரணத்தோடு 10 மிளகும் சுவைக்கென பனங்கற்கண்டும் சேர்த்து தீநீராகப் பருகும்போது, சருமநோய்களை விரைந்து குணப்படுத்துவதோடு காயங்கள் எவ்விதத்தினால் ஆயினும் அதை ஆற்றும் மருந்தாகிறது. காய்ச்சலைத் தணிவிக்கிறது. பேதி மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்துகிறது. பாம்புக்கடி விஷம், தேள்கடி, பூரான் கடி போன்றவற்றால் உண்டான விஷத்தை முறிக்கவல்லது.

* குருதிக்கசிவு அதாவது ஆசன வாயினின்று வெளிப்படும் ஹெமராய்ட்ஸ் என்னும் ரத்தக்கசிவு, கருப்பையினின்று வெளியேறும் அதிகமான குருதிப்போக்கு, சிறுநீர்த்தரை வழியே வெளியேறும் குருதிக்கசிவு, இருமும்போது நெஞ்சகச் சளியோடு குருதி கலந்து வெளியேறுவது போன்ற அசாதாரண நிலைகளில் வெப்பாலைப் பட்டைச் சூரணமும் மிளகும் சேர்ந்த தீநீர் உடலை தேற்றும் உன்னத மருந்தாகிறது.

* வெப்பாலை இலை நான்கு அல்லது ஐந்து எடுத்து அதனுடன் சம அளவு கீழாநெல்லி, நொச்சி இவைகளின் இலையைச் சேர்த்து அரைத்து, ஒரு மண்டலம் உள்ளுக்கு சாப்பிட, மாதவிலக்கு ஒழுங்காவதோடு பெண் மலடு நீங்குவதற்கும் வகை செய்கிறது.

* வெப்பாலை இலை, கீழ்க்காய் நெல்லி இலை மற்றும் ஆமணக்கு இலை ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு விழுதோடு மோர் கலந்து அன்றாடம் காலை வெறும் வயிற்றில் பருகி வர சில நாட்களில் மஞ்சள் காமாலை மறைந்துபோகும்.

* வெப்பாலை விதையைப் பொடித்துச் சூரணித்து வெருகடி அளவு (ஒரு கிராம்) எடுத்து தேன் கலந்து குழைத்து தினம் அந்தி, சந்தி என இரு வேளை உண்டுவர, இது ஒரு காமவிருத்தினியாக பயன் தரும். கருப்பை வீக்கம், கருப்பைப் புற்று, மார்பகப் புற்று, ரத்த நாளங்களிலே ஏற்படும் அடைப்பு ஆகியவற்றைக் கண்டிக்கும்.

* வெப்பாலை இலைகளை அரைத்து விழுதாக்கி அக்கிப் புண்கள் பொன்னுக்கு வீங்கி என்று சொல்லப் பெறும் புட்டாலம்மை ஆகியவற்றின் வலியைக் குறைத்து வீக்கத்தைத் தணிவிக்கச் செய்யும். வெப்பாலை இலைகளை போதிய அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நான்கைந்து நாட்கள் நல்ல சூரிய ஒளி படும்படி வைத்து சூரிய புடமிட்டு வைக்க எண்ணெய் நன்கு நீல நிற வண்ணம் பெறும்.

இந்த எண்ணெயை வடித்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும் மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும்.

* வெப்பாலைப் பட்டைச் சூரணம் வெருகடி அளவு எடுத்து சம அளவு இசப்கோல் வித்து பொடித்து இரண்டையும் ஒரு சேரக் கலந்து சிறிது பசு வெண்ணெய் சேர்த்து நன்கு உறவாடும்படி குழைத்து அந்தி சந்தி என இருவேளை உள்ளுக்கு சாப்பிட்டு வர நாட்பட்ட தீராக் கழிச்சல், மலத்தில் குருதி கலந்து வெளியேறுதல், மூலம், தோல் நோய்கள், தேமல், தொழுநோய் ஆகியன குணமாகும்.

* வெப்பாலைப் பட்டைத் தீநீர் இரண்டு மூன்று தேக்கரண்டி எடுத்து அதனோடு வெருகடி சுக்குத்தூள் கலந்து சுவைக்கென தேன் கலந்து உறவாடும்படி குழைத்து உள்ளுக்கு சாப்பிட்டு வர மூல நோய் குணமாவதோடு இதையே தேனில்லாமல் மேலே பூசி வர தோல் நோய்கள் குணமாகும்.

* வெப்பாலைப் பொடியைக் கோமூத்திரத்தோடு சேர்த்துக் குழைத்து மேற்பற்றாகப் பூசிவரப் பல விதமான சரும நோய்களும் பறந்து போகும்.

* வெப்பாலைப் பட்டையைப் பசுமையாக இடித்துச் சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாறுடன் பசும்பால் சேர்த்துப் பருகி வர சிறுநீரக நோய்கள் பலவும் சீர்பெறும்.

* உலர்ந்த பட்டை சூரணத்தை எடுத்து உடலில் வீக்கம் கண்ட இடத்தின் மேல் தேய்த்து வர வீக்கம் தணியும்.

* வெப்பாலை விதைச் சூரணத்தை வெருகடி எடுத்து தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வர குடலில் தங்கிய புழுக்கள் நீங்கும், காய்ச்சலும் தணியும், பேதியும் குணமாகும்.

* வெப்பாலை இலையோடு சிறிது உப்பு சேர்த்து மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து துப்பிவிட பல்வலி பற்சொத்தை குணமாகும்.

* வெப்பாலைப் பட்டைச் சூரணத்துடன் அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து உள்ளுக்கு சாப்பிட்டு வர மூட்டுவலி, எலும்புவலி ஆகியன குணமாகும்.

* வெப்பாலையைத் தைல பதத்தில் தயாரித்து தொடர்ந்து 90 நாட்கள் பயன்படுத்தியதில் சரும நோய்கள் பலவும் குணமாயின என ஒரு விஞ்ஞான ஆய்வுதெரிவிக்கிறது. சாதாரணமாக நாம் சாலை ஓரங்களில் பார்க்கக் கூடிய இந்த வெப்பாலை, மஞ்சள் காமாலையைப் போக்கும் மரம் என்றே அழைக்கப் பெறுகிறது.

இப்படி தீராத சரும நோய்கள், காய்ச்சல், பல்வலி, எலும்புவலி, மூட்டுவலி, பேதி, சீதபேதி, குருதிக்கொழுப்பு, சர்க்கரை நோய் இப்படிப் பல்வேறு நோய்களைப் போக்குவதை மனதில் வைத்து ஆங்காங்கே இயன்ற வரையில் பயிரிடுவதால் எதிர்காலத்தில் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிகோலும் என்பதில் ஐயமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி!!(மருத்துவம்)
Next post மீண்டும் நடிக்க வரும் சரிதா!! (சினிமா செய்தி)