By 16 April 2018 0 Comments

பேஸ்புக்: அந்தரங்கத்தை விற்கும் யோக்கியர்கள்!!(கட்டுரை)

ஜனநாயகத்தின் மீதிருந்த அற்ப நம்பிக்கையும் மெதுமெதுவாக மறைகிறது. தேர்தல்களின் ஜனநாயகத் தன்மை பற்றித் தொடராகக் கேள்விகள் எழுந்த சூழலில், சமூக வலைத்தளங்களின் தில்லுமுல்லுகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

அவை, ஒருபுறம் அரசியல் தேவைகளுக்காக, எவ்வாறு தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுவதும், மறுபுறம் பாவனையாளர்களின் அந்தரங்கத்தை விற்றுக் காசு பார்க்கும் செயலை மேற்கொள்வதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இவை, சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘பேஸ்புக்’ (facebook), தனது பயனாளிகளின் தகவல்களை, இன்னொரு நிறுவனத்துக்கு விற்றமை அண்மையில் தெரியவந்தது.

‘பேஸ்புக்’ தனது பயனாளிகளின் தரவுகள் அனைத்தையும் சேர்த்து வைத்திருப்பதும், அவற்றைப் பிற தேவைகளுக்காக விற்று, ஏராளமான வருவாயை ஈட்டியதும் இதன்மூலம் ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

இதைப்பற்றி, ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், வெறுமனே வருத்தம் தெரிவித்திருக்கிறார். தவறு நடந்ததை ஏற்க மறுத்ததோடு, அதற்காக மன்னிப்புப் கேட்கவும் மறுத்துள்ளார்.

இந்த மோசடியை, வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ‘குழலூதி’ கேம்பிரிஜ் அனலிடிக்கா (Cambridge Analytica) நிறுவன ஊழியரான கிறிஸ்தோபர் வைலி ஆவார்.

கேம்பிரிஜ் அனலிடிக்கா 50 மில்லியன் ‘பேஸ்புக்’ பயனாளிகளின் தகவல்களை, ‘பேஸ்புக்’கிலிருந்து பெற்றதாகவும் அதைப் பாவித்து, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தி, டொனல்ட் ட்ரம்ப் வெற்றிபெறப் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுதற்கான பிரச்சாரத்துக்கு வேலை செய்ததாகவும் சொல்கிறார். அத்துடன், ‘பேஸ்புக்’ வணிக நோக்கங்களுக்காகப் பயனர்களின் தகவல்களைச் சேமித்து, வியாபாரம் செய்வதுடன், அதற்கும் ஒரு படி மேலேசென்று, ‘பேஸ்புக்’ செயலி (app) தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாகவும் சொல்லியிருக்கிறார். இவை உலகளாவப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

அதேவேளை, கேம்பிரிஜ் அனலிடிக்காவின் செயற்பாடுகளை, அம்பலமாக்க விரும்பிய பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, ஓர் இரகசியத் திட்டத்தில் இறங்கியது. சனல் -4 ஊடகவியலாளர் ஒருவர், தன்னை இலங்கையைச் சேர்ந்த பணக்காரர் என்று கூறி, இலங்கையில் தேர்தலில் வெல்வதற்கு, கேம்பிரிஜ் அனலடிக்காவின் உதவியை நாடுகிறார்.

அவர்களுடனான தனது உரையாடல்களை இரகசிய கமெராவில் பதிவு செய்கிறார். இலங்கையைச் சேர்ந்த பணக்காரர் என்ற போர்வையில் இருக்கும் ஊடகவியலாளரைச் சந்திக்கும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸ், சர்வதேச அலுவல் இயக்குநர் ஆகிய உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து, “அரசியல் எதிரிகளுக்குப் பணம் கொடுப்பது, பெண்களை அனுப்புவது, அவற்றை ஒளிப்பதிவு செய்து மிரட்டுவது போன்றவற்றை அவர்கள் இலகுவாகச் செய்யலாம்” எனச் சொல்கிறார்.
அவர், “பொய்களைப் பரப்புவது, பொய்ச்செய்திகளை உற்பத்தி செய்வது, உண்மையற்ற விடயங்களை நம்பவைப்பது ஆகியவற்றையும் செய்ய முடியும்” என்கிறார்.

அதைத் தனது வாடிக்கையாளரிடம் விளக்கும் நிக்ஸ், “உணர்வுபூர்வமாக விடயங்களைக் கையாள்வது பிரதானம். தேர்தலில் உண்மைகளோ, தகவல்களோ பயனற்றவை. மற்றவர்களை விட, நாம் எவ்வாறு மக்கள் உணர்வுகளைக் கையாள்கிறோம் என்பதே முக்கியமானது” என்கிறார்.

