விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?(கட்டுரை)

Read Time:13 Minute, 47 Second

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது.

இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய அன்றே, மாநாட்டுக்கான குழு தொடர்பிலான அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது.

அந்தக் குழுவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், தமிழரசுக் கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் இணைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற, பேரவையின் மத்தியகுழுக் கூட்டத்தின் போது, வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ. ஐங்கரநேசன், அருந்தவபாலன், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் விக்னேஸ்வரனால், ஏனைய மத்தியகுழு உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்படாமலேயே, மத்தியகுழுவில் இணைக்கப்பட்டார்கள்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவானது, விக்னேஸ்வரனையும் அவரைச் சுற்றியுள்ளவர்களையும் சில துணிவான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், கூட்டமைப்புக்கு எதிராக, புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு விக்னேஸ்வரன் இணங்க வேண்டும் என்று பேரவையும், முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட கட்சிகளும், சில சிவில் சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

அதற்காக ஊடகங்களில் பல பத்திகளும் எழுதப்பட்டன. ஆனாலும், புதிய கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்புகளை விக்னேஸ்வரன் அப்போது நிராகரித்திருந்தார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரையில், புதிய கூட்டணியொன்றுக்கு தலைமையேற்பதற்கே பயந்து விலகியிருந்த விக்னேஸ்வரன், தற்போது புதிய கட்சியை ஆரம்பிக்கத் துணிந்திருக்கின்றார்.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், தமிழ்த் தேசிய அரசியலில் நிலைத்திருப்பதற்கு, அவருக்குப் பிடியொன்று தேவைப்படுகின்றது. அது, பேரவையின் மூலம் பெரிய அளவில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஏனெனில், “பேரவை என்றைக்கும் மக்கள் இயக்கமாகவே இருக்கும்; தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக உருமாறாது. பேரவையின் இணைத்தலைவர் பொறுப்பை ஏற்கும் போது, மத்தியகுழு உறுப்பினர்களிடம் அந்த வாக்குறுதியைப் பெற்றேன்” என்று விக்னேஸ்வரன் பல தடவைகள் கூறியிருக்கின்றார்.

அப்படியான நிலையில், பேரவை அடையாளத்தோடு, தேர்தல் கூட்டணி அமைப்பது அவருக்குப் பாதகமாக அமையும்.

அதனால், பேரவைக்குள் இருக்கின்ற முக்கியஸ்தர்களையும் தனக்கு இணக்கமான தரப்புகளையும் இணைத்துக்கொண்டு, புதிய கட்சிக்கான அறிவித்தலை விடுக்க முடியும் என்று நம்புகின்றார். அதன்மூலம், பேரவை என்பது மக்கள் இயக்கமே. அது, கட்சியல்ல என்கிற நிலையைப் பேண முடியும்.

பேரவையின் இளைஞர் மாநாட்டுக்கான அறிவித்தல் என்பது, விக்னேஸ்வரனின் புதிய கட்சிக்கான ஆழம் பார்க்கும் படலமே. புதிய கட்சியொன்றை முன்னெடுப்பதென்றால், இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியமானது.

கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு களச்செயற்பாட்டாளர்கள் அவசியம். ஆனால், விக்னேஸ்வரனைச் சுற்றி, இதுவரையில் அவ்வாறான தரப்பொன்று உருவாகியிருக்கவில்லை.

அப்படியான கட்டத்தில்தான், ஐங்கரநேசன், அருந்தவபாலன் உள்ளிட்டவர்களைத் தன்னோடு இணைப்பதில் விக்னேஸ்வரன் ஆர்வம் காட்டினார். அவர்கள் மூலம் இளைஞர்கள் படையொன்றைத் திரட்ட முடியும் என்றும் நம்புகின்றார்.

பேரவையால் நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளின்போது, களச் செயற்பாட்டாளர்களாக அதிகளவில் செயற்பட்டது முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளின் தொண்டர்களே ஆவார். அவர்களோடு தன்னார்வத் தொண்டர்கள் சிறியளவில் கலந்திருந்தனர்.

பேரவையிலுள்ள புலமையாளர்களினாலோ, சிவில் சமூக இயக்கங்களினாலோ களச்செயற்பாட்டாளர்கள் என்று யாரையும் முன்னிறுத்த முடியவில்லை. அதனால், பேரவையிலுள்ள புலமையாளர்கள், சிவில் சமூக இயக்கங்களை மாத்திரம் நம்பியும் களத்தில் இறங்க முடியாது.

இன்னொரு பக்கம், கட்சியொன்றை ஆரம்பிக்காமல், புதிய கூட்டணியொன்றுக்கு விக்னேஸ்வரன் தலைமையேற்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டை அவரைச் சுற்றியுள்ளவர்கள் தற்போது எடுத்திருக்கின்றார்கள்.

அதற்கான கட்டங்களையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளே காட்டியிருக்கின்றன. 2015 பொதுத் தேர்தலில் வடக்கு- கிழக்கு பூராவும் சுமார் 18,000 வாக்குகளை மாத்திரம் பெற்றிருந்த முன்னணி, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுமார் 90,000 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.

முன்னணியின் வெற்றிக்கு கூட்டமைப்பு மீதான மக்களின் அதிருப்தி உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும், யாழ். நகரச் சூழல், நல்லூர் வட்டங்களில் முன்னணியின் களச் செயற்பாடுகள் முக்கியமானவை.

