கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டது: இந்தியா பற்றி சர்வதேச நிறுவனம் கருத்து
வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும் திறன் இந்தியாவிடம் குறைந்துவிட்டதாக சர்வதேச தர நிறுவனம் ஃபிட்ச் தெரிவித்துள்ளது. ஃபிட்ச் நிறுவன அறிவிப்பு வெளியானவுடன் இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய அரசின் நிதி நிலை மிக மோசமாக உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உரத்துக்கு அளிக்கும் மானியம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இந்தியாவை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் நிதி நிலை ஸ்திரமாக உள்ளது என இதுவரை கருத்து வெளியிட்டு வந்த சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்கள் தற்போது முதல் முறையாக கடனை திரும்பச் செலுத்தும் திறன் இந்தியாவிடம் குறைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளன. பெட்ரோலிய நிறுவனங்கள் எதிர்கொண்ட நஷ்டத்தை சமாளிக்க கடன் பத்திரங்கள் வெளியிட்டது, மானியங்களுக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் இடம்பெறாதது ஆகியன இந்தியா பற்றிய கருத்தை மாற்றிக் கொள்ள வழிவகுத்துள்ளதாக ஃபிட்ச் நிறுவன ஆசிய பிரிவு தலைவர் ஜேம்ஸ் மெக்கோர்மாக் தெரிவித்தார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்படவில்லை என்றும் ஃபிட்ச் சுட்டிக் காட்டியுளளது. நடப்பு நிதி ஆண்டில் இந்தியா நிர்ணயித்துள்ள 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாது என்றும் 7.7 சதவீதமாக அது குறையக் கூடும் என்றும் ஃபிட்ச் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் கடன் சுமை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீத அளவுக்கு உயரும் என்றும் மதிப்பிட்டுள்ளது. தற்போது இது 2.8 சதவீதமாக உள்ளது. மானியங்களுக்கான ஒதுக்கீடு, கடனுக்கான வட்டி மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவதால் கடன் சுமை அளவு உயரும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.