அதேவேளை, நவீன தொழிநுட்பத்தின் உதவியுடன், மக்களின் மனநிலையை அறிந்து, அதைக் குறிவைத்து விளம்பரங்களையும் செய்திகளையும் தகவல்களையும் வழங்கி, மக்களின் சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தி, முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்” என்றும் கேம்பிரிஜ் அனலிடிக்கா நிர்வாகிகள், உரையாடலின் போது சொல்கிறார்கள்.

வாடிக்கையாளர்களுடன் தங்கள் உறவை, இரகசியமாகப் பேணுவதாகவும் தங்கள் வாடிக்கையாளர்களும் அதையே விரும்புவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

மேலும், மக்கள் மனத்தை அறியத் தாங்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதாகவும், உதாரணமாக , ஆய்வில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போலவும் உல்லாசப் பயணிகள் போலவும் தகவல்களைத் திரட்டலாம் எனவும் சனல்-4 வெளியிட்ட காணொளிகளில் தெரிகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த நைஜல் ஓக்ஸ் என்பவர், Strategic Communication Laboratories Group (SCLG) என்ற நிறுவனத்தை 1993ஆம் ஆண்டு தொடங்கினார்.

விளம்பரம் செய்வது, குறிப்பிட்ட பொருளுக்கான சந்தை வாய்ப்புகளை மதிப்பிடுவது உள்ளிட்ட சேவைகளை வழங்கிய இந்நிறுவனம், காலப்போக்கில் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தும் பணிகளில் ஈடுபட்டது.

குறிப்பாக 1999, 2000ஆம் ஆண்டுகளில் இந்தோனேசிய, தாய்லாந்து தேர்தல்களில் மேற்குலகு சார்பான ஆட்சிகள் உருவாக, வாய்ப்பான கருத்துவருவாக்கச் செயற்பாடுகளில் SCLG ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து SCLG அச்செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

கவனிக்க வேண்டியது யாதெனில், SCLG சந்தையில் இயங்காதபோதும், சந்தைகளைத் தேடும் பொருள்களுக்குச் சந்தையை ஏற்படுத்தும் பணியைச் செய்கின்றது. வேறு வகையில் சொன்னால், ஒரு பொருளுக்கு இல்லாத சந்தையை, உருவாக்கும் வேலையை அது செய்கிறது.

சந்தை உளவியலைக் கண்டறிவதன் மூலம், முன்னிறுத்த வேண்டிய பொருளுக்கு விளம்பரங்களையும் பொதுப்புத்தி மனநிலையையும் உருவாக்குகிறது.

உதாரணமாக, சில ஆண்டுகள் முன்பு வரை, தேங்காய் எண்ணெய்ப் பாவனை உடல் நலத்துக்குக் கேடு என வைத்தியர்கள் தெரிவித்தார்கள். சூரியகாந்தி எண்ணெய் தான் உகந்தது என்ற பிரச்சாரம் பெரியளவில் மேற்கொள்ளப்பட்டமை நினைவிருக்கலாம்.

பின்னர், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்கு உகந்தது என மிகுந்த சிரமத்துடன் மீள நிறுவப்பட்டது. எனினும், இப்போது இலங்கையில், பிற எண்ணெய்களுக்கான சந்தை உருவாகியுள்ளது. அதாவது, சில எண்ணெய்களுக்கு இல்லாத சந்தை உருவாக்கப்பட்டது.

தனது அரசியல் செயற்பாடுகளை நிறுத்திய SCLG, 2013ஆம் ஆண்டு ‘கேம்பிரிஜ் அனலிடிக்கா’ என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியது. அந்நிறுவனமே டொனல்ட் ட்ரம்பின் வெற்றிக்காகத் தகவல் திருட்டில் ஈடுபட்டது. இந் நிறுவனம், ‘பேஸ்புக்’குக்கான செயலி ஒன்றை வடிவமைத்ததன் மூலம், கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்தது.

இவ்வாறு சேகரித்த தரவுகளின் அடிப்படையில், அவர்கள் எவ்வாறான அரசியல் கண்ணோட்டம் உடையவர்கள் என்பதைக் கண்டறிந்து, அவ் விவரங்களின் அடிப்படையில் டொனல்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தை வடிவமைத்தது. இவ்விடத்தில், ‘குழலூதி’யான கிறிஸ்தோபர் வைலியின் பங்களிப்பை அறிவது முக்கியம். வைலியின் கதை கொஞ்சம் சுவையானது.

