By 13 April 2018 0 Comments

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்!!( மகளிர் பக்கம்)

கல்யாண சாப்பாடு போடவா திருமணம் என்றாலே கல்யாண மண்டபத்திற்கு அடுத்தபடியாக திருமண வீட்டார் யோசிப்பது கல்யாண சாப்பாடு தான். நடுத்தரக் குடும்பத்தில் ஒரு திருமணத்திற்கு எட்டிலிருந்து பத்து லட்சம்வரை செலவு செய்கிறார்கள் என்றால் அதில் நான்கு முதல் ஐந்து லட்சம் வரை சாப்பாட்டுக்கான செலவாகத்தான் இருக்கும். திருமண மண்டபத்தை முடிவு செய்த துமே, அடுத்ததாக கல்யாண வீட்டார் சாப்பாடு பற்றித்தான் பேசத் துவங்குவார்கள். கல்யாணத்திற்கு வந்தவர்களை வாய் நிறைய வரவேற்பது மட்டுமில்லை, வந்திருந்த சுற்றத்தாரை, சாப்பிட்டார்களா எனக் கவனித்து, அவர்களை அன்புடன் அழைத்து உணவருந்த வைத்து அனுப்புவதில்தான் இருக்கிறது திருமண வீட்டாரின் வெற்றி.

உபசரிப்பு சரியான முறையில் இல்லை என்றால் சுற்றமும், நட்பும் அதை பெரிய குற்றமாக்கிப் பேசிவிடுவார்கள். வருடங்கள் பல கடந்தும், நினைவுகூர‌ப்படும் பல திருமணங்களில் உபசரிப்பும், விருந்தும் நல்ல முறையில் இருந்ததே பெரும்பாலும் காரணமாக இருக்கும். திருமணம் என்றால், சமையல்காரர்கள் முதல் நாள் இரவே குழுவாக வந்து மண்டபத்தில் தங்கி, சமைத்து உறவினர்களை பந்திப் பாய் விரித்து, வரிசையாக இலைபோட்டு, அமர வைத்து, தயார் செய்த உணவுகளை வரிசையாக இலைகளில் வைத்துக் கொண்டே செல்வார்கள். அப்போது யார் இலையில் எந்த உணவு வைக்காமல் விடப்பட்டுள்ளது, யாருக்கு எது தேவைப்படுகிறது என்பதை திருமண வீட்டார் பார்த்து, கண்காணித்து, அருகில் வந்து கேட்டு, அந்த உணவை பரிமாறச் சொல்வார்கள்.

ஆனால் இன்றைய அவசர யுகத்தில், திருமண வீட்டாருக்கு ஒவ்வொன்றையும் கவனித்து செய்ய நேரமின்மை ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதால், திருமணம் தொடர்பான அத்தனை நிகழ்வு களையும், துறை வாரியாகப் பிரித்து அந்தந்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களிடம், திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங்கள் வழங்கி எப்படிச் செயல்படுகிறார்களோ, அதேபோல திருமண சாப்பாட்டு நிகழ்ச்சியையும், அதற்கான கேட்டரிங் துறை சார்ந்த மேலாண்மை நிறுவனங்களிடம் வழங்கி சிறப்பித்து விடுகின்றனர்.

கேட்டரிங் சர்வீஸ் என அழைக்கப்படும், உணவு தயாரித்து வழங்கும் துறை இன்றைய நவீன வாழ்வில், அதிவிரைவாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது என்றே சொல்லலாம். கேட்டரிங் டெக்னாலஜிக்கு என்று, பட்ட மற்றும் பட்டயப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், அத்துறை சார்ந்த நிர்வாக மேலாண்மை படிப்புகள் எனப் பல பரிமாணங்களை இத்துறை கண்டுள்ளது. துறை சார்ந்த வளர்ச்சியால், சமையல் வேலை என்ற அடைமொழிக்குள் இருந்த வார்த்தை, மதிப்புத் தரக்கூடிய ‘கேட்டரிங் டெக்னாலஜி’ என்ற அந்தஸ்தோடு, இன்று உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளையும் ஏராளமாக அள்ளி வழங்குகிறது.

கடந்த முப்பதாண்டுகளைக் கடந்து, கல்யாண சமையல் கான்ட்ராக்ட் தொழிலை செய்து வரும் மயிலாப்பூரில் இயங்கும், கேட்டரிங் கான்ட்ராக்டர் ஏ.எஸ்.வரதராஜன் அவர்களை சந்தித்தபோது, ‘‘முன்பெல்லாம் சமையல்காரர்கள் என்றால், ‘சமையல்காரன் வந்திருக்கிறான்’ என்ற மரியாதை அற்ற சொல்லே எங்களைக் குறிப்பது வழக்கில் இருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமாறி, நாங்களும் துறை சார்ந்த மரியாதையுடன் அழைக்கப்படுகிறோம். திருமணங்களில் முன்பு திருமண விருந்தாக, அவரவர் பழக்கவழக்கம் சார்ந்த உணவுகளை மட்டுமே சமைத்துத் தரச் சொல்லி பரிமாறுவார்கள்.

