By 7 April 2018 0 Comments

வேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது? (மகளிர் பக்கம்)

நான் இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளேன். படிப்பு முடித்த கையோடு எனக்கு வேலை கிடைத்துள்ளது. கல்லூரியைப் பொறுத்தவரை உடைகள் அணிவதற்கு பெரிய சட்டதிட்டம் எல்லாம் கிடையாது. ஜீன்ஸ், டாப், ஷர்ட், ராப் அரவுண்ட், ப்லாசோஸ் ஷார்ட் டாப் என்று சுற்றதக் கொண்டு இருந்தோம். இப்போது அலுவலகம் என்று வரும் போது மற்றவர்கள் கண்களை உறுத்தாமல் உடையை அணிய வேண்டும் என்று தோன்றுகிறது. எவ்வாறு உடைகளை தேர்வு செய்து அணியலாம் என்று ஆலோசனை வழங்குங்களேன்.
– ரம்யா, மேடவாக்கம்.

டாக்டர்கள் என்றால் வெள்ளை கோட், வக்கீல்களுக்கு கறுப்புகோட், காவல்துறையினருக்கு காக்கிசட்டை, நர்சுகளுக்கு வெள்ளை கவுன்… என அவரவர் துறைக்கு ஏற்ப உடைகள் உள்ளன. ஆனால், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு என தனி உடைகள் கிடையாது. அவர்கள் என்ன உடைகள் அணியலாம் என்று ஆலோசனை கூறுகிறார் பிரபல உடை அலங்கார நிபுணர் தபசும்.‘‘அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்துச் செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். காரணம், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது.

சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேன்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம். அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.புடவையென்றால் நன்றாக சலவை செய்த காட்டன் அல்லது சிந்தடிக் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கயிறு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தவேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக் கூடாது.
சன்னமான புடவைகளை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள் அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். இதற்கு டியுனிக்ஸ் மிக்ஸ் அண்ட் மேட்ச் கிடைக்கிறது. அவ்வாறு அணியும் போது தோள்பட்டையில் ஓட்டை மற்றும் ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை தவிர்ப்பது நல்லது. ஸ்லீவ்லெஸ் என்றால் ஓவர்கோட் அல்லது ஷ்ரக் அணியலாம். அதே போல் முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது. நிறைய பிரல்கள் கொண்ட ரபில்ஸ், மேக்சி, கவுன் போன்றவை பார்ட்டிக்கான உடைகள். இதனை அலுவலகத்திற்கு அணியக்கூடாது.

இப்போது ப்ளாசோக்கள் ஃபேஷன். பொதுவாக ப்ளாசோக்களுக்கு ஷார்ட் டாப் தான் அணிந்தார்கள். அந்த டிரண்ட் இப்போது மாறி வருகிறது. இதற்கு மொராக்கன் டாப், நீளமான டியுனிக், குர்த்திகள், குர்த்தாக்கள், சிலர் அனார்க்கலி டைப் டாப்பும் அணிகிறார்கள். இது பார்க்க நேர்த்தியாகவும் ரிச் லுக் கொடுக்கும்.சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.

உடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.

தேவைப்பட்டால் கைப்பையில் சீப்பு, காம்பாக்ட்பவுடர், பொட்டு வைத்துக் கொள்ளலாம். மாலை நேரத்தில் முகத்தை கழுவி சின்னதாக மேக்கப் போட்டுக் கொண்டால் அவர்கள் மட்டும் இல்லாமல் அவர்களை பார்க்கும் மற்றவர்களும் புத்துணர்ச்சி பெறுவார்கள். சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளைநிற
சட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கறுப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்…’’
தொகுப்பு: ப்ரியாPost a Comment

Protected by WP Anti Spam