சிறுவயதில் அவதானக் குறைபாடு, மிகையியக்கக் குறைபாடு, கற்றற் குறைபாடு ஆகிய பிரச்சினைகளால் அவர் பதினாறு வயதில் பாடசாலைப்படிப்பை நிறுத்துகிறார். பதினெட்டு வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்துக்குத் தகவல் பகுப்பாய்வு ஆற்றிய பங்கைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் ஆர்வம் கொள்கிறார்.

தகவல் பகுப்பாய்வைத் தானாகவே கற்றுத் தேர்ந்த வைலி, பத்தொன்பது வயதில் கணனிக் குறிமுறைகளை (codes) எழுதக் கற்கிறார். தேர்தல்களில் தரவுப்பகுப்பாய்வின் பயனைக் கனடிய எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிவிக்கிறார்.

இதேகாலத்தில் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கல் கோஸின்ஸ்கி, டேவிட் ஸ்டில்வெல், தோர் கிரப்பெல் ஆகிய உளவியல் ஆராய்ச்சி மாணவர்கள், ஆளுமைத் திறனை மிகத் துல்லியமாக மதிப்பிடும் முறைகளை ஆராய்ந்தனர்.

இவர்கள் 2007ஆம் ஆண்டளவில் ‘பேஸ்புக்’ தளங்களில் இயங்கும் செயலிகள் சிலவற்றை உருவாக்கினர். இதில் Mypersonality எனும் வினாவிடைச் செயலி பிரபலமானது.

அச்செயலியின் பாவனையின்போது, அவ் வினாவிடையில் பங்கேற்றோரில் ஏறத்தாழ 40 சதவீதமானோர் தமது தனிப்பட்ட தகவல்களை அளிக்க முன்வந்தனர்.

அதன் அடிப்படையில், தங்கள் ஆய்வை மேற்கொண்ட அம் மூவரும் சமூக வலைத்தளங்களில் பெற்ற இலக்கத் தரவுகளைக் (digital data) கொண்டு, மனிதரை உளவியல் பகுத்தாய்வதன் சாத்தியங்களைத் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்தார்கள்.

இவை அரசியல், இராணுவ மட்டங்களில் முக்கிய கவனிப்பைப் பெற்றன. அதையடுத்து, மூவரும் தங்கள் ஆய்வின் அடுத்த கட்டமாக, கணனி அடிப்படை ஆளுமை மதிப்பீடுகள், மனிதர் செய்யும் மதிப்பீடுகளிலும் துல்லியமானவை என நிறுவும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.

இக்காலத்தில், ‘கேம்பிரிஜ் அனலிடிக்கா’வில் பணியாற்றிய வைலிக்கு, இது புதிய பாதையைக் காட்டியது. மின்தரவுகளைச் சேகரிப்பதே பிரதான பணி; தரவுகளைக் கொண்டே மக்களின் மனநிலையைப் பகுப்பாய முடியும் என வைலி, கேம்பிரிஜ் அனலிடிக்காவுக்கு அறிவுறுத்துகிறார்.

அந்நிறுவனம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் கோகன் என்பவரின் ‘குலோபல் சயன்ஸ் ரிஸேச்’ என்கிற நிறுவனத்தை, 2014ஆம் ஆண்டு நாடியது.

கோகனின் நிறுவனம், ‘this is your digital life’ எனும் ஆளுமைப் பரிசோதனை வினா-விடைச் செயலி ஒன்றை உருவாக்குகின்றது.

அதன் மூலம், அந்தச் செயலியில் பங்கேற்றோர் மட்டுமின்றி, அவர்களின் ‘பேஸ்புக்’ நண்பர்கள் பட்டியலில் இருந்த பயனர்கள் உட்பட, ஏறத்தாழ 5.12 கோடி அமெரிக்கப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அலெக்சாண்டர் கோகனின் நிறுவனத்தின் மூலம், மின்தரவுகளைப் பெற்ற கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா, கோஸின்ஸ்கி, ஸ்டில்வெல், கிரப்பெல் ஆகியோரின் கோட்பாடுகளின் அடிப்படையில், வைலி உருவாக்கிய மின்தரவுப் பகுப்பாய்வுச் செய்நிரல்களைக் கொண்டு அத்தரவுகளை ஆராய்ந்தது.

அந்த ஆய்வின் முடிவுகளின்படி, ட்ரம்பின் தேர்தல் பிரசாரக் குழுவுக்கு அறிக்கை வழங்கப்பட்டது. எந்த வாக்காளரை எப்படிக் கவர்வது, ட்ரம்ப் பற்றிய நல்லெண்ணங்களை உருவாக்க எம்மாதிரியான உத்திகளைக் கையாள்வது போன்ற விவரங்கள் இத்தரவுப் பகுப்பாய்வு மூலம் தெரிந்தன. இவ்விடயங்கள் இப்போது பகிரங்கமாகியுள்ளன.