ஆனால் இன்று அதிலும் பல மாறுதல்கள். எக்கச்சக்க மாற்றங்கள். உணவைப் பரிமாறும் ஸ்டைலில் தொடங்கி, உணவுகளின் வெரைட்டி வரை, பல மாநில உணவுகள், பல வெரைட்டியான படைப்புக்கள் என உணவுத்துறை பல புதுமைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பல பரிமாண வளர்ச்சிகளை இத்துறை சந்திக்கும். ஒரு வீட்டில் திருமணம் முடிவானால் அடுத்து எங்களைத்தான் அழைப்பார்கள். ஏனெனில் திருமணத்தில் விருந்துதானே முக்கியம்? நாங்கள் சென்று, திருமணத்திற்கு எத்தனைபேர் வருவார்கள். எத்தனை நாள் நிகழ்ச்சி, எத்தனை வேளை.

எவ்வளவு பேருக்கு சமைக்க வேண்டும். என்னென்ன உணவுகள் தேவை என அவர்களிடமிருந்து கேட்டு வாங்கி, தேவையான ஆட்களை ஏற்பாடு செய்து திருமண மண்டபத்திற்கு முதல் நாளே சென்று சமைத்து பரிமாறிவிட்டு வருவோம். சில திருமணங்களில், உணவு சமைக்கத் தேவையான பொருட்களை திருமண வீட்டாரே வாங்கிக் கொடுக்கும் முறையும் அப்போது வழக்கத்தில் இருந்தது. நாங்கள் சமையல் ஆட்களோடு மட்டும் சென்ற காலமும் இருந்தது. இப்போது திருமண வீட்டார் யாருக்கும் அதற்கெல்லாம் நேரமில்லை.

எனவே இத்துறையும் முழுவதுமாக கான்ட்ராக்ட் முறைக்குள் போகத் துவங்கியுள்ளது. ஒருசில கிராமப்புறங்கள், ஊர் பகுதிகளில் வேண்டு மென்றால் இன்னும் பழைய முறையினை மக்கள் பின்பற்றலாம். பெண் அழைப்பு, முதல் நாள் இரவு, திருமணத்தில் காலை, மதியம், உணவு விருந்து என்று இருந்த நிலை மாறி, இன்று முதல் நாள் மாலை வரவேற்பு நிகழ்ச்சி. அதில் பஃபே முறையிலான உணவுப் பழக்கம். மறுநாள் காலை மற்றும் மதிய திருமண விருந்தோடு விருந்தோம்பல் நிறைவடைகிறது. இப்போதெல்லாம் திருமண விருந்துகளில் தமிழ்நாட்டு, வடநாட்டு உணவு வகைகள் கலந்து கட்டி இலைகளை நிரப்புகின்றன.

அதுவே பஃபே முறையிலான விருந்தில் சவுத் இந்தியன், நார்த் இந்தியன், தந்தூரி வகை உணவுகள், சாட் உணவுகள், ஃப்ரெஷ் ஜூஸ் வகைகள், லைவ் கவுன்டர்ஸ், கட் ஃப்ரூட்ஸ், ஐஸ்க்ரீம்ஸ், பீடா வகைகள் என இத்தனையும் இருக்கும். லைவ் கவுன்டரில் அப்போதைக்கு அப்போது சுடச்சுட தோசை, ஆப்பம், பணியாரம், ஜிலேபி போன்ற உணவுகளை சூடாக தயாரித்து வந்திருக்கும் சுற்றத்தினருக்கு வழங்கிக் கொண்டே இருப்பர். மேலும் ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி வகை உணவுகளும், இனிப்புகளும் கவுன்ட்டரில் இடம்பெறத் துவங்கியுள்ளன.

எல்லா கேட்டரிங் சர்வீஸ் நபர்களிடமும் சவுத் இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ், ஆந்திரா உணவுகளைத் தயாரிக்க அது அதற்கென தனித்தனி நபர்கள் உண்டு. நாங்கள் திருமண வீட்டாரிடம் ஒரு மெனு பேக்கேஜைக் கொடுப்போம். அதில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப சில மாற்றங்களைச் செய்து கேட்பார்கள். முன்பெல்லாம் ஸ்வீட் என்றால் கேசரி அல்லது பாயசம்தான் இருக்கும். இப்போது ஸ்வீட் என்றால் அதற்கென மிகப் பெரிய லிஸ்டே உள்ளது.

சூப் என்றால் கூட பல வெரைட்டி சூப்கள், பல வகையான சாலட்டுகள், ஸ்டாட்டர் அயிட்டங்கள், பாயசத்தில் பல விதம், நட்ஸ் வகை ஸ்வீட்கள், பெங்காலி ஸ்வீட்ஸ், அத்துடன் தமிழ்நாட்டவர்களின் உணவுகளாக பல வகை ஸ்பெஷல் தோசைகள், விதவிதமான இட்லி, இடியாப்பம், குழிப் பணியா ரம், வகைவகையான சட்னி, துவையல், சாம்பார், விதவிதமான பிரியாணி, புலாவ், ஃப்ரைடு ரைஸ், சைனீஸ் வகை நூடுல்ஸ் உணவுகள், வடநாட்டவர்களின் குல்ச்சா, ஃபுல்கா, தந்தூரி, பட்டர் நான், ஸ்டஃப்டு ரொட்டி வகை உணவுகள், அவற்றை தொட்டு உண்ண உதவும் சிவப்பு, வெள்ளை வண்ண கிரேவி வகைகள், பருப்பு வகை உணவுகள், ஊறுகாய் வகைகள், விதவிதமான வடகங்கள், பல ஃப்ளேவர் ஐஸ்க்ரீம், சாக்லெட்ஸ் என எதை விடுப்பது, எதை உண்பது என நம்மை மூச்சு முட்ட வைத்துவிடுகின்றனர்.

காலை டிபன் என்றால் இலைக்கு 200 முதல் 250 வரை விலை நிர்ணயிக்கிறோம். மதியம் என்றால் 350 ரூபாயில் இருந்து துவங்கும். அதில் 20 முதல் 25 வரை உணவு வகைகள் வரிசையாக வைக்கப்படும். மிகப்பெரிய வி.ஐ.பி. திருமணங்களில் இலைக்கு ஆயிரம் என விலை நிர்ணயிப்போம். அதில் 50 வகை வெரைட்டியான உணவுகள் இடம்பெறும். இதில் ஊறுகாய், வாழைப்பழம், அப்பளம், பீடா, ஐஸ்க்ரீம், சிப்ஸ், வெல்கம் டிரிங்ஸ், வாட்டர் பாட்டில் அத்தனையும் அடக்கம். பஃபே வகை உணவு என்றால் தட்டுகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

சமையல் நிர்வாக மேலாண்மை என்பது சாதாரண வேலையில்லை. சமையலுக்கு சுவையும் பேரும்தான் மிக முக்கியம். அதைத் தொடர்ந்து காப்பாற்றுவது கடினம். ஒரு திருமணத்திற்கு வரும் கூட்டத்தைப் பொறுத்து 30 ல் இருந்து 40 பேர்வரை சமையலுக்கு அழைத்துச் செல்வோம். மிகப் பெரிய திரும‌ணம் என்றால் 150 பேர் வரை சமையல் ஆட்களை அழைத்துச் செல்வோம். சில நேரங்களில் திருமண வீட்டார் சொன்ன நபர்களின் கணக்கைத் தாண்டி, கூடுதலாக இருநூறு முதல் முன்னூறு நபர் வரை வருவார்கள். திருமணத்திற்கு எத்தனை நபர்கள் வந்தாலும் அவர்களையும், அந்தக் கடைசி நேரத்தின் நெருக்கடியையும், பதட்டத்தையும் திருமண விருந்தில் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சென்னையைப் பொறுத்தவரை எந்தெந்த திருமண மண்டபம் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். புதிய இடம், புதிய மண்டபமாக இருந்தால் மட்டுமே, முன்கூட்டியே அந்த திருமண மண்டபத்திற்குச் சென்று என்னென்ன வசதிகள் அங்குள்ளது, என்னென்ன தேவை என எல்லாவற்றையும் முதலிலே பார்த்து விடுவோம். எங்கள் சமையலுக்கான வசதிகள் அனைத்தும் அங்குள்ளதா என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்வோம்.

என்னுடைய முப்பது ஆண்டு அனுபவத்தில் சொல்கிறேன் வந்திருக்கும் உறவினர், நண்பர்களை உட்கார வைத்து உணவைப் பறிமாறுவதுதான் சிறந்தது. பஃபே உணவுப் பழக்கம் பார்க்க பந்தாவாக மிகவும் ஃபேஷனாக இருக்கும். ஆனால் எதில் என்ன உணவு இருக்கிறது என வந்திருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியாது. உறவினர்களும், நண்பர்களும் பேசிக்கொண்டே எதையும் முழுமையாகப் பார்ப்பதில்லை. கவனிப்பதும் இல்லை. எதை உண்டோம் எனவும் தெரியாது.

வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நின்று கொண்டே சாப்பிடும் இந்த முறை சரிப்பட்டு வராது. மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல்களாக இருந்தால் அதற்கென லான் இருக்கும். இருக்கைகள் இருக்கும். அப்படி இருந்தால் பரவாயில்லை. இலை போட்டு வரிசையாக எல்லா பதார்த்தங்களையும் பரிமாறும்போதுதான் திருமண வீட்டார் என்ன பதார்த்தங்களை பரிமாறினார்கள் என்பதை முழுமையாக உணர முடியும். சுவையினை உள்வாங்க முடியும். மேலும் தேவையானதையும், வைக்கத் தவறியதையும் கேட்டு வாங்கி உண்ண முடியும்.

திருமணத்தை நிகழ்த்தும் இருவீட்டு முக்கிய உறவினர்களும், திருமணத்திற்கு வந்திருப்போரின் அருகில் வந்து அவர்களை விசாரித்து, வந்திருப்போரை மகிழ்ச்சியோடு சாப்பிட வைப்பதில் கிடைக்கும் மனநிறைவு மேற்கத்திய பழக்கவழக்கமான பஃபே முறையில் கட்டாயம் கிடைப்பதில்லை. சமைத்த உணவுப் பொருட்களும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகும். இப்போல்லாம், நிறையத் திருமணங்கள் திருமண மண்டபம் கிடைக்காததால், ஹோட்டல்களிலேயே நிகழ்த்தி, அந்த ஹோட்டல்களில் சமைக்கும் உணவுகளையே திருமண விருந்தாகவும் வழங்குகின்றனர்.

சமையல் என்பது ஒரு கலை. எல்லோருக்கும் இந்த சமையல் கலை வந்துவிடாது. இதற்கென படித்துவிட்டாலும், இந்தக் கலை வந்துவிடும் எனச் சொல்ல முடியாது. அந்த ஆர்வம் மனதுக்குள்ளிருந்து வர வேண்டும். அப்போதுதான் கை மணக்கும். சமையலும் மணக்கும். திருமண விருந்தும் சிறக்கும்.”

(கனவுகள் தொடரும்)

– மகேஸ்வரி

பஃபே வகை உணவு
பல திருமணங்களில் இன்று, பஃபே முறையிலான உணவு, பார்க்க மிகவும் நாகரிகமாக, ஸ்டைலிஷாக இருக்கிறது. இப்போதைய தலைமுறை இளசுகள் இதைப் பெரிதும் விரும்புகிறார்கள். இதில் உணவுப் பொருட்கள் அழகான முறையிலும், பாதுகாப்பாகவும் கவர் செய்யப்பட்டிருக்கும். எந்த நேரமும் உணவு சூடாகவே வைக்கப்பட்டிருக்கும். நிறைய கவுன்ட்டர்கள் தனித்தனிப் பிரிவாக அழகிய வடிவில் அமைக்கப்பட்டு, அதில் ஒரே விதமான உடையுடன் கேட்டரிங் சர்வீஸ் நபர்கள் கவுன்ட்டர்களுக்கு அருகிலே இருப்பர். உணவின் பெயர் அருகிலே எழுதப்பட்டிருக்கும்.

சில வகை கேட்டரர் என்னென்ன‌ உணவுகள் அங்கே இடம்பெற்றுள்ளன‌ என்ற மெனுவை உறவினர் கையில் வழங்கிவிடுகின்றனர். சூப்பில் துவங்கி டெசர்ட் வரை குறைந்தது பதினைந்து கவுன்ட்டர்களாவது இதில் இடம்பெற்றிருக்கும். மிகப் பெரிய வி.ஐ.பி. வீட்டுத் திருமணங்கள் ஆடம்பரத்துடன், திறந்தவெளித் திருமணங்களாக நிகழும்போது, அங்கே பஃபே முறையிலான உணவு பரிமாறல்கள் பார்க்க மிகவும் நாகரிகமாகத் தோன்றும். திறந்தவெளி ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில், அழகிய புல்வெளிகளில், வண்ண விளக்குகள் ஒளிர, இசையோடு ஆங்காங்கே வட்டவடிவில் இருக்கைகளில் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், உறவினர்களும், நண்பர்களும் கூடி மகிழ்வது திருமணத்தில் ஒருவிதமான மகிழ்ச்சியே.Post a Comment

Protected by WP Anti Spam