திருவுளச்சீட்டு!!(கட்டுரை)

Read Time:21 Minute, 14 Second

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், அதற்குப் பின்னரான ஆட்சியமைப்பும் ஒரு புதுமையான அனுபவத்தைத் தந்திருக்கின்றது.

‘வென்று விட்டோம்’ என்று பட்டாசு கொழுத்தியவர்கள், ஆட்சியமைப்பதில் தோற்றுவிடுகின்ற நிலையையும் வட்டாரங்களின் அடிப்படையில் தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆட்சியை நிறுவுகின்ற விநோதத்தையும் இந்தப் புதிய தேர்தல் முறைமையின் ஊடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம்.

பல பிரதேசங்களில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை.

கூட்டாக ஆட்சியமைக்கும் பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்கவில்லை. எந்தவழியும் இல்லாது போய்விட்ட நிலையில், திருவுளச்சீட்டும் அதன் நிகழ்தகவுமே கைகொடுக்கின்றன. ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போல, பலரது அரசியல் மானத்தைத் திருவுளச்சீட்டுக் காப்பாற்றி இருக்கின்றது.

புதிய தேர்தல் முறைமை, முஸ்லிம்களுக்கு எவ்விதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசிக்காமல், சட்டெனக் கையை உயர்த்தி, ஆதரவு வழங்கிய முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தற்கால அரசியல் நடப்புகள் பெரும் தலையிடியையும் சிக்கலையும் ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது.

இந்த 60இற்கு 40 தேர்தல் முறைமைக்கு குட்டிக்கரணம் போட்டு, ஆதரவளித்தவர்களே இன்று, ‘இதை மாற்ற வேண்டும்’ என்று அறிக்கைவிடத் தொடங்கி விட்டார்கள்.

‘இரட்டை வாக்குச்சீட்டு இல்லாத நிலையில், கலப்புத் தேர்தல் முறைமை, முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைக் குறைக்கும்’ என்றும் ‘பெரும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தும்’ என்றும் இந்தப் பத்தியில் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தோம். சிவில் செயற்பாட்டாளர்களும் எச்சரிக்கை ஒலியை எழுப்பியிருந்தனர்.

ஆனால், அரசாங்கத்துக்கு ‘நல்லபிள்ளை’யாக இருக்க வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் அரசியல்வாதிகள் கலப்புத் தேர்தல் முறைமைக்கு ஆதரவளித்தனர்.

இப்போது ‘மாற்ற வேண்டும்’ என்று சொல்வதும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைகின்றதே என்பதற்காக அல்ல; மாறாக, தமது கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் போகின்றதே; தமது கட்சி சார்பாகத் தெரிவாகும் உறுப்பினர்களின் தொகை குறைந்து விடுமே என்ற சுயலாப அரசியல் நோக்கத்துக்காகவே என்றே தெரிகின்றது.

இந்தமுறை, முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில், பரவலாக ஐந்து தரப்புகளுக்கு இடையிலான போட்டி நிலவியது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என அங்கிகரிக்கப்பட்ட நான்கு முஸ்லிம் கட்சிகளும், பெருந்தேசியக் கட்சிகள் சார்பு முஸ்லிம் அரசியல்வாதிகளின் அணியும் என இப்போட்டி அமைந்திருந்தது.

இதனால், அந்தந்த உள்ளூராட்சி சபைக்குட்பட்ட பகுதிகளில், வட்டாரங்களில் உள்ள வாக்குகள் மூன்றாக, நான்காக உடையும் நிலை ஏற்பட்டது. வட்டாரங்களை வென்றவர்களால் கூட, பெரும் வித்தியாசத்தில் வெற்றிபெற முடியாமல் போனதற்கும், ஆட்சியமைக்க இயலாத நிலை ஏற்பட்டதற்கும் இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். முஸ்லிம் பிரதேசங்களில் மட்டுமல்ல தமிழ், சிங்களப் பிரதேசங்களில் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், மொத்தமாக இருக்கின்ற 45 சபைகளில், 32 சபைகளில் எந்தவொரு கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத அல்லது சபைத் தலைவர் பதவியை உரிமைகோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில், தேசிய காங்கிரஸ் கட்சியால் கைப்பற்றப்பட்ட அக்கரைப்பற்றை மையமாகக் கொண்ட இரு சபைகளையும் தவிர, வேறெந்தச் சிறுபான்மைப் பிரதேசங்களிலும் தனியொரு தமிழ்க் கட்சியாலோ அல்லது முஸ்லிம் அணியாலோ ஆட்சியை நிறுவ முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்குச் சமாந்தரமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழாத பிரதேசங்களின் வட்டாரங்களில், ஏற்கெனவே முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் கணிசமான தொகையில் இழக்கப்பட்டு விட்டன.விகிதாசாரப் பட்டியலில் இடம் கிடைப்பதற்காகத் தவமிருக்கும் நிலைகளே உள்ளன.

இந்தச் சூழலில், முஸ்லிம் கட்சி ஒன்றாலோ, வேறு கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் அணி ஒன்றாலோ சபையைக் கைப்பற்றுவது தொடர்பாக, அங்குள்ள மக்கள் சிந்திக்கவே முடியாத நிலை இருந்தது; இருக்கின்றது.

இந்நிலையில், கிழக்கில், முஸ்லிம்கள் ஓரளவுக்குக் கணிசமாக வாழ்கின்ற பிரதேசங்களிலும் எந்த முஸ்லிம் கட்சி ஆட்சியமைப்பது என்ற போட்டாபோட்டி எழுந்தது.

ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபைகளில் பெருவெற்றி பெற்றிருந்தாலும், அக்கட்சி போட்டியிட்ட வேறெந்த சபைகளிலும் அக்கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை.

ஆனால், தேசிய காங்கிரஸ் ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி ஊடாக, அதாவுல்லாவின் ஆதிக்கத்தைச் செலுத்த முடியும் என்ற நிலையுள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எங்கும் ஆட்சியமைக்கும் ஆணையைப் பெறவில்லை.

எனவே, வழக்கம்போல, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது பற்றிய போட்டி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் மக்கள் காங்கிரஸுக்கும் இடையில் தீவிரமடைந்திருக்கின்றது.

ஏற்கெனவே, முதல் அமர்வு நடைபெற்று முடிந்துவிட்ட சபைகளிலும், இன்னும் அமர்வு கூட்டப்படாத சபைகளிலும் இதைக் காணக் கூடியதாக உள்ளது. அதுவும் வழக்கம்போல, அம்பாறை மாவட்டக் களம் சற்றுச் சூடுபிடித்திருப்பதாகச் சொல்ல முடியும்.

இத்தனைக்கும் ஐ.தே.க சார்புப் போக்குள்ளதாகக் கருதப்படும் இவ்விரு காங்கிரஸ்களும் கிட்டத்தட்ட ஒரே நுட்பத்தையே பயன்படுத்தின. மக்கள் காங்கிரஸ், சில இடங்களில் ஐ.தே.கவுடன் சேர்ந்தும் சில இடங்களில் தனித்து மயில் சின்னத்திலும் போட்டியிட்டது.

முஸ்லிம் காங்கிரஸும் ஐ.தே.கவுடன் சேர்ந்தும் சில இடங்களில் தனித்து மரச் சின்னத்திலும் களமிறங்கியது. மக்கள் காங்கிரஸ் கட்சியானது, புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் கூட்டமைப்புடன் இணைந்து, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டதும், மு.கா இன்னும் மூன்று, நான்கு சின்னங்களில் வேறு சில சபைகளில் போட்டியிட்டதும் இதற்கு விதிவிலக்கான ஏனைய உபாயங்களாகும்.

ஓர் உள்ளூராட்சித் தேர்தலில், மக்கள் காங்கிரஸ் இந்தளவுக்கு களமிறங்கியது, இதுவே முதல் தடவையாகும். அதுவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் மற்றும் கட்சியின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள், பிளவுகள் ஏற்பட்டிருந்த நிலையில், முஸ்லிம் கூட்டமைப்பாக, மு.காவின் கோட்டைக்குள் நுழைந்தமை, ம.காவுக்குப் புதிய வாக்காளர்கள் கிடைப்பதற்கு வழிவகுத்தது எனலாம். இல்லையென்றால், மு.காவுக்குச் சரிசமமாக நிற்கும் நிலையை, மக்கள் காங்கிரஸ் பெற்றிருக்க மாட்டாது.
இதற்கு ஒப்பான பின்புலத்தோடே, நாட்டில் பரவலாகவும் குறிப்பாக, முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும் மு.காவுக்கும் ம.காவுக்கும் இடையில், யார் ஆட்சியமைப்பது என்ற போட்டி வலுப்பெற்றிருந்தது.

அதுமட்டுமன்றி, அங்கு ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ந.தே.ம. ஆகியவை காணப்பட்டன. எது எப்படியோ, ஒன்றிலொன்று தங்கியிருந்தே, கூட்டாட்சியை நிறுவ வேண்டிய நிலை, நாட்டின் பல பிரதேசங்களில் காணப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் பிரதியமைச்சர்கள் இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில், கல்முனை மாநகர சபையையும் நிந்தவூர் பிரதேச சபையையும் தனிப்பெரும் பலத்துடன் கைப்பற்ற முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சொந்த ஊரான சம்மாந்துறையிலும் இதேநிலைதான்.

அதேபோல், மக்கள் காங்கிரஸின் அமைச்சர் இருக்கின்ற பிரதேசத்திலும் பிரதியமைச்சர் இருக்கின்ற பிரதேசத்திலும் இதேநிலைமைகள் ஏற்பட்டன.

அத்துடன், அம்பாறையில் எந்த எம்.பியையும் கொண்டிராத மக்கள் காங்கிரஸின் அண்மைக்கால நகர்வுகள், ம.காவுக்கான வாக்காளர் தளத்தை அதிகரித்திருந்த போதிலும், அந்தக் கட்சியாலும் தனியே ஆட்சியமைக்க முடியாத சூழலே காணப்பட்டது. இதுபோல, வடமேல் மற்றும் வட மாகாணத்திலும் ஒருவித இக்கட்டுக்குள் முஸ்லிம் கட்சிகள் சிக்கியிருந்தன.

இந்நிலையில்,அம்பாறை மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நான்கு சபைகளில் ஆட்சியை நிறுவ உடன்பட்டது. அதற்கமைய நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை சபைகளில் தவிசாளர் பதவி, மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளதுடன்,பிரதித் தவிசாளர் பதவிகள் சு.கவுக்குச் சென்றுள்ளன.

இறக்காமம் மற்றும் பொத்துவில் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர் பதவி, சுதந்திரக் கட்சிக்கும் பிரதித் தவிசாளர் பதவி மக்கள் காங்கிரஸூக்கும் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இறக்காமம் சபையில் அது சாத்தியமானாலும் கூட, பொத்துவில் பிரதேச சபையில் ஆட்சியைக் கைப்பற்ற, மு.கா மேற்கொண்ட கடைசிக்கட்ட முயற்சியால், மு.காவும் த.தே.கூட்டமைப்பும் அங்கு ஆட்சியை நிறுவியுள்ளன. சு.கவும் மக்கள் காங்கிரஸும் எதிர்க்கட்சியில் அமரவுள்ளன.

அட்டாளைச்சேனை சபையில் ஆட்சியமைக்க, மக்கள் காங்கிரஸும் தேசிய காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்தி, கடைசித் தருணத்தில் அது வெற்றியளித்திருந்தாலும் கூட, ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட மு.கா அணியினர், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன உறுப்பினரைத் தம்வசப்படுத்தியமையால், திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் பிரகாரம், ஐ.தே.கவுக்கு தவிசாளர் பதவியும் தே.கா – ம.கா கூட்டுக்கு பிரதித் தவிசாளர் பதவியும் கிடைத்திருக்கின்றது. அதேபோல் மு.கா கட்சி, புத்தளம் நகர சபையில் மொட்டு மற்றும் சு.க ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கின்றது.

சுருங்கக் கூறின், மக்கள் காங்கிரஸ் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் முஸ்லிம் காங்கிரஸ், பொதுஜன பெரமுனவினதும் ஆதரவைப் பெற்றுக் கொண்டு, ஆட்சியதிகாரத்தை உறுதி செய்திருக்கின்றன எனலாம்.

மூன்று முஸ்லிம் கட்சிகளையும் ஐ.தே.கவும் சு.கவும் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் பின்னிப்பிணைந்துள்ள போதும், அண்மைக்காலமாக ஐ.தே.கவுடன் மனமுடைவு ஏற்பட்டுள்ளதை, திகன வன்முறைகளுக்குப் பிறகு வெகுவாக அவதானிக்க முடிகின்றது.

அதை மு.கா தலைவர் வெளிப்படையாகவே கூறி விட்டார். ம.கா தலைவர் இன்னும் பகிரங்கமாகச் சொல்லவில்லை.

இவ்வாறிருக்கையில், சுதந்திரக் கட்சி மு.காவுக்கு ஆதரவளிக்காமல்ப் போனமைக்குப் பெரும் காரண காரியங்கள் சொல்லப்படுகின்றன. அவையெல்லாம், பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவையும் குறுகிய வட்டத்துக்குள் இருந்து நோக்கப்படுகின்றவையும் ஆகும்.

உண்மையில், இதற்குக் காரணம், மு.கா பற்றி சு.கவுக்குள் இருக்கின்ற கருத்துநிலையாகும். ம.கா பற்றியும் அவ்வகையான கருத்துகள் இருந்தாலும், குறிப்பாக, அம்பாறையில் ஆட்சியமைப்பதற்காக ரிஷாட் பதியுதீன் தரப்பினர் சு.க அரசியல்வாதிகள் ஊடாக, மேற்கொண்ட தொடர்முயற்சிகளே, இவ்வாறு சு.கட்சி, மக்கள் காங்கிரஸின் பக்கம் சாய்வதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது எனலாம்.

அதேநேரம், புத்தளம் போன்ற இடங்களில் சு.க, முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவளித்திருக்கின்றது என்பதை பலரும் கவனிக்கத் தவறிவிட்டனர்.

எனவே, அம்பாறை போன்ற இடங்களில் சு.க, தமது பக்கம் வராது என்பதையும், புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் கைகொடுக்காத நிலையில், இன்னுமோர் உறுப்புரிமை அவசியம் என்பதையும் உணர்ந்து கொண்டே, ரவூப் ஹக்கீம் தரப்பினர் ‘மொட்டை’ நாடியுள்ளனர்.

இதற்கப்பால், ஐக்கிய தேசியக் கட்சியை மு.கா தலைவர் விமர்சிப்பதற்குப் பின்னால் இருக்கின்ற காரணங்களை, பலரும் ஆராயத் தொடங்கியிருக்கின்றனர்.

உண்மையில், அக்காரணங்களைத் தேடிப்போனால் நிறையச் சூட்சுமங்கள் தெரியவரும். அதுபோல, சு.க ஏன் ஆதரவளிக்கவில்லை என்பதற்கான கற்பிதங்களை விட, ஐ.தே.கவை விமர்சிப்பதற்குப் பின்னாலிருக்கும் காரணங்களும், ‘மொட்டை’ நோக்கி ‘மரம்’ நகர்கின்றதா என்ற தேடல்களும் திகைப்பூட்டுவனவாக இருப்பதற்கே நிறைய வாய்ப்புள்ளது.

இந்த அடிப்படையில், கிழக்கிலும் நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் உள்ளூராட்சி சபைகளை நிறுவும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

ஆனபோதும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை, வட்டார எல்லைகள் போன்ற சட்டவாக்கச் செயற்பாடுகளுக்கு, முஸ்லிம் கட்சித்தலைவர்களும் எம்.பிக்களும் அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல் ஆதரவளித்தமையால், முஸ்லிம் ஊர்களில் கூட, தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு பல முஸ்லிம் கட்சிகள் போட்டியிட்டாலும் இரு கட்சிகளின் முஸ்லிம் உறுப்பினர்களும் இணைந்து ஆட்சியை நிறுவ முடியாத நிலையில் மொட்டிலும், சு.கவிலும் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எல்லாம் சரியாக இருந்தாலும் ‘திருவுளச்சீட்டு’ குலுக்கியே ஆட்சியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய தேர்தல் முறைமை பற்றியும், இதையொத்த முறைமையை மாகாண சபை, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

அதேநேரத்தில், எந்த அடிப்படையில் இப்போது உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிகள் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, தேர்தல் கூத்தும் வெற்றிக் களிப்பும் முடிவுக்கு வரவேண்டும்.

உள்ளூராட்சி சபையின் ஒவ்வோர் உறுப்பினரும் சண்டியர்கள் போல, மேதாவிகள் போல, பெரும் அமைச்சர்கள் போல, வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல மக்களிடத்தில் நடந்து கொள்ளாது, உரிய முறையில் சேவையாற்ற கடமைப்பட்டுள்ளனர்.

மக்களுக்கான சேவை என்பது திருவுளச்சீட்டு போல, நிகழ்தகவுகளை நம்பியதாக இருக்க முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை! (சினிமா செய்தி)
Next post துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!! (உலக செய்தி)