பிரசவத்துக்கு கெளம்பலாமா?!( மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 50 Second

சுகப்பிரசவம் இனி ஈஸி

கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது. முக்கியமாக, மருத்துவமனை பணி நேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

பேறுகால விடுமுறை எடுப்பதில் தொடங்கி, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் உள்ள தூரம், மருத்துவமனைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம், வாகன வசதி, எந்த நேரத்தில் சென்றால் சாலையில் வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ள குழந்தையை யார் கவனிப்பது போன்ற விஷயங்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி, முன்ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.

தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்துப் பழக்கிவிடுவது நல்லது.

கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

எப்படி கிளம்புவது?

இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து, முன்பக்கம் பிரித்து அணியக்கூடிய வகையில் தைக்கப்பட்ட பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம். நைட் கவுன் இவ்வாறு இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மருத்துவர் பரிசோதிப்பதற்கும் வசதியாக இருக்கும். அதுபோல் தாய்ப்பால் கொடுக்கத்தக்க உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் ஜட்டிகள், பேன்டீஸ்கள், சானிட்டரி நாப்கின்கள், சுத்தமான பழைய சேலைகள், டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், ஃப்ளாஸ்க், சில புத்தகங்கள், வார இதழ்கள், மொபைல் போன், மொபைல் சார்ஜர், மூக்குக் கண்ணாடி (ஒருவேளை கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், பிரசவத்தின்போது அதை எடுத்துவிடுவார்கள்), வசதியான செருப்புகள், கொசுவத்திகள் போன்றவற்றை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ளலாம்.

நிறைய பணம் எடுத்துச்செல்ல வேண்டாம். டெபிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.

குழந்தைக்குத் தேவையான பொருட்களை மற்றொரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தியாலான ஆடைகள், உடல் துடைக்கத் துணிகள், டயாபர்கள், பஞ்சு, குழந்தையைப் படுக்க வைக்க பருத்தி டவல்கள், ரப்பர் ஷீட்கள், தொட்டிலுக்குரிய கொசு வலை, பேபி சோப், பேபி பவுடர் போன்றவை முக்கியத்தேவைகள். குழந்தைக்கு பழைய சட்டைகளைப் போடுவதாக இருந்தால், அவற்றை கிருமிநாசினி சேர்த்து கொதி
நீரில் ஊறவைத்து, காயவைத்து, பின்னர் பயன்படுத்துவது நல்லது. கைக்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே இந்த யோசனை.

எப்போது கிளம்புவது?

சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து சேரச் சொல்லலாம். உடனடியாக பிரசவம் இருக்கும் என்று நினைத்தாலும், மருத்துவமனையிலிருந்து வீடு அதிக தொலைவில் உள்ளது என்றாலும், பிரசவத் தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனையில் சேரச் சொல்லலாம்.

‘மழை எப்போது பெய்யும்; மகப்பேறு எப்போது நிகழும் என்பது அந்த மகேசனுக்கே தெரியும்’ என்று கிராமங்களில் ஒரு வழக்கு சொல்வதுண்டு. பிரசவம் ஆவதற்கு இந்த நாள், இந்த கிழமை, இத்தனை மணிக்கு என்று யாராலும் குறிப்பாகச் சொல்ல முடியாது என்பதைத்தான் இது வலியுறுத்துகிறது. உண்மையும் இதுதான்.

மகப்பேறு மருத்துவர்கள் சொல்லும் பிரசவத் தேதிகூட கர்ப்பிணிக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாக வைத்துக் குறிக்கப்படும் ஓர் உத்தேசக் கணக்குதான். ஆனாலும் பிரசவம் குறித்து கர்ப்பிணிக்கு எச்சரிக்கை தருவதற்கு உடலில் இயற்கையாகவே, சில அலார ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவற்றில் பிரசவ வலியும் ஷோ(Show) எனப்படும் நிகழ்வும் பனிக்குடம் உடைவதும் முக்கியமானவை.

பிரசவ வலியில் பொய் வலி, உண்மையான வலி என இரண்டு வகைஉண்டு. அவற்றைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். கருப்பை சுருங்கி விரிவதால்தான் பிரசவ வலி ஏற்படுகிறது. இடுப்பில் மேலேயிருந்து கீழாக மின்னல் ஒன்று தாக்குவது போல் விட்டுவிட்டு இந்த வலி ஆரம்பிக்கும். 10 நிமிடம், 20 நிமிடம் என்ற இடைவெளியில்தான் இந்த வலி ஏற்படும். அப்படி ஏற்படும் கால இடைவெளியைக் கொண்டு உண்மையான பிரசவ வலியா, பொய் வலியா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஒருமுறை வலி தொடங்கி, அடுத்தமுறை வலி ஆரம்பிக்கும் இடைவெளி ஒரே சீராக இருந்து, வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றால், அது உண்மையான பிரசவ வலி. அடுத்த பிரசவ அலாரம் இது: சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பிலிருந்து கசியும். இதுதான் ‘ஷோ’! கருப்பையின் வாய்ப் பகுதியான செர்விக்ஸ் திறக்க ஆரம்பித்துவிட்டது என்பதைக் குறிக்கும் அறிகுறி இது.

மூன்றாவது அலாரம் பனிக்குடம் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறுவது. கருப்பையிலிருந்து குழந்தை இறங்கத் தொடங்கியதும், குழந்தையைச் சுற்றியுள்ள பலூன் போன்ற பனிக்குடமும் பிதுங்கலாக இறங்குகிறது.

அப்போது பிதுங்கிய ஒரு பகுதி உடைந்துபோகும். இதனால் இளநீர் போன்று பனிக்குட நீர் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும். இந்த உண்மை தெரியாத சில கர்ப்பிணிகள், தங்களுக்கு சிறுநீர்தான் கட்டுப்படாமல் வெளியேறுகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வதும் உண்டு.

மேற்சொன்ன 3 அலாரங்களில் எது ஏற்பட்டாலும் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். முக்கியமாக, வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பனிக்குட நீர் வெளியேறிவிட்டது என்றால், எந்த தாமதமும் இல்லாமல், உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். பனிக்குட நீர் இளநீர் பதத்தில் இல்லாமல், மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், உள்ளே குழந்தை மலம் கழித்து இருக்கிறது என்று பொருள். இப்போது இன்னும் சீக்கிரமாகக் கிளம்பிவிட வேண்டும்.

சாப்பிட்டு விட்டுச் செல்லலாமா?

‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.

கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3டியில் எடுத்து ரசிகர்களைக் கிளுகிளுக்கச் செய்ய உள்ள சவிதா பார்பி! (சினிமா செய்தி)
Next post இந்த அசிங்கம் உனக்கு தேவையா!!(வீடியோ)