By 11 April 2018 0 Comments

”எங்களுக்கிடையே நல்ல புரிதல் இருக்கிறது”!!(மகளிர் பக்கம்)

90களின் இறுதியில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மர்மதேசம் – விடாது கருப்பு’ மக்கள் மறக்க முடியாத திகில் தொடர். அதில் நடித்தபோது பிரபலமான ஜோடி தான் தேவதர்ஷினி – சேத்தன் ஜோடி. 20 ஆண்டுகள் ஆன பின்னும் இருவரும் நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றி எப்படி சாத்தியமாயிற்று என்றால், கட்டாயம் தங்கள் ஒற்றுமையால்தான் என இருவரின் குரல்களும் சேர்ந்து ஒலிக்கின்றன. தங்கள் திருமண வாழ்வு குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் இந்த கலக்கல் ஜோடி.

தேவதர்ஷினி

நடிக்க வந்தபின் என்னோட இரண்டாவது ப்ராஜெக்ட் ‘மர்மதேசம்’ தொடர். காலேஜ் படிக்கும்போது அந்தத் தொடரில் நடித்துக்கொண்டிருந்தேன். அதில் எனக்கு நல்ல கேரக்டர். எங்கள் இருவருக்குமே நல்ல ரீச் கொடுத்த தொடர் அது. 1997 இல் இருந்து 1999 வரை இரண்டு வருஷம் அந்த ப்ராஜெக்ட். சூட்டிங்கில் எங்கள் இருவருக்கும் நிறைய காம்பினேஷன் சீன்ஸ் இருக்கும். அவுட்டோர் படப்பிடிப்புகள் நிறைய இருக்கும். சூட்டிங்கில் அவர் சின்சியராக இருப்பார். அந்த தொடரில் நடித்த நிறைய பேருக்கு அது முதல் ப்ராஜெக்ட் என்பதால் ஃப்ரீயா இருக்கும் நேரங்களில் எல்லாரும் உட்கார்ந்து அரட்டை அடிப்போம்.

எனக்கு பயப்படற சீனில் நடிக்க வராது. அதற்கு டைரக்டர் நாகா சார் சேத்தன் சாரை உற்று கவனிங்க. பயப்படும்படி நடிக்கும்போது அவரோட கண்களை பாருங்க, கண்ணை எப்படி வெச்சிருக்கார்னு பாருங்க என்பார். இப்பவும் நாகா சாரை பார்க்கும்போது நான் கிண்டல் பண்ணுவேன். ‘சேத்தனை அப்சர்வ் பண்ணுங்க ’ன்னு நீங்க சொன்னதால்தான் சார் இப்படியாச்சுன்னு சொல்லுவேன். நடிக்கும்போது எங்கள் இருவருக்கும் சின்னச் சின்ன சண்டைகளும் வரும். அதே சமயம் நன்றாக நடிக்கும்போது இருவரும் மற்றவர்களின் நடிப்பைப் பாராட்டிப்போம். நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்.

தொடர்ந்து ஒர்க் பண்ணும் போது ஒரு வருடத்திலேயே அடிப்படையா எங்கள் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு இருப்பது தெரியவந்தது. தொடர் முடிந்தபின்னும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் வீட்டில் எல்லாரையும் சந்திச்சார். நானும் அவர் வீட்டிற்குச் சென்று அவங்க அப்பா அம்மாவைச் சந்திச்சேன். அதற்குப் பிறகு ஒரு சமயம் எங்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணிச்சு. எங்களோடது 100 சதவிகிதம் காதல் கல்யாணம்தான்.

2002இல் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு. 2004 ஜனவரியில் எங்க மகள் பிறந்தாள். பொண்ணு இப்ப ஒன்பதாவது படிக்கிறாள். இந்தக் காலத்தில் அப்பா, அம்மா இருவரும் வேலைக்குப் போகிற குடும்பத்தில் வீட்டில் குழந்தைகளை பார்த்துக்க கண்டிப்பா பெரியவங்க வேணும். அப்பதான் குழந்தைகளை விட்டுட்டு பெண்கள் தைரியமா வேலைக்குப் போகமுடியும். நம்மோட சின்ன வயதில் தூர்தர்ஷன் மட்டும்தான் இருந்தது. இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு நிறைய சேனல்ஸ், செல், இணையம் என நிறைய கவனச் சிதறல் இருக்கு.

இப்போதைய சூழ்நிலையும் பாதுகாப்பானதாகவும் இல்லை. பத்திரிகைத் துறையிலும், நடிப்புத் துறையிலும் நேரம் காலமே பார்க்க முடியாது. திடீர்னு கால்ஷீட்டுக்கு தகுந்தபடி சூட்டிங்க்கு கூப்பிடுவாங்க. இப்ப ‘காஞ்சனா படம் பாகம் 3 யில் நடித்தேன். 50 நாட்கள் சூட்டிங் இருந்தது. ஐம்பது நாட்களும் இரவு நேரம் தான் படப்பிடிப்பு. அப்படி இருக்கும்போது நம்மளை புரிந்து கொள்கிற கணவனும் குடும்பத்தினரும் இருந்தால்தான் நல்லது. அந்த விதத்தில் எனக்கு என் குடும்பம் ரொம்ப சப்போர்ட்டிவ்வாக இருக்கு.