இப்பின்புலத்தில், கவனிக்கத்தக்க சில விடயங்கள் உள்ளன. முதலாவது, செய்தி ஊடகங்கள் தங்கள் நம்பகத்தன்மையை இழந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் அவ்விடத்தை நிரப்பின.
அதனால்,‘பேஸ்புக்’ போன்றவற்றில் வரும் செய்திகளை மக்கள் அதிகம் நம்புகிறார்கள்.

பல கருத்துக் கணிப்புகள் இதை உறுதிப்படுத்தின. கடந்த ஆண்டு வெளிவந்த ஒரு Gallup கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கர்களில் 32 சதவீதத்தினரே ‘செய்திகளை முழுமையாக, துல்லியமாக, நியாயமாகத் தெரிவிப்பதில்’ வெகுசன ஊடகங்கள் மீது நம்பிக்கை தெரிவித்தனர்.

PEW ஆய்வு நடத்திய கருத்துக் கணிப்பின்படி, செய்திகளைப் படிப்பதற்குச் சமூக ஊடகப் பயன்பாடு, அமெரிக்க மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை எட்டியுள்ளதோடு, சமூக ஊடகங்கள், உலகளாவச் செய்திகளை அறிவதற்கான பிரதான ஊடகமாகியுள்ளன.

‘பேஸ்புக்’கினதும் ஏனைய சமூக ஊடகங்களினதும் வளர்ச்சி, வெகுஜன ஊடக நிறுவனங்கள் மூலம் கிடையாத தகவல்களையும் கண்ணோட்டங்களையும் பயனர்கள் அடைய அவை அனுமதிக்கும் காரணத்தாலேயாகும். ஆனால், இப்போது அதுவும் மெதுமெதுவாக மாறுகிறது.

இரண்டாவது, உளவுத்துறை அமைப்புகளும் அரசுகளுடன் நெருங்கி இயங்கும் ‘பேஸ்புக்’, ‘கூகிள்’, ‘ட்வீட்டர்’ போன்ற சமூக ஊடக நிறுவனங்களும் தணிக்கையினதும் ஒடுக்குமுறையினதும் கருவிகளாகுமாறு, தகவல் தொடர்பு இயங்குமுறைகளில் அவற்றின் வகிபாகத்தைப் பாவிக்க முயல்கின்றன.

மூன்றாவது, ‘பேஸ்புக்’ அதிகாரபூர்வச் சொல்லாடல்களை ஊக்குவிப்பதும் அவற்றை ஐயத்துக்கு உட்படுத்தும் சுதந்திர செய்தி ஆதாரங்களை முடக்குவதும் தனது நோக்கமென்று அறிவித்துள்ளது. எனவே ‘பேஸ்புக்’ இனியும் மாற்றுக் கருத்துக் களமாயிராது என்பது வெளிப்படை.

‘பேஸ்புக்’ பற்றி அண்மையில் சான்றுகளுடன் நிறுவப்பட்ட விடயங்கள், ‘பேஸ்புக்’கில் பயனர் கணக்கை வைத்திருப்பதன் அபாயங்களைப் பகிரங்கமாக்கியுள்ளன.

இதை விளங்க, அண்மையில் ‘பேஸ்புக்’ நிறுவனரின் கூற்றே போதுமானது. மார்க் ஸூக்கர்பெர்க் ‘பேஸ்புக்’கில் அனைத்துத் தரவுகளது கருத்தையும் விளங்குவதே, நமது நோக்கம். அதை நாம் செயற்கை அறிவின் உதவியுடன் மேற்கொள்கிறோம். ஒவ்வொரு பதிவும் புகைப்படமும் காணொளியும் செய்தியும் கருத்துரையும் உணர்வு வெளிப்பாடும் பகிர்வுகளும் ‘பாதகமான’ உள்ளடக்கமா எனப் பகுத்தாராயவும் தேவையெனக் கருதின் பொலிஸுக்கும் உளவுத்துறை முகாமைகளுக்கும் தகவல் தெரிவிக்குமாறு எமது நிறுவனத்தின் அதிவலிய கணனி முறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இவர்கள் ஒருபுறம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்றுக் காசு பார்க்கிறார்கள்.
இன்னொருபுறம் கண்காணிப்புக் கருவியாகச் செயற்படுகிறார்கள்.

எமது அந்தரங்கத்தை நாம் பாதுகாப்போமா, எம்மைக் கண்காணிக்க அனுமதிப்போமா என்பதைச் சமூக ஊடகப் பயனர்கள் தீர்மானிக்க வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam