நேபாளத்தில் அதிபர் தேர்தல்
நேபாளத்தில் வரும் 19-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடத்தப்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அரசியல் நிர்ணய சபை தேர்தலில் மாவோயிஸ்ட்கள் அமோக வெற்றி பெற்றனர். மன்னராட்சி நீக்கப்பட்டதை அடுத்து மன்னரது இடத்தில் அதிபர் பதவியை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதிபராக யார் பொறுப்பேற்பது என்பதில் அரசியல் கட்சிகளிடையே வேறுபாடு நிலவியது. இந்நிலையில் மன்னர் பதவிக்கு பதிலாக அதிபர் பதவியை ஏற்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதற்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் பதவி ஆட்சி அதிகாரம் இல்லாததாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று, பெரும்பான்மை பலம் மிக்கவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்த வாரம் நேபாளத்தில் புதிய அரசும், பிரதமரும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.