By 2 May 2018 0 Comments

ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)

ஹேப்பி ப்ரக்னன்ஸி மித்ஸ் தொடரில் மூன்றாவது ட்ரைமஸ்டர் எனும் தாய்மையின் முக்கிய தருணம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பருவத்தில் அன்னையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்சனைகள் என்னென்ன, அதற்கான எளிய தீர்வுகள் என்னென்ன என்று தொடர்ந்து பார்ப்போம்.

அடிக்கடி சிறுநீர் கழிதல்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் உங்கள் செல்ல பாப்பாவின் தலை அம்மாவின் சிறுநீர் பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இரவுகளில்கூட தூக்கத்தில் இருந்து அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க நேரிடும். இதனால், உறக்கம் கெட்டு உடல் சோர்வும் ஏற்படும். உறக்கம் பாதிக்கப்படுவதாக இருந்தாலோ, அசதியாக இருந்தாலோ பகலில் ஒரு மணி நேரம் உறங்குங்கள்.

இரவு படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே பால், தண்ணீர் போன்றவற்றை அருந்துவதால் நல்லிரவில் சிறுநீருக்காக எழுவதை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். அதேபோல, இருமல், தும்மல், சிரிப்பு வரும்போது உடற்பயிற்சி அல்லது சற்று சிரமமான வேலைகள் செய்யும்போதும் சிலருக்கு தன்னையும் அறியாமல் சிறுநீர் கசிந்துவிடும்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மெலிதாகத் தோன்றினாலும் உடனே கழிப்பறைக்குச் சென்று அந்த உணர்வு நீங்கும் வரை முழுமையாகக் கழிப்பது நல்லது. சிறுநீர் கழிக்கும் போது வலியோ, எரிச்சல் உணர்வோ இருந்தால் சிறுநீர்க் குழாய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக மருத்துவரை
அணுகுவது நல்லது.

நெஞ்சு எரிச்சல்

கர்ப்ப காலத்தில் அன்னையின் உடலில் புரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால், அது உடலில் உள்ள சில தசைகளை தளர்வுறச் செய்கிறது. எசோபாகஸ் என்று ஓர் உணவுக்குழாய் உள்ளது. இதுதான் உணவையும் வயிற்றில் உள்ள அமிலங்களையும் அடிவயிற்றிலேயே தங்கியிருக்கச் செய்து செரிமானம் ஆன உணவு பெருங்குடலுக்குள் தொடர்ந்து பயணிக்க உதவுகிறது.

புரோஜெஸ்டிரான் சுரப்பு இந்த உணவுக் குழாயையும் பாதிப்பதால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. நெஞ்சு எரிச்சலைக் கட்டுப்படுத்த தினசரி உணவை ஐந்து அல்லது ஆறு வேளையாகப் பிரித்து உண்ணலாம். மேலும், செரிமானத்துக்குக் கடினமான எண்ணெய் உணவுகள், பலகாரங்கள், அமிலத்தன்மை மிகுந்த உணவுகள், சிட்ரிக் நிறைந்த பழங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

மலச்சிக்கல்

மேலே சொன்ன எசோபாகஸ் உணவுக் குழாய் பாதிப்பால்தான் மலச்சிக்கலும் ஏற்படுகிறது. கர்ப்பகால மலச்சிக்கல் உள்ளவர்கள் உண்ணும் உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.

சிட்ரஸ் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா போன்ற பழங்களை அளவாகச் சாப்பிடலாம். நெஞ்சு எரிச்சலும் சேர்ந்து இருந்தால் சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்கலாம். மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால் சுயமருத்துவம் செய்யாமல் மருத்துவரை நாடுங்கள். அவசியம் எனில் அவர் மலமிளக்கிகளை பரிந்துரைப்பார்.

மூலம்

வயிற்றில் உள்ள குழந்தையின் உடலில் போதுமான சத்தைச் சேர்ப்பதற்காக தாயின் உடலில் ரத்த ஓட்டம் துரிதமாக இருக்கும். இப்படி ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால் அன்னையின் உடலில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடையும். மேலும், வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அழுத்தத்தால் வயிற்றின் அடிப்பாகம் அழுத்தப்படுவதாலும் ஆசனவாயில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன.

