நாடு கடத்தப்பட்ட 200 இந்தியர்கள் சவூதியில் தவிப்பு
விமானத்துக்காக கூட்டம் அலைமோதுவதால், நாடு கடத்தப்பட்ட சுமார் 200 இந்தியர்கள் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் தவித்துவருகின்றனர். அனுமதித்ததை விட அதிக காலம் தங்கியவர்கள், சிறையில் இருந்து விடுதலையான குற்றவாளிகள், கறுப்புப் பட்டியலில் உள்ளவர்கள் போன்றோர்களை சவூதி அரேபியா அவரவர் நாட்டுக்கு அனுப்பிவைத்து வருகிறது. இதுபோன்ற சுமார் 200 இந்தியர்கள், கோடைக் காலக் கூட்டம் அலைமோதுவதால், விமானத்தில் இடம் கிடைக்காமல் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் விரக்தியுற்ற இந்தியர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விமானங்கள் கிடைத்தவுடன் விரைவிலேயே நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு உறுதி அளித்தனர்.