By 17 April 2018 0 Comments

மூலாடி!!(மகளிர் பக்கம்)

பெண் மைய சினிமா

பெண்களின் செயலூக்கம் கொண்ட பங்களிப்பில்லாமல் ஆப்பிரிக்காவின் முன்னேற்றம் இல்லை. அதற்கு முதலில் நம் முன்னோர்கள் பெண்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் அனைத்து மனப்படிமங்களையும், அனுமானங்களையும், கற்பிதங்களையும் தீயிலிட வேண்டும்.
– செம்பொன் ஒஸ்மான்

சில திரைப்படங்களை பார்க்கும் போது மட்டுமே நம் மனதில் ஒருவித கிளர்ச்சி ஏற்படும். அந்த மாதிரி கிளர்ச்சியை நம் மனதில் விதைக்கிற படங்களில் முக்கியமானது ‘மூலாடி’. படத்தின் கதை எளிமையானது. ஆப்பிரிக்காவின் அழகை எடுத்துக் காட்டும் ஓர் அழகான கிராமம். இருபது முப்பது வீடுகள். எங்கும் பசுமை. நவீன வாழ்க்கையின் எந்த அடையாளமும் அங்கில்லை. ஆண்கள் எல்லாம் வேலைக்கு வெளியூர் சென்றுவிட, பெண்கள் வீட்டை பராமரித்துக்கொண்டும், குழந்தைகளைக் கவனித்துக்கொண்டும், துணிகளைத் துவைத்துக்கொண்டும் என்று ஏதோவொரு வேலையை ஓய்வின்றி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

அங்கிருப்பவர்களின் ஒரே பொழுதுபோக்கு வானொலியில் பாடல்களை, செய்திகளைக் கேட்பது மட்டுமே. அந்த ஊரின் நடுவே கம்பீரமாக வீற்றிருக்கிறது களிமண்ணால் ஆன மசூதி ஒன்று. அதன் அருகில் நகரத்தில் இருந்து பொருட்களை வாங்கிவந்து கடை விரித்திருக்கிறான் ராணுவத்தில் பணியாற்றிய ஒருவன். அவன் பெண் பித்தன் என்பதால் எப்போதும் அங்கிருக்கும் இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரையும் சீண்டிக் கொண்டே இருக்கிறான்.
கடனுக்குப் பொருட்களைத் தருவதால் பெண்களும் அவனிடம் பணிந்து போகவே வேண்டியிருக்கிறது. அக்கிராமத்தில் கோலே என்ற கலகக்காரப் பெண்ணும் வசித்து வருகிறாள். அவள் கணவருக்கு மூன்று மனைவிகள். இரண்டாவது மனைவி தான் கோலே. அவளின் மூத்த பெண் திருமணத்துக்குத் தயாராக இருக்கிறாள். பிரான்சில் படித்து ஊர் திரும்பியிருக்கும் இளைஞன் ஒருவன் தான் அவளுக்காகப் பார்த்து வைக்கப் பட்டிருக்கும் மாப்பிள்ளை. ஆனால், அந்த ஊரில் பெண்களுக்குச் செய்யப்படும் ‘மூலாடி’ சடங்கை கோலேவின் மகள் செய்யவில்லை என்பதால் திருமணம் தடைபடுகிறது.

‘மூலாடி’ என்பது பெண்ணின் பிறப்புறுப்பை சிதைப்பது அல்லது பெண்ணின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றும் ஒரு சடங்கு. ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் இந்த வழக்கம் இப்போதும் பின்பற்றப்படுகிறது என்பது வேதனை. எந்தவித மருத்துவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் இது அரங்கேற்றப்படுகிறது. கத்தி, கத்தரிக்கோல் கிடைக்காதபோது கூர்மையான பாறைக் கற்கள்தான்.

ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் இதற்கு அதிகமாக பலியாகிறார்கள். இதைச் செய்வதன் மூலம் பெண் புனிதமடைகிறாள் என்பது அவர்களின் நம்பிக்கை. ஊரிலிருக்கும் வயதான பெண்களைக் கொண்டே இது நடத்தப் படுகிறது. இந்தச் சடங்கை செய்த பெண், வாழ்வில் ஒருபோதும் கலவி இன்பத்தை அனுபவிக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் சிறுநீர் கழிக்க சிரமப்பட வேண்டும். சடங்கின்போது உயிரிழப்பு கூட நிகழும். ஒரு பெண் என்பவள் கணவனைத் தவிர்த்து வேறு யாரிடமும் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது இதன் முக்கிய நோக்கம்.

கோலே ‘மூலாடி’க்கு எதிரானவள். அதனால் மகளுக்கு இந்த சடங்கைச் செய்ய அவள் அனுமதிக்கவில்லை. ஊரில் உள்ள சில சிறுமிகள் ‘மூலாடி’க்குப் பயந்து கோலேயிடம் தஞ்சமடைகின்றனர். அவளும் அவர்களுக்கு அடைக்கலம் தருகிறாள். இரண்டு சிறுமிகள் ‘மூலாடி’க்குப் பயந்து போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்நிலையில் கோலேயிடம் இருக்கும் சிறுமிகளுக்கும், அவளின் மூத்த மகளுக்கும் ‘மூலாடி’ செய்ய வேண்டும் என்று சடங்கு செய்யும் பெண்கள் முறையிடுகின்றனர்.

கோலே மறுக்கிறாள். பஞ்சாயத்து கூடுகிறது. கோலேயின் கணவனே அவளை சவுக்கால் அடித்து ‘மூலாடி’க்கு குழந்தைகளை அனுப்ப சம்மதிக்கச் சொல்கிறான். கோலே வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அடி வாங்கிக்கொண்டே அமைதியாக நிற்கிறாள். ஊரே வேடிக்கைப் பார்க்கிறது. அப்போது கோலே அடி வாங்குவதை பொறுக்க முடியாத ராணுவ வீரன் அதை தடுக்கிறான். அன்றைய இரவே அவன் கொல்லப்படுகிறான். ஊரே பதற்றமடைகிறது. வானொலியில் கண்ட கண்ட செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் கேட்டுத்தான் கோலே இப்படி நடந்துகொள்கிறாள்.

அதனால் பெண்களிடம் இருக்கும் வானொலியைப் பிடுங்கி தீயிலிட வேண்டும் என்று ஊர் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். பெண்களிடமிருந்து வானொலி வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு மசூதி முன் குவிக்கப்படுகிறது. இந் நிலையில் கோலேயிடம் தஞ்சமடைந்த ஒரு சிறுமி கடத்தப்பட்டு ‘மூலாடி’க்கு உட்படுத்தப்படும்போது இறந்துவிடுகிறாள். இது கோலேவுக்கு கோப மூட்டுகிறது.. இனியும் பொறுத்துப் போவதால் எதுவுமே நடக்காது. கையில் ஆயுதம் ஏந்துவதை தவிர வேறுவழியில்லை என்று கோலே முடிவு செய்கிறாள். மூலாடி என்பது சடங்கு இல்லை. அது கட்டாயமும் இல்லை. அது ஆணாதிக்கம் என்று சக மனுஷிகளுக்குப் புரிய வைக்கிறாள்.

அவளின் பேச்சைக்கேட்ட சடங்கு செய்யும் பெண்களும் கூட ‘மூலாடி’ செய்ய பயன்படுத்தும் கத்தியைக் கீழே போடுகின்றனர். மட்டுமல்ல, அவளைப் பின் தொடர்ந்து அதுவரைக்கும் அமைதியாக இருந்த எல்லாப் பெண்களும் செல்கின்றனர். கலகக்காரி கோலேயின் முன் ஆண்கள் வாயடைத்து போகிறார்கள் அவர் களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. வானொலி தீயிலிடப்பட்டு கரும்புகை மேலெழுகிறது. ஒரு வீட்டில் டி.வி. ஆண்டனா ஏற்றப்படுவதோடு படம் நிறைவடைகிறது. கேன்ஸ் உட்பட பல விருதுகளை குவித்திருக்கும் இந்தப்படத்தை இயக்கியவர் செம்பொன் ஒஸ்மான்.

‘ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை’ என்று புகழப்படுபவர். திரைப்படம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நிலத்திலிருந்து திரைப்படத்தை உருவாக்கியவர்.
வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில் ஆயிரம் பட்டங்களும் பதக்கங்களும் பெற்றவர் செம்பொன். அதிகம் படித்தவரில்லை. ஆரம்பத்தில் சிறுசிறு வேலைகளில் ஈடுபட்டு பின் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர். எழுத்தாளர்கள் தன் சமூகத்தில் உள்ள பிரச்னைகளையும், மக்களின் போராட் டங்களையும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அறியாமையையும் காட்டும் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்று எழுத்துத் துறைக்கு வந்தவர்.

மக்களின் பிரச் னைகளும் மற்ற அவலங்களுமே புத்த கங்களாக வெளிவந்தன. ஒஸ்மான் தன் எழுத்துக்கு உரித்தான அங்கீகாரமோ, பாராட்டுகளோ கிடைக்கவில்லை என வருந்தவில்லை. படிப்பறிவற்ற தன் மக்களுக்கு தான் சொல்ல வந்த கருத்துகள் சேரவில்லை என வருந்தினார். தன் எழுத்துகள் மக்களிடம் சேர வேண்டும். அவர்கள் விழிப் படைய வேண்டும் என்று எண்ணி திரைப் படத்துறைக்கு வந்தார். திரைப்படம் தான் சொல்ல வந்த கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கருவி என முடிவு செய்து ரஷ்யாவில் திரைப்படம் பற்றிக் கற்றார். அவருடைய எழுத்துகளே திரைப்படங்களாக மாறின.

இன்று நம் சமூகத்தை சீரழிக்கிற ஒரு கருவியாக நம் திரைப்படங்கள் இருக்கும்போது ஒஸ்மான் தன் சமூகத்தைச் சீர் செய்யும் ஒரு கருவியாக திரைப்படத்தைப் பயன்படுத்தினார். இவருடைய படைப்புகளில் மிகச் சிறந்ததும் முக்கியமானது ‘மூலாடி’. கலகத்தின் மூலமே எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்; பெண்கள் பணிந்து போவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. அவர்கள் துணிந்து நின்றால் ஆண்களால் எதுவும் செய்ய முடியாது என நம்பினார். அதையே தன் படங்களில் வெளிப்படுத்தினார். இந்தப் படத்தை ஒஸ்மான் இயக்கும்போது அவரின் வயது 81.Post a Comment

Protected by WP Anti Spam