பொதுவாக, நமது ஆசனவாயில் உள்ள ரத்த நாளங்கள் மென்மையானவை. இந்தக் காரணங்களால் இவை பாதிக்கப்பட்டு மூலப் பிரச்சனையை உருவாக்குகின்றன. மலச்சிக்கல் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விடுவதும் மூலத்தை உருவாக்கும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் உண்பது, போதுமான ஓய்வு, முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றால் இந்த மூலப் பிரச்சனையை ஓரளவுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். மூலப் பிரச்சனை இருந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.

மூச்சிரைப்பு

மூன்றாம் ட்ரைமஸ்டர் என்பது குழந்தை நன்கு வளர்ந்திருக்கும் பருவம். வயிற்றில் உள்ள குழந்தையால் கர்ப்பப்பை விரிவடைந்து, நுரையீரல் பைகள் விரிவதற்கான இடத்தை எடுத்துக்கொள்வதால் சிலருக்கு மூச்சிரைப்பு, மெலிதான மூச்சுத் திணறல் பிரச்சனை இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் மூச்சிரைப்பை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம்.

உறங்கும்போது மூக்கு சற்றே மேலே பார்த்தவாறு இருக்கும்படி தோள்பட்டைக்கு அடியில் மெலிதான தலையணை வைத்துத் தூங்குவதும் பலன் தரும். முடிந்த வரை காற்றோட்டமான இடத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். சீலிங் ஃபேனைவிட டேபிள் ஃபேன் பயன்படுத்துவதும் நல்ல பலனைத் தரும்.

வெரிகோஸ் வெயின்ஸ்
குழந்தையின் நலத்துக்காக தாயின் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடலில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால், சிலருக்கு காலில் உள்ள ரத்த நாளங்கள் பெரிதாகி வீக்கமும் வலியும் ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனையை வெரிகோஸ் வெயின்ஸ் என்பார்கள். இரண்டாம் ட்ரைமஸ்டரின் போதே சிலருக்கு இந்தப் பிரச்சனை இருந்தாலும் மூன்றாவது ட்ரைமஸ்டரில் தீவிரமாகிவிடும்.

ஆனால், அச்சம் வேண்டாம். மகப்பேறுக்குப் பிறகு இந்தப் பிரச்சனை நீங்கிவிடும். கர்ப்ப கால வெரிகோஸ் வெயினை முற்றிலுமாக குணமாக்க முடியாது. ஆனால், ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்காமல் அவ்வப்போது எழுந்து நடமாடுவது, காலுக்கு இறுக்கமான ஸ்பெஷல் ஸ்டாக்கிங்ஸ் அணிவது, அமரும்போது காலை இடுப்பு உயரத்துக்கு தூக்கிய நிலையில் நீட்டி வைத்துக்கொள்வது போன்ற வற்றால் ஓரளவுக் கட்டுப்படுத்தலாம்.

வீக்கம்
கை கால் மூட்டுகள், இணைப்புகள் ஆகிய இடங்களிலும் முகத்தில் மெலிதான வீக்கம் சிலருக்குத் தென்படும். உடலில் திரவங்கள் அதிமாகத் தங்குவதால் இது ஏற்படுகிறது. அமரும்போது கால்களை உயரமான பொருளின் மேல் வைத்து அமர்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் இதை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம்.

கை கால் மூட்டுகள், முகத்தில் திடீரென வீக்கம் தோன்றினாலோ அதிகரித்துக்கொண்டேயிருந்தாலோ உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். ஏனெனில், இது ப்ரீஎக்லாம்ப்சியா (Preeclampsia) எனும் தீவிரமான பிரச்சனையாக இருக்கக்கூடும்.

எடை அதிகரித்தல்
மூன்றாவது ட்ரைமஸ்டரில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக அரை கிலோ வரை அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். உங்களின் எடை கூடக்கூட அது வயிற்றில் உள்ள சிசுவுக்கும் பிளெசண்டாவுக்கும் பனிக்குடத்துக்கும் செல்லும் ரத்தத்தைப் பெருக்கும், உடல் திரவங்களை மேம்படுத்தும், மார்பகத் திசுக்களை அதிகரிக்கும். அடுத்த இதழ் முதல் மூன்றாவது ட்ரைமஸ்டரின் ஒவ்வொரு வாரமும் குழந்தையின் உடல் நிலை எப்படி இருக்கும், தாய் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam