By 22 April 2018 0 Comments

அடாவடியினதும் அராஜகத்தினதும் கதை: இஸ்‌ரேல்@70!!( கட்டுரை )

சில தேசங்களின் இருப்பு என்றென்றைக்குமானது அல்ல; அநீதியின் பெயரால் நிறுவப்பட்ட அரசுகள் அச்சத்துடனேயே வாழச் சபிக்கப்பட்டன.

எவ்வளவு இராணுவ பலம் இருந்தாலும், உலகின் வலிய நாடுகளின் ஆதரவு இருந்தாலும் அநீதியின் வழியில் பயணப்படும் நாடுகளுக்கு, அமைதியான வாழ்வு என்றைக்கும் சாத்தியமல்ல.

இன்று இஸ்‌ரேல், தனது உருவாக்கத்தின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இஸ்‌ரேலின் கதையை இங்கு சொல்வதற்கு முக்கிய காரணமொன்றுண்டு.

இஸ்‌ரேலிய விடுதலையைப் போலவே, தமிழர்களும் தமிழீழத்தை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை காலங்காலமாக தமிழ்ச் சமூகத்தில் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இன்னமும் இஸ்‌ரேலிய உதாரணத்தைக் காட்டி, ‘தனிநாட்டின் சாத்தியம்’ குறித்து நம்பிக்கை வளர்ப்பவர்கள் உள்ளார்கள்.

ஒருபுறம், இந்நாள் இஸ்‌ரேலின் வெற்றி நாளாகக் கொண்டாடப்படும் அதேவேளை, மறுபுறம் இந்நாள், பல இலட்சக்கணக்கான அராபியர்களுக்குத் தமது மண் மீதான உரிமை மறுக்கப்பட்ட நாள். தங்கள் வீடுகளிலிருந்தும் பயிர் நிலங்களிலிருந்தும் வன்முறையாலும் வஞ்சகத்தாலும் விரட்டப்பட்டதைச் சட்டபூர்வமாக்கிய, கொடுமையான நாளாக நினைவு கூரப்படுகிறது.

இன்றும் நாடற்றவர்களாகப் பலஸ்தீனர்கள் உள்ளார்கள்; அகதி முகாம்களில் வசிக்கிறார்கள். அவர்களது நிலம் இஸ்‌ரேலிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இஸ்‌ரேலிய முற்றுகைக்குள்ளும் கண்காணிப்புக்குள்ளும் வாழ்கிறார்கள்.

இது அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்புகிறது. தமிழர்கள், தங்களை யாருடன் ஒப்பிட முடியும் என்பதே அக்கேள்வி. அடக்குமுறையாளனாகவும் உரிமை மறுப்பாளனாகவும் உள்ள இஸ்‌ரேலுடனா, அல்லது தமிழர்கள் போல் ஒடுக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுடனா?

1950களில், குறிப்பாக 1961 சத்தியாக்கிரகத்தின் தோல்வியை அடுத்து, ஏற்பட்ட திகைப்பின் தொடர்ச்சியாக, நமக்கு முன்னுதாரணமான ஒரு நாடாக இஸ்‌ரேல் காட்டப்பட்டது.

இஸ்‌ரேல் இயற்றி வந்த கொடுமைகள் பற்றிப் பேச, இஸ்‌ரேலின் உருவாக்கம் எவ்வளவு அநீதியானது என்று நமக்குச் சொல்லப்பட்டதில்லை. ‘மீண்டும் ஒருமுறை ஆளுகிறார்கள்’ என்ற அந்தப் ‘பொதுமை’ தமக்குப் போதுமானதாகவே தலைவர்களுக்குத் தெரிந்தது. நமது நிலை, பலஸ்தீனத்தின் அராபியர்களது போன்றது என்பதையும் அந்த ஒற்றுமை, பல வகைகளிலும் பொருந்தி வருகிறது என்பதையும் நாம் காலங்கடந்தே உணர முடிந்தது.

