அமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்!!(கட்டுரை)

Read Time:19 Minute, 12 Second

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 140)

தமிழ் இளைஞர்கள், ஆயுத வழியிலான பயங்கரவாதத்தை முன்னெடுத்தமை பெரும் தவறு. அதை அவர்கள் செய்திருக்காவிட்டால், இந்த இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்பது, இலங்கை இனப்பிரச்சினை பற்றிப் பேசும் பலரும், பொதுவாகக் கூறும் கருத்தாகும்.

நீண்டதோர் அரசியல் வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் அனைவரும் முழுமையாக அறிந்திருக்க முடியாது. இந்த யதார்த்தத்தையும் பயங்கரவாதத்துக்கு எதிரான இயல்பான மனோநிலையையும் ஒன்றிணைந்ததால் உருவான கருத்து இதுவாகும். ஆனால், இந்தக் கருத்துக்குள் ஒளிந்திருக்கும் இன்னோர் உட்பொருளில்தான், ‘தந்திரமான அரசியல்’ ஒளிந்திருக்கிறது.

தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத வழியில் சென்றதுதான் பிரச்சினை; இல்லையென்றால் இதைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்று மட்டும் சொல்லும்போது, தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத வழியில் செல்வதை, அரசாங்கம் விரும்பவில்லை.

மாறாக, பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு அரசாங்கம் தயாராக இருந்தது என்ற தோற்றப்பாடு, இங்கு உருவாக்கப்படுகிறது.

ஆனால், வரலாற்றுப் பக்கங்களை உற்று நோக்கும் போது, ஜே.ஆர் அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம், சர்வகட்சி மாநாட்டின் ஊடாகத் தீர்வொன்றை எட்டுவதில், அக்கறை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.

மாறாக, தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளாக இருந்த, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை ஓரங்கட்டுவதிலேயே குறியாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் ஓரங்கட்டப்பட்டு, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முன்னிறுத்தப்பட்டால், பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற வாதத்தை முன்வைத்து, இராணுவ ரீதியில் தமிழ் இளைஞர்களை எதிர்கொள்ள முடியும்.

ஜே.ஆர் அரசாங்கத்தின் நோக்கம், பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வாக இருந்திருந்தால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசி, இனநெருக்கடிக்குத் தீர்வை, மிக எளிதாக ஜே.ஆர் சாதித்திருக்கலாம்.

மாறாக, சர்வகட்சி மாநாட்டில் ஆராய்ந்தவற்றை, மீண்டும் மீண்டும் ஆராயக் குழுக்கள் அமைத்து வந்ததும், தமிழர் தரப்பு, பிராந்திய சபைகள் கோரியிருந்த நிலையில், அதற்கு சம்பந்தமில்லாமல், நாடாளுமன்றத்தில் இரண்டாம் அவையொன்றை உருவாக்குவது தொடர்பிலான முன்மொழிவுகளை மட்டும் முன்வைத்ததும், சர்வ கட்சி மாநாட்டை ஜே.ஆர் கால இழுத்தடிப்புக்கு மட்டும் பயன்படுத்தினார் என்ற கருத்தை வலுப்படுத்துவதாகவே அமைகிறது.

‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின், முதலாவது ஆண்டு நினைவையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, 1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடத்திய உண்ணாவிரத சத்தியாக்கிரகப் போராட்டம், அங்கு நடந்த சம்பவங்கள், அதற்குப் பின்னரான ஜே.ஆர் அரசாங்கத்தின் கருத்துகளும் நடவடிக்கைகளும், ஜே.ஆர் அரசாங்கத்தின் உண்மையான உள்நோக்கத்தை, வௌிப்படையாகப் பறை சாற்றுவனவாக அமைந்தன.

ஆரம்பமே அதிர்ச்சி

1984 ஜூலை 25ஆம் திகதி, யாழ்ப்பாணம் வீரமாகாளியம்மன் கோவிலின் முன்றலில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகம் இடம்பெறவிருந்த நிலையில், அதில் எவரும் கலந்துகொள்ளக்கூடாது என்பது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் நிலைப்பாடாக இருந்தது.

சத்தியாக்கிரகம் நடைபெறவிருந்த, 25ஆம் திகதி அதிகாலையே, வீரமாகாளியம்மன் கோவிலுக்கு அருகில் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டது.

சத்தியாக்கிரகத்தில் மக்கள் பங்குபற்றுவதைத் தடுக்க, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் இதனை நடத்தியிருக்கலாம் என்பது, பலரினதும் கருத்தாகும். காலை ஏழு மணியளவில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அவரது மனைவி மங்கையற்கரசி, எம்.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள், சத்தியாக்கிரகம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சமுகமளித்திருந்தனர்.

அவர்கள் அங்கு வருகை தந்தபோது, ஏறத்தாழ 200 பேரளவிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். ஒப்பீட்டளவில் இது மிகச் சிறிய எண்ணிக்கையாகும். இந்தச் சத்தியாக்கிரகத்தின் ஆரம்பமே சிறப்பிழந்து அமைந்திருந்தது.

கேள்விக் கணைகளால் சூழப்பட்ட அமிர்

வீரமாகாளியம்மன் கோவிலின் முன்றலில், அமிர்தலிங்கம் தலைமையில் அனைவரும் சப்பாணி கட்டியமர்ந்து, வழிபாடு, நினைவேந்தல், உண்ணாவிரதம் ஆகியவற்றுடன் சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தனர்.

சத்தியாக்கிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென்று வருகை தரத்தொடங்கிய இளைஞர் கூட்டமொன்று, சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்டது.

சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்கள், சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களிடம், சரமாரியாகக் கடுந்தொனியில் கேள்வியெழுப்பத் தொடங்கினார்கள்.

“நீங்கள் இவ்வளவு நாட்களும் எங்கே இருந்தீர்கள்? இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை, தனியாக இராணுவத்தை எதிர்கொள்ள விட்டுவிட்டு, நீங்கள் இந்தியாவில் சொகுசாகத் தானே இருந்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள், ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு மேலாக, இந்தியாவில் தங்கியிருந்ததன் நியாயத்தை, அவர்கள் கேட்டார்கள்.

“தமிழ் மக்கள், மீண்டும் மீண்டும் சிங்கள அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்படுவதைதான் நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் விருப்பத்தை மீறி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியதன் நியாயத்தையும் அந்த இளைஞர் குழு கேட்டது.

தொடர்ந்து, “தமிழ் மக்களாகிய நாம், உங்களை ‘தமிழீழம்’ என்ற தனி அரசை அமைப்பதற்கான மக்களாணையோடு, எமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருந்தோம். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களை யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கச் சொன்னது? உங்களுக்குத் தனிநாட்டை அமைப்பதற்காக இயங்குவது, சாத்தியமில்லை என்றால், உங்கள் நாடாளுமன்றப் பதவிகளை நீங்கள் ஏன் இராஜினாமாச் செய்யவில்லை” போன்ற சரமாரியான கேள்விக் கணைகளால், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் துளைத்தெடுக்கப்பட்டார்கள். அவர்களைப் பதில் கூறக் கூட, இளைஞர் குழு அனுமதிக்கவில்லை.

பதில் கூற முனைந்தவர்களை, இடைமறித்த இளைஞர்கள், “தேவைக்கதிகமாகவே நீங்கள் பேசிவிட்டீர்கள்; அதனை தேவைக்கதிகமாகவே நாங்களும் கேட்டுவிட்டோம். இது மக்கள் பேசவேண்டிய நேரம்; அவர்களைப் பேசவிடுங்கள்” என்று கடுந்தொனியில் கூறியிருந்தார்கள்.