அதுவும் என் கணவர் இதே ஃபீல்டில் இருப்பதால் என் கஷ்ட நஷ்டங்களை தெரிந்திருக்கிறார். எங்களிடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். கணவன் ஜெயிக்க எப்படி மனைவியின் ஒத்துழைப்பு அவசியமோ, அது போல ஒரு மனைவி ஜெயிக்க கண்டிப்பாக கணவனின் ஒத்துழைப்பும் அவசியம். குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லைன்னா வேலையில் வளரமுடியாது.

நான் ரொம்ப எமோஷனல் டைப். நாங்க முதன்முதலா சந்திச்ச தினத்தைக்கூட ஞாபகம் வைத்துக்கொள்ளணும்னு நினைப்பேன். பொண்ணுங்களே எப்பவும் அப்படித்தானே? ஆண்கள் பொதுவா அப்படி இருக்க மாட்டாங்க. அதிலும் இவர் ரொம்ப யதார்த்தமானவர். அந்த தினத்தையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டார். அதனால் 18, 19 வயசு இருக்கும்போது இவர் இப்படி இல்லையே என ஒரு ஏக்கம் எனக்கு இருந்தது.

இப்ப பார்க்கும் போது இவரோட அந்த யதார்த்தமான குணம் வாழ்க்கைக்கு சரியானதுனு தோணுது. அதனால் வாழ்க்கை ரொம்ப சுலபமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எங்காவது ஃப்ரெண்ஸோட போகிறோம் என்றால், ஒரு சிலர் எப்போதும் தானும் கூடவே வருவது ‘நீ எங்க இருக்கே’ என எந்நேரமும் ஆராய்வது என இருப்பார்கள். இவர் அப்படி கிடையாது. ‘டிக்கெட் போட்டாச்சா? தங்க ரூம் போட்டாச்சா? சேஃப்டியான இடமா’ என்பது மாதிரியான யதார்த்த விஷயங்களை மட்டும் கேட்டுப்பார்.

அக்கறை இருக்குமே தவிர மற்றபடி அதிகாரம் இருக்காது. வாழ்க்கையை வாழ வாழத்தான் இந்த யதார்த்தம்தான் லைஃபுக்கு நல்லதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். இன்னமும் எங்களுக்குள் அண்டர்ஸ்டாண்டிங் அதிகமாயிடுச்சு. எங்களுக்குள்ள சிறந்த அன்பு இருக்கு. அப்ப எனக்கு ஒரு 19 வயது இருக்கும். ‘உனக்கு என்ன கிஃப்ட் வேணும்?’னு கேட்டார். ‘டெடி பியர் வேணும்’னு சொன்னேன். ‘டெடி பியரேதான் வேணுமா, கண்டிப்பா அதுதான் வேணுமா?’ என கேட்டார். நான் ‘அதுதான் வேணும்’ என்று சொன்னதால் அதையே வாங்கித் தந்தார். இப்ப அதெல்லாம் நினைச்சா ரொம்ப சிரிப்பா வருது.

சேத்தன்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்னு சொல்வாங்க. என் வாழ்க்கையிலும் உண்மை அதுதான். நான் நடிகனாக ஆவதற்கு முன்பு அஸிஸ்டென்ட் டைரக்டராக இருந்திருக்கிறேன். நடித்துக்கொண்டிருந்தாலும் எனக்கு டைரக்‌ஷன் செய்வதில்தான் ஆர்வம் அதிகம். அதற்கான முயற்சியில் நான் ஈடுபடும்போது பெரிய போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். தோல்விகளை சந்தித்திருக்கிறேன்.

அந்த மாதிரி நேரங்களில் நான் சோர்ந்து போகும் சமயங்களில் எல்லாம் எனக்கு ஆதரவாக தோள் கொடுப்பவர் என் மனைவி. ‘நீங்க முயற்சி பண்ணுங்க ஒரு நாள் ஜெயிக்க முடியும்’ என எனக்கு எமோஷனல் சப்போர்ட் கொடுப்பவர் அவர்தான். வேறு யாராவதாக இருந்தால் இருக்கிறதை விட்டுட்டு ஏன் பறக்கறதை பிடிக்க ஆசைப்படறே என நம் கனவுகளை தகர்க்க பார்ப்பார்கள். ஆனால் எனக்கு எப்போதும் ஊக்கம் கொடுப்பவராக ஒரு மாரல் சப்போர்ட்டாக என் மனைவி இருக்கிறார்.

எங்களுக்கு ஒரே பொண்ணு. பேர் நியதி. இரண்டு பேருக்கும் செல்லம். இரண்டு பேரையும் அவளுக்கு பிடிக்கும். ஆனால் என்ன இருந்தாலும் பெண் பிள்ளை என்பதால் பல விஷயங்களை அம்மாவிடம்தான் பகிர்ந்து கொள்வாள். அவங்க இரண்டு பேருக்குள்ள உரையாடல் அதிகம் இருக்கும். வளர்ந்த பெண் பிள்ளை என்பதால் மனரீதியாக மட்டுமில்லாமல் உடல்ரீதியாகவும் அம்மாவால்தான் புரிந்துகொள்ள முடியும்.

அவர்களும் அந்த படியைத் தாண்டி வந்திருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு அந்த பெண்குழந்தையின் மனம் புரியும். அதனால் தேவதர்ஷினி என் மகளுக்கு நிறைய கைட் பண்ணுவாங்க. அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகை, நகைச்சுவையுணர்வு மிக்கவர் என்பதையெல்லாம் தாண்டி ரொம்ப அன்பானவர், யாரையும் புண்படுத்த மாட்டார். ரொம்ப சாதுவானவர். இப்படிப்பட்ட மனைவி அமைந்தது என்னுடைய கொடுப்பினை என்று தான் சொல்ல வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam