ஒலிம்பிக் நாணயத்தாள்களை வாங்குவதற்கு சீனாவில் அலைமோதியது பெருங்கூட்டம்
ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள்களை வாங்குவதற்காக சீனாவின் ஹொங்கொங் வங்கியின் பல்வேறு கிளைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் ஒலிம்பிக் போட்டி “மேனியா’ உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனையொட்டி ஹொங்கொங் வங்கியில் சிறப்பு நாணயத்தாள்கள் வெளியிடப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்து வங்கி திறந்ததும் 20 ஹொங்கொங் டொலர் புதிய நாணயத்தாள்களை மக்கள் வாங்கிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் வங்கிக்கு அருகிலேயே கூடாரங்கள் அடித்து, அதில் தங்கினர். ஒருவர் வரிசையில் நிற்க, அவருக்கு துணையாக வந்தவர், அருகில் இருக்கும் உணவகங்களுக்கு சென்று உணவு வாங்கி வந்து கொடுத்தனர். நாணயத்தாளின் முன்பக்கத்தின் பெய்ஜிங் 2008 இலட்சினை அச்சிடப்பட்டுள்ளது. பின்பகுதியில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இது வழக்கமாக புழக்கத்துக்கு விடப்படும் நாணயத்தில் இல்லை. வித்தியாசமான நாணயங்களை சேகரிப்போருக்கென்றே பிரத்தியேகமாக வெளியிடப்பட்டது. இதனால், நாணயம் மற்றும் தாள்களை சேகரிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து, அதை வாங்கிச் சென்றனர்.