கேள்விகளும் நியாயங்களும்

அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்களைக் கேள்விகளால் அதட்டிய இளைஞர்களின், சில கேள்விகளில் நியாயம் இருக்கிறது. ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, பாதுகாப்பு என்பது பெருங்காரணமாக இருந்தாலும், ஏறத்தாழ ஆறு மாதகாலமளவுக்கு மக்களை, நட்டாற்றில் விட்டு விட்டுத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள், இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்தமை, அவர்கள் என்ன நியாயம் கற்பித்தாலும், ஏற்றுக் கொள்ளமுடியாததே.

தலைவன் என்பவன், மக்களை அரணாகக் கொண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொள்பவன் அல்ல; மாறாக, தான் அரணாக இருந்து, மக்களைப் பாதுகாப்பவன்.

ஒரு பெரும் இன அழிப்பு நடந்தபோது, அதிலிருந்து உயிர்காக்கத் தப்பிச் சென்றமை கூடத் தவறில்லை; ஆனால், நிலைமை கொஞ்சம் தணிந்த பின்னராவது, நாடு திரும்பியிருக்க வேண்டும். அதைச் செய்யாதது தவறே.

தனிநாட்டுக்கான மக்களாணை கோரியமையானது, ஒரு பெரும் அரசியல் முன்னகர்வு. அதைச் செய்தபோது, அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தமிழ்த் தலைமைகள் தயாராக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், தமிழ்த் தலைமைகளின் 1977 பொதுத் தேர்தலின் பின்னரான நடவடிக்கைகள், அவை தனிநாட்டுக்கான மக்களாணையை, அரசியல் தந்திரோபாய நடவடிக்கையாகவே கையாண்டிருந்தன, என்ற தோற்றப்பாட்டையே உருவாக்குகிறது.

ஏனெனில், அவை தொடர்ந்தும் அரசியல் ரீதியிலான, அதிகாரப் பகிர்வை நோக்கிய பாதையிலேயே சென்றமையை நாம் காணலாம்.

இதற்குச் சர்வதேச அழுத்தம், குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் முக்கிய காரணம். சர்வதேசம், குறிப்பாக வல்லரசுகளின் ஆதரவின்றி, பிரிவினை என்பது சாத்தியமில்லை. இது சர்வதேச அரசியலின் பாலபாடம்.

ஆகவே, இந்த எந்த அடிப்படைகளையும் தயார் செய்யாமல் அல்லது தயார் செய்வதற்கான எந்தத் திட்டமும் இல்லாமல், பகட்டாரவாரமாகத் தனிநாட்டுக்கான மக்களாணையைப் பெற்றமையானது, தவறானதொரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.

மக்களிடம் பகட்டாரவாரப் பேச்சுகளால், ஓர் அபிலாஷையை ஆழமாக விதைத்துவிட்டு, பின்னர் அதிலிருந்து உடனடியாகப் பின்வாங்குவது என்பது, அவ்வளவு சுலபமானது இல்லை. தமிழ் மக்களின் ஏறத்தாழ ‘ஏக’ பிரதிநிதிகளாகவே, இரண்டு தசாப்தத்துக்கும் மேலாக இருந்துவிட்டதால், தாம் எதையும் செய்யமுடியும் என்ற அதீத நம்பிக்கையில் இதைச் செய்திருக்கலாம்.

ஆனால், அந்த ‘ஏக’ பிரதிநிதிகள் என்ற நிலைக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் சவால் உருவாகும் என்று, 1977இல் தமிழ்த் தலைமைகள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

“உண்ணாவிரதமிருந்த காலம் முடிந்துவிட்டது; துப்பாக்கிகள் சுடத்தொடங்கிவிட்டன; போராட்டம், இளைஞர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது; நீங்கள் தயவு செய்து, இந்த இடத்திலிருந்து வௌியேறுங்கள்” என்பது சத்தியாக்கிரகிகளை சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் வேண்டுகோளாக இருந்தது.

தமிழ் இளைஞர்களால் இரத்தத் திலகமிடப்பட்டு, வாழ்த்துகளையே பெற்றுப் பழகிப்போன அமிர்தலிங்கத்துக்கு, அவர்களிடமிருந்து கேள்விக்கணைகளை எதிர்நோக்குவது, அதிர்ச்சிகரமான அனுபவமாகவே இருந்திருக்கும். எந்தவொரு தலைவனும் சந்திக்கக்கூடிய, மிகக் கொடூரமான அனுபவம் இதுவாகும். இவ்வளவு நடந்தாலும், தமிழ் இளைஞர்களின் முக்கியத்துவத்தை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மறுத்திருக்கவில்லை.

இந்தச் சத்தியாக்கிரகத்தில் உரையாற்றிய எம்.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள், தமிழர்களின் தலைமை, தமிழ் இளைஞர்களின் கைகளில்த்தான் இருக்கிறது என்பதை, வௌிப்படையாகவே கூறியிருந்தார்கள்.

முடிவுக்கு வந்தது சத்தியாக்கிரகம்

இந்தச் சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிட வேண்டும் என்பது, சத்தியாக்கிரகிகளைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் நோக்கமாக இருந்தது. அது நிறைவேற, அதிக நேரம் தேவைப்படவில்லை. அங்கிருந்த சத்தியாக்கிரகிகளைவிட, அவர்களைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நிலைமையின் தீவிரத்தை உணரத் தொடங்கிய சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றிய பலரும், கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வௌியேறத் தொடங்கினர்.

ஆனால், அமிர்தலிங்கமும் அங்கு கூடியிருந்த ஏனைய தமிழ்த் தலைமைகளும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். நேரம், நண்பகலை நெருங்கியபோது, அங்கு கூடியிருந்த சத்தியாக்கிரகிகளின் எண்ணிக்கை வெறும் 20 ஆகவே இருந்ததாகச் சிலர் பதிவு செய்கிறார்கள்.

இதன்போது, திடீரென்று அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த திலீபன் உள்ளிட்ட சில இளைஞர்கள், உணவுப் பொதிகளோடு நுழைந்ததாக ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.

உணவுப் பொதிகளோடு வந்தவர்கள், சத்தியாக்கிரகிகளின் முன்பாக உணவுப் பொதிகளை வைத்துவிட்டு, அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு, உணவருந்தத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கு, கட்டாயப்படுத்தி உணவூட்ட முயன்றதாகவும் பதிவு செய்கிறார்கள்.

எது எவ்வாறானாலும், இங்கு நோக்கம், தமிழ் மக்களின் இன்றைய தலைமைகள் யார் என்பதை, அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு உணர்த்துவதாகவே இருந்தது.

எதிர்பார்த்த நேரத்துக்கு முன்பாகவே, சத்தியாக்கிரகத்தை நிறைவு செய்துகொண்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், அங்கிருந்து வௌியேறியமை, சத்தியாக்கிரகத்தின் நிறைவை மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் அரசியலில் ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளின் செல்வாக்கின் நிறைவையும் கோடிட்டுக்காட்டியது.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகத்துக்கு ஏற்பட்ட நிலை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரை பெரு வெற்றியே. தமிழர் அரசியலில், தமது நிலையைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மெருகேற்றிக் கொண்டன.

இதே காலப்பகுதியில், தமிழீழ விடுதலைக் கழகம் (டெலோ) தமது தலைவர்களான தங்கதுரை மற்றும் குட்டிமணியின் படுகொலையில் முதலாவது ஆண்டு நினைவையொட்டி, அறிவித்திருந்த ஹர்த்தால், வடக்கு-கிழக்கின் முக்கிய நகரங்களில் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டிருந்ததும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கைப் பறை சாற்றுவதாக அமைந்தது.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட நிலை கண்டு, இன்னொரு தரப்பு பெரும் மகிழ்ச்சியில் இருந்தது. அதுதான், ஜே.ஆர் அரசாங்கம். இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்த, ஜே.ஆர் முனைந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோய்க்கு தடுப்பூசி!(மருத்துவம்)
Next post திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்!!(அவ்வப்போது கிளாமர்)