எனினும், அதுகூட அதிக காலம் நிலைக்கவில்லை. பலஸ்தீன விடுதலை இயக்கம், சர்வதேச அங்கிகாரம் பெறும் வரை, பலஸ்தீன மக்களுடன் தமிழ்த் தேசியவாதிகளுக்கு அனுதாபம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

தமிழ் இளைஞர் இயக்கங்களுக்கு, பலஸ்தீன விடுதலை இயக்கங்கள் வழங்கிய ஆதரவுக்குப் பல பின்னணிகள் இருந்தன.அந்தப் பின்னணிகளினூடு கொஞ்சமாவது புரிதல் இருந்து. அந்த வழி வந்த நல்லுறவு, பின்னர் கட்டி எழுப்பப்படவில்லை. மாறாக, இஸ்‌ரேலியக் கனாவுக்குள் நாம் அமிழ்ந்து போனோம்.

விடுதலைப் போராட்டங்கள், அறம் பற்றியன. அறம் சார்ந்த பார்வையால் வழிநடத்தப்படாத விடுதலைப் போராட்டங்கள் வென்றதில்லை. குறுகிய கால வெற்றிகள், தோல்விக்கே இட்டுச் செல்கின்றன. அறம் என்று முழு உலகுக்கும் பொதுவானதாக உள்ளதென, எதையும் கருத முடியவில்லை.

மனித சமத்துவம், மனிதரது அடிப்படை உரிமைகள் என்கிற அடிப்படைகளில் நோக்கும்போது, நமது இருப்பின் அடிப்படையில் சில முடிவுகளுக்கு வர இயலும். அந்த அறம், தேசங்களின் விடுதலையையும் நாடுகளின் சுதந்திரத்தையும் ஏற்கும். மனிதரை, மனிதர் அடக்கி ஒடுக்குவதையும் பல மனிதரின் உழைப்பைச் சிலர் சுரண்டிப் பறிப்பதையும் மறுக்கும். நீதிக்காகப் போராடச் சொல்லும்.

தமிழ்த் தேசியவாதம், தமிழரின் மொழி உரிமைபற்றிப் பேசத் தொடங்கிய காலம் தொட்டு, தனிநாடு கேட்கிற நிலைக்குத் தள்ளப்படுகிற வரையும், அதற்கு அப்பாலும், எத்தகைய அறம் சார்ந்த பார்வையைக் கொண்டிருந்தது?

தமிழர், ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற உண்மை இன்னமும் நமக்கு உறைக்கவில்லை. இன்னமும், ஆண்ட பரம்பரைக் கனவுக்குள் திரும்பத் திரும்ப அமிழ்த்தப்படுகிறோம். நம்மில் சிலருக்கு, அந்தக் கனவுக்கும் நிஜ வாழ்வுக்கும் வேறுபாடு தெரியாது.

இன்னமும் நமக்குச் சொல்லப்பட்டுவந்த மூவேந்தர், முச்சங்கம் என்பன பற்றிய புனைவுகளையே வரலாறாக நம்புகிறோம்.தமிழ், நமது கண்முன்னால் சீரழிகிறது.ஆனாலும், அதன் தொன்மையையும் தூய்மையையும் மேன்மைகளையும் பற்றிய புனைவுகளில் மகிழ்ச்சி அடைகிறோம்.

‘பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை’ என்பது தான், தமிழர் இருப்பின் யதார்த்தம். அது மாற வேண்டும். அதை மாற்றுவதால் நமது உண்மையான நிலை, நமக்கு விளங்க வேண்டும்.

உரிமைக்கான போராட்டம், விடுதலைக்கான போராட்டமாக வளர்ந்து, இப்போது இருப்புக்கே போராட வேண்டிய நிலையில், தமிழ்ச் சமூகம் உள்ளது. இதற்கான பழியைக் குறிப்பாக எவர் மீதும் சுமத்துவது சரியாகாது.

தமிழ்ச் சமூகம், தனது விடுதலைக்கான பொறுப்பை, முற்றிலும் தன் வசமாக்காத வரை, தவறுகள் தவிர்க்க இயலாதவை.

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற வகையில், நமது நிலை என்ன? நம்மையொத்த நிலையில் உள்ள, உலகின் பிற மக்கள் யார்? நாம் யாருடன் நம்மை அடையாளப்படுத்துவது? இந்த மாதிரி விடயங்களில், சரியான பாதையை வந்தடைய, நமக்கு உலக நிலைமைகள் பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும். நமது வரலாறு பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும். அவை, ஏன் சொல்லப்படுவதில்லை என்பதை, நாம் கவனமாக ஆராய வேண்டும்.

இஸ்‌ரேலின் கதை, பலஸ்தீனர்களின் துயரத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இஸ்‌ரேலின் உருவாக்கத்தின் பின்பும், அராபியர்களை வெளியேற்றுவது தொடர்ந்தது. இஸ்‌ரேலின் பாதுகாப்பு என்கிற பேரில், இஸ்‌ரேலிய அரசாங்கங்கள் ஆளுங்கட்சி வேறுபாடின்றி, இஸ்‌ரேலின் பரப்பளவை விஸ்தரித்துக் கொண்டே போயினர்.

1967இல் இஸ்‌ரேலின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட நிலப்பரப்பில், சினாய் என்கிற பெருமளவும் பாலை நிலமான, எகிப்தியப் பகுதி மட்டுமே மீட்கப்பட்டது. 1974இல் அதைப் போர் மூலம் இயலுமாக்கிய எகிப்து அரசாங்கத்தில் ஏற்பட்ட உள்மாற்றங்கள், அமெரிக்காவின் அடிமையாகவும் இஸ்‌ரேலின் அடிமையாகவும் எகிப்தை மாற்றின.

பாலஸ்தீனத்தின் கிழக்கு எல்லையில் அமைந்த ஜோர்தானிய மன்னராட்சி, எப்போதுமே அமெரிக்க விசுவாசமுடையதாகவும் உள்நாட்டில் பகைமையைச் சம்பாதிக்காமல் இருக்க, இஸ்‌ரேலை அங்கிகரிக்காமல் இருப்பதாக வேடம் காட்டி வந்தது. ஆயினும், தனது மண்ணில் இருந்த அகதி முகாங்களில் வாழ்ந்து வந்த, பலஸ்தீன அகதிகளையும் குறிப்பாக விடுதலைப் போராளிகளையும் அடக்கி வைப்பதில் மிகுந்த கவனம் காட்டியது.

எனவே, பலஸ்தீன மக்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிரான சக்திகளே, பலஸ்தீனத்தை அண்டிய எல்லாப் பகுதிகளிலும் அதிகாரத்தில் இருந்தனர். பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக 1954இல் எகிப்தில் ஆட்சிக்கு வந்த நாசரின் அரசாங்கம் இருந்தது. 1960களில் ஈராக், சிரியா ஆகிய நாடுகளிலும் ஆதரவான புதிய ஆட்சிகள் உருவாகியிருந்தன.

இம்மூன்று நாடுகளிலும் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டதால், சிறிது வெகுசன ஆதரவுடனான கட்சிகள் இருந்தாலும், அவை ஜனநாயக ஆட்சிகளாக இருக்கவில்லை என்பது ஒரு பலவீனம்.

லெபனானின் பல மத, பல இனச் சமூக அமைப்பால், அங்கு சமூக முரண்பாடுகள் தோற்றம்பெறும் சூழ்நிலை நிலவியது. மற்ற அரபு நாடுகளும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகத் தோற்றம் காட்டினாலும், ஏகப் பெரும்பாலான ஆட்சிகள், அமெரிக்க ஆதரவில் தங்கியிருந்த அடக்குமுறை அரசுகளாகவே இருந்தன.

அவற்றில் என்ணெய் வளம் மிகுந்த சவூதி அரேபியா முக்கியமானது. சிரியாவும் ஈராக்கும் காலப்போக்கில் தமக்குள் முரண்பட்டன. இவ்வாறான நிலைமைகளில் கீழ், பலஸ்தீனத்தில் உருவான விடுதலை இயக்கங்கள் ஒவ்வொன்றின் மீதும், ஒவ்வோர் அரசாங்கமும் ஏதோ ஒரு வகையில் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது.

இஸ்‌ரேலின் 1967ஆம் ஆண்டுப் போரின் பின்னரே, பலஸ்தீனத்தில் ஒரு வலுவான தேசிய விடுதலை இயக்கம் உருவானது. வேறுபட்டு நின்ற பல்வேறு, பலஸ்தீன விடுதலைப் போராளி அமைப்புகள், ‘பலஸ்தீன விடுதலை இயக்கம்’ என்கிற ஒரு பொதுவான அமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்தன.

‘அல் ஃபதா’ என்கிற மதச்சார்பற்ற அமைப்பே, அனைத்திலும் பெரிதாயும் வலிதானதாகவும் இருந்தது. அதன் தலைவரான யாசிர் அரபாத், பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரானார். 1970கள் பலஸ்தீன விடுதலை நிறுவனத்தின் எழுச்சி மிக்க ஆண்டுகளாயின.

பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூலம் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஒரு புறமிருக்க, 1970களில் மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட விடுதலை எழுச்சிகளுக்கு, பலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் பல நாடுகள் அங்கிகரிக்கவும் ஐ.நா சபையில், அதனால் பங்குபற்றவும் இயலுமாக்கின. எனினும் 1970களின் இறுதிப்பகுதியில், ஏகாதிபத்தியம் தன்னை மீளவும் நிலைநிறுத்திக் கொண்டது.

இந்தப் பின்னணியிலேயே, மத்திய கிழக்கில், அமெரிக்காவின் மேலாதிக்க வேலைத்திட்டத்தை, நிறைவு செய்யும் முன்னணிப் படையாக இஸ்‌ரேல் கட்டியெழுப்பப்பட்டது.

1948 முதலே, ஏகாதிபத்திய நலன்களை முன்னிறுத்திச் செயற்பட்ட இஸ்‌ரேல், தனது பாதுகாப்பு என்ற போர்வையில், அண்டை நாடுகளான எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் இஸ்‌ரேலியக் குறுக்கீடுகள் அதிகரித்து வந்தன. இவ்வாறு, எல்லை தாண்டி, முழுப் பிராந்தியத்தின் மீதும், தனது இலக்குகளை வைக்கத் தொடங்கியதற்கான காரணம், ஒரு போதுமே இஸ்‌ரேலின் பாதுகாப்பு அல்ல. இன்று மத்திய கிழக்கில், அமெரிக்காவின் நம்பிக்கையான அடியாள் இஸ்‌ரேல்.

இஸ்‌ரேல் பற்றிப் பேசும்போது, பலஸ்தீனம் பற்றிப் பேசுவது தவிர்க்க இயலாதது. உலகில் மிக நீண்ட காலமாக, அடக்குமுறைக்கு ஆட்பட்டிருக்கும் சமூகமாக, பலஸ்தீன சமூகம் இருந்து வருகின்றது.
பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புகள், பொருள் இழப்புகள், நிலப்பறிப்புகள் போன்ற பலவற்றையும் தாண்டி, இஸ்‌ரேலிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ‘சியோனிச’ சண்டித்தனத்துக்கு எதிராகவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக, பலஸ்தீன மக்கள் போராடி வருகிறார்கள்.

இஸ்‌ரேலின் படுகொலைகளும் தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களும் பலஸ்தீன மக்களின் மனவுறுதியைப் பாதிக்கவில்லை. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், சகலவிதமான போராட்டக் கருவிகளையும் அவர்கள் கையிலெடுக்கிறார்கள். உலகெங்கும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரமூட்டுகிறார்கள்.

பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம், அரபு மக்களின் விடுதலையின் முக்கியமான ஒரு குறியீடாக உள்ளது. பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம், உலகில் முஸ்லிம் மக்கள், எதிர்நோக்குகின்ற ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான, பிரதான சவாலாகவும் இருக்கிறது.

ஆனால், அரபு மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமே உரியதாக இதைக் கொள்ளக்கூடாது. ஏனெனில், உலகளாவிய ரீதியில், ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை, இனவாதம், பாஸிஸ அடக்குமுறை போன்ற பல்வேறு கொடுமைகளுக்கும் எதிரான போராட்டங்களின் பொதுவான குறியீடாகும்.
இதுவரை, பலஸ்தீன மண்ணில், இஸ்‌ரேல் விளைவித்த சேதங்களுக்கு நிவாரணமோ, நஷ்டஈடோ பற்றி எதுவுமே பேசப்படவில்லை. இனியும் எதுவுமே பேசப்பட மாட்டாது. இஸ்‌ரேலின் பாதுகாப்பு என்கிற போர்வையில், மத்திய கிழக்கில் தனது குறுக்கீட்டை வலுப்படுத்துகிற அமெரிக்காவின் உண்மையான நோக்கங்கள், மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் தொடர்பானது. இந்த இடத்தில்தான், பலஸ்தீன மக்களைப் பற்றிய ‘சர்வதேச’ அக்கறை, நமக்குச் சில பாடங்களைக் கற்பிக்கிறது. அவை மிகவும் முக்கியமான பாடங்கள்.

ஒடுக்குபவனும் ஒடுக்கப்படுபவனும் இருக்கின்ற சூழலில், யாருடைய ஆதரவு எமக்குத் தேவை என்பது பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்பினால், எல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறவர்களும் மற்றவரை நம்பப் பண்ணுகிறவர்களும் இருக்கிறார்கள். நம்புகிறவர்களை விட, நம்பச் சொல்லுகிறவர்கள் ஆபத்தானவர்கள்.

இஸ்‌ரேலின் கொடுமைகளை எதிர்க்கத் தவறுபவர்கள், உலகில் நடக்கிற எந்தக் கொடுமையையும் ஆதரிக்கக் கூடியவர்கள் என்பதை நாம் மறக்கலாகாது. உள்ளபடி சொல்வதென்றால், மனச்சாட்சியையும் நீதியையும் கொன்றவர்களால்தான், இஸ்‌ரேலுக்கு ஆதரவாகப் பேசவோ, எழுதவோ முடியும்.

இங்கே சொல்ல வேண்டிய, இன்னொரு மிக முக்கியமான செய்தி ஒன்றும் பொதிந்துள்ளது. இஸ்‌ரேலிய அரசு நடத்துகிற கொடுமைகளுக்கு எதிரான குரல்கள், எப்போதுமே இஸ்‌ரேலுக்குள் இருந்தே, எழுந்து வந்துள்ளன.

எனினும், சரிக்கும், பிழைக்கும், நியாயத்துக்கும், அநியாயத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமூகமாக இஸ்‌ரேல் சீரழிந்து வந்துள்ளது. பலஸ்தீன மக்களுடைய உரிமைகள், முற்றாக வழங்கப்படாத வரை, இஸ்‌ரேலுக்கு அமைதியோ, பாதுகாப்போ இல்லை என்பதை இஸ்‌ரேலிய மக்கள் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.

‘பலஸ்தீன பயங்கரவாதம்’ என்று, இஸ்‌ரேல் அரசு சொல்லுகிற காரணத்தை, ஒரு சமுகம் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டதன் விளைவுதான் இது என்பதைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். இப்போதெல்லாம், இஸ்‌ரேலியப் படையினர் செய்கிற எதற்கும், நியாயம் தேவையில்லை என்றாகிவிட்டது.

இஸ்‌ரேலின் இன்றைய அப்பட்டமான இனவெறிப் போக்கு வலுப்பெற்று, நாட்டின் ஆதிக்கச் சிந்தனையாவதற்கு, எவ்வாறு அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் உதவின என்பதற்கும் மேலாக, இப்போக்கு எப்படி இஸ்‌ரேலிய சமுதாயத்தை ஜனநாயகமற்ற ஒன்றாகச் சீரழித்துள்ளது என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது. இதன் பலாபலன்களையும் தீமைகளையும் மௌனம் காக்கும் இஸ்‌ரேலிய மக்களே அனுபவிப்பர். இது நாம் கற்க வேண்டியதொரு பாடம்.Post a Comment

Protected by WP Anti Spam