ஒப்பீட்டளவின் முன்னணியின் களச்செயற்பாட்டாளர்கள் 35 வயதுக்கும் குறைந்தவர்கள். முன்னணியின் இரண்டாம் கட்டத் தலைவர்களே அந்த வயதினர்தான். அப்படியான நிலையில், அவர்கள் தங்களின் களச்செயற்பாட்டை, இன்னொரு தரப்பு அறுவடை செய்வதை விரும்பமாட்டார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அண்மைய ஊடக சந்திப்பின் போதும், அதுவே முதன்மையாக வலியுறுத்தப்பட்டது. முன்னணி தற்போது தனித்துப் பெற்றிருக்கின்ற வாக்குகள் விக்னேஸ்வரனுக்கும், அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் உண்மையிலேயே அச்சுறுத்தலானதுதான்.

ஏனெனில், புதிய கட்சியை ஆரம்பிக்காது, புதிய கூட்டணியை அமைத்தால், அதற்குள் முன்னணியின் பேரம் பேசும் பலம் அதிகரிக்கும்.

அப்படியான நிலையில்தான், விக்னேஸ்வரனைத் துருப்புச் சீட்டாக புலமையாளர்களும் பத்தியாளர்களும் கையாள நினைக்கின்றனர். அதாவது, இளைஞர் மாநாட்டைக் கூட்டி, அதில் இளைஞர்களை குறிப்பிட்டளவில் பங்கெடுக்கச் செய்வதன் மூலம், விக்னேஸ்வரனைத் தனிக்கட்சி ஆரம்பிக்க வைப்பது.

அந்தக் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வாங்குவது. அதன்பின்னர், கூட்டணியை அமைப்பதன் மூலம், செல்வாக்குச் செலுத்துவது.

முன்னணியைப் பொறுத்தளவில், கூட்டமைப்புக்கு மாற்றாக அல்ல, தமிழரசுக் கட்சி தற்போது செலுத்திக் கொண்டிருக்கும் ஆளுமைக்கு மாற்றாக, தன்னை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றது.

ஏனெனில், தமிழரசுக் கட்சி தவிர்ந்து கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சிகளின் தனிப்பட்ட வாக்கு வங்கியென்பது உண்மையிலேயே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி எதிர் முன்னணி என்கிற கட்டத்தை வைத்துக் கொள்வதற்கே முன்னணியின் இளைஞர்கள் விரும்புகிறார்கள். அதன்போக்கில் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக விக்னேஸ்வரனை முன்னிறுத்திய தேர்தல் கூட்டணியில் பயணிக்கவும் இணங்குகிறார்கள்.

ஆனால், அந்தக் கூட்டணியே தம்மை பலவீனப்படுத்துமாக இருந்தால், அதில் பங்கெடுப்பதிலிருந்து விலகியிருப்பதிலும் கவனம் செலுத்துவார்கள்.

தமிழரசுக் கட்சியை வீழ்த்துவதற்கான கட்டத்தில் மாத்திரம் மற்றவர்களுடன் இணங்கிவிட்டு, தனியாவர்த்தனம் செய்வதையே கஜேந்திரகுமாரும், முன்னணியும் விரும்புகின்றது.

விக்னேஸ்வரனைச் சுற்றியுள்ள புலமையாளர்கள், பத்தியாளர்கள் மீது முன்னணியின் இளைஞர்களுக்கு குறிப்பிட்டளவில் அதிருப்தியுண்டு.

அது தொடர்பில் கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைமுகமாக அதிருப்தி வெளியிட்டு வந்த அவர்கள், அண்மைய நாட்களில் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலில் இயக்கும் தரப்புகளில் பெரும்பாலானவை இந்தியாவோடு இணக்கமாக இருக்கவே விரும்புகின்றன. அதிலும், விக்னேஸ்வரன் போன்றவர்கள் இந்தியாவோடு மிகமிக நெருக்கமாக இருக்க விரும்புகிறவர்கள்.

அப்படியான நிலையில், பூகோள அரசியலின் போக்கில் சீனாவோடு நெருக்கமான உறவைப் பேண வேண்டும் என்று வலியுறுத்திவரும் முன்னணியோடு, விக்னேஸ்வரன் இணைவதையோ, கூட்டணி அமைப்பதையோ இந்தியா விரும்புமா?

தேர்தல் வெற்றிக்காக மாத்திரம் கூட்டணி அமைப்பதை அனுமதித்தாலும், முன்னணியின் முக்கியத்துவத்தை அடுத்த கட்டங்களில் எழாதவாறு பார்த்துக் கொள்வதிலும் இந்தியா கவனம் செலுத்தலாம்.

அதன்போக்கிலும், விக்னேஸ்வரனின் புதிய கட்சிக்கான அறிவித்தலையும், அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் பார்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் தாண்டி, விக்னேஸ்வரன் மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்கான கட்டங்கள் என்று கடந்த ஐந்து வருடங்களில் பெரிதாக எதுவும் நிகழவில்லை. அவர் நிகழ்த்தவுமில்லை.

அப்படியான கட்டத்தில், அவரை குத்துச் சண்டை வீரராக முன்னிறுத்தி, கோதாவில் இறங்க நினைப்பதால் மாத்திரம், சாத்தியமான வழிகள் திறந்துவிடாது. அதற்காக நிறையவே உழைக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)
Next post முதலிரவு… சில யோசனைகள்…!!(அவ்வப்போது கிளாமர்)