By 16 May 2018 0 Comments

ஆஹா… அரசு மருத்துவமனை!(மருத்துவம்)

தவறை விமர்சிப்பதைப் போல நல்லவற்றைப் பாராட்டுகிற கடமையும் நம்முடையதுதான்.அரசு மருத்துவமனைகள் என்றாலே சுகாதாரக் குறைவானவை, அலட்சியமான சிகிச்சை, செவிலியர்கள் எரிந்துவிழுவார்கள், மருந்துகள் பற்றாக்குறை என்று எப்போதும் புகார் பட்டியலை வாசித்தே பழகிவிட்டோம். ஆனால், நிலைமை எல்லா இடங்களிலும் அப்படி இல்லை. எல்லா காலங்களிலும் அப்படி இல்லை. பல அரசு மருத்துவமனைகள் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளோடு, அற்புதமாக சிகிச்சை அளித்து சேவை அளிப்பதாகவும் இருக்கின்றன.

அவற்றில் ஒன்று சென்னை தாம்பரத்தில் இருக்கும் தேசிய சித்த மருத்துவமனை (National institute of siddha). ஒரு காலைவேளையில் மருத்துவமனையைச் சுற்றிவந்தபோது, ஒரு அரசு மருத்துவமனை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதும், மற்ற அரசு மருத்துவமனைகளும் இதுபோல் மாறினால் நன்றாக இருக்க வேண்டுமே என்றும் தோன்றியது. மருத்துவமனையைச் சுற்றி நிறைய மூலிகைச் செடிகள், அடர்த்தியான மரங்கள் இருப்பதால் ஏதோ பூங்காவுக்குள் நுழைந்த அனுபவத்தைப் போலவே இதமான நறுமணம் வீசுகிறது.

பயமுறுத்தும் மருத்துவமனை வாசனைகளும், பதற்றங்களும் இல்லை. மருத்துவமனையின் இயக்குனரும் பேராசிரியருமான பானுமதியிடம் மருத்துவமனை செயல்படும் விதம் பற்றிக் கேட்டோம்…“2005-ம் ஆண்டு 14.78 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட மருத்துவமனை இது. அயோத்திதாசர் பண்டிதர் என்ற பெயரில் இயங்கும் இந்த மருத்துவமனை, ஒரு தேசிய சித்த மருத்துவமனையாகும்.

இங்கு சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சித்த மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்கும் வகையில் மருத்துவக் கழகமும் உள்ளது. இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. இந்த பட்ட மேற்படிப்பு கல்லூரியில் 46 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

மக்களின் பயன்பாட்டுக்கு வந்த ஆரம்ப காலத்தில் இந்த மருத்துவமனையில் வெறும் 700 புற நோயாளிகள்தான் பயனடைந்தனர். அவர்களுக்கு 12 மருத்துவர்கள் கிசிச்சை அளித்து வந்தனர். நாளடைவில் மருத்துவமனையின் சேவையை கேள்விப்பட்டு, இன்றைக்கு தினமும் 2 ஆயிரத்து 700 புறநோயாளிகள் வந்துகொண்டு இருக்கின்றனர். தரமான சிகிச்சை, அனுசரிப்பு, பக்க விளைவுகள் இல்லாத மருந்து மாத்திரைகளே பொதுமக்கள் அதிக அளவில் இங்கு வருவதற்கு முக்கிய காரணமாகக் கேள்விப் படுகிறோம்.

பெருகிவரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தற்போது 40 மருத்துவர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். வெளிநாட்டு நோயாளிகளுக்காகவும், முதுநிலை சித்த மருத்துவ படிப்புக்காகவும் இந்த தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தொடங்கப்பட்டது. அதனால், இந்த அளவுக்கு நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தற்போது சிகிச்சைக்கு வருகின்றனர்.

உள்நோயாளிகளாக பெரியவர்கள், குழந்தைகள் என சுமார் 200 பேர் வரை இங்கு தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நோயின் தன்மையை பொறுத்து அதிகபட்சம் 40 நாட்களுக்கு மேலாக தங்க வைத்து சிகிச்சையளிக்கிறோம். இந்த மருத்துவமனையின் சுற்றுப்புறம், கழிப்பறை, கேன்டீன் என எல்லா இடங்களையும் மிக சுத்தமாக பராமரிக்கிறோம். மருத்துவமனைக்கு வருபவர்கள் ‘தனியார் மருத்துவமனைக்கு ஈடாக இருக்கிறது’ என பாராட்டவும் செய்கிறார்கள்.’’என்னென்ன சிகிச்சைகள் அளிக்கிறீர்கள்?

‘‘தொற்றா நோய்கள் மூலம்தான் அதிக மரணங்கள் நேரிடுகிறது என்கிற உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை கருத்தில்கொண்டு அவ்வாறான நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்டுகிறது. அனைத்து வித காய்ச்சல்கள், தைராய்டு, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், முதுகுத் தண்டுவட நோய்கள், மூட்டு நோய்கள், கல்லீரல், மண்ணீரல், வயிறு சம்பந்தமான நோய்கள், மூலம், வாதநோய்கள், நரம்பு சம்பந்தமான நோய்கள், தோல் சம்பந்தமான அனைத்துவித நோய்கள் மற்றும் எச்.ஐ.வியை கட்டுக்குள் வைப்பது, மதுவுக்கு அடிமையாகும் நோயாளிகளுக்கான சிகிச்சை போன்றவை அளிக்கப்படுகிறது.

எச்.ஐ.வி., சர்க்கரை நோய், புற்றுநோய் மேலும் தீவிரமடையாமல் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான சிகிச்சையும் அளிக்கிறோம். எச்.ஐ.வி நோயாளிகள் சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற்றால் நோயை கட்டுக்குள் வைத்துக் கொண்டு நீண்ட நாள் வாழலாம். யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவைகளையும் நோயாளிகளுக்கு கற்றுக்கொடுத்து செய்யச் சொல்கிறோம்.

மருந்துகள், தொக்கனம், வர்மம், தெரபி, லீஸ் தெரபி, யோகா போன்ற முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு சிகிச்சையாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்க ள், முதியவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் முதியவர்களுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கிறோம். குழந்தைகளைப் பொறுத்தமட்டில், சீரான உடல்வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, கை கால் முடங்குதல் போன்ற பிரச்னைகளுக்காக இங்கு வருகிறார்கள் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிரசவம் பார்ப்பதில்லை என்றாலும் முதல் மாதம் தொடங்கி பிரசவம் வரையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு, கர்ப்பகால உணவுக் கட்டுப்பாடு, ரத்தசோகை நோய் சிகிச்சை போன்றவை அளித்து அவர்களை சுகப்பிரசவத்துக்கு தயார்படுத்தும் சிகிச்சையும் அளிக்கிறோம். பிரசவத்துக்குப் பின் என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும், என்னென்ன பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றும் ஆலோசனைகளும் கொடுக்கிறோம். மேலும், குழந்தையின்மை பிரச்சனை, ஆண்மைக் குறைவு போன்றவைகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது.

முதியவர்களை பொறுத்த வரை, அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அதை மனதில் கொண்டு அவர்களை உளவியல் முறையில் சிகிச்சை அளிக்கிறோம். அதாவது அவர்களுக்கான சிகிச்சை நேரம் மதியம் 2 மணிதான். ஆனால், அவர்களை காலையிலேயே வரவழைத்து மற்ற முதியவர்களோடு அவர்களை கலந்து பேசவைத்து யோகா மற்றும் அரவணைப்பின் மூலம் அவர்களுடைய நோயின் தாக்கத்தை குறைக்கும் வகையில் சிகிச்சை அளிக்கிறோம்.

உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பித்தம், வாதம், கபத்திற்கு ஏற்றவாறும், அவர்களின் நோய் தாக்கத்தின் படியும் இலவசமாக மூன்று வேளையும் வழங்கப்படுகிறது.’’பரிசோதனை மையங்கள் பற்றி…‘‘ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி. எக்ஸ்ரே, ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் இங்கு இலவசமாக செய்யப்படுகிறது.’’பொதுமக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது…

‘‘இங்கு சிகிச்சை பெற்றுச் செல்பவர்கள் இந்த மருத்துவமனையின் சிறப்புகளைப் பற்றி வெளியில் சொல்லி அவர்களையும் வந்து பயனடையச் செய்ய வேண்டும். சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல பெருகிவரும் மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், கூடுதல் மருத்துவ வசதிக்கும் மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை சொல்லியிருக்கிறோம்.

மேலும், புதிதாக உள்நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் தங்குவதற்கு வசதியாக அதிகமான இருக்கைகள் கொண்ட கட்டிடமும் கட்டி வருகிறோம். குறிப்பாக அரசாங்கத்துக்குச் சொல்லி கொள்வது என்னவென்றால், இதுபோல மருத்துவனை மாவட்டத்துக்கு ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும். காரணம், பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலிருந்தும், மற்ற மாவட்டங்களிலிருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். இதுபோல மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனை இருந்தால் நன்றாக இருக்கும்.

மக்களிடத்தில் பக்கவிளைவில்லாத சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை அதிகரித்து வரும் இந்த வேளையில், நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துத்தான் வருகிறது. அதற்கேற்ப அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்கிறார்.எளிய மக்களின் நம்பிக்கையாக உள்ள அரசு மருத்துவமனையின் தரம், எல்லா இடங்களிலும் இதுபோல் மேம்பட்டால் இன்னும் மகிழ்ச்சிதான்!

எல்லா மாவட்டத்துலயும் ஆரம்பிக்கணும்!

“நான் காஞ்சிபுரத்துல இருந்து வர்றேன். காலையில 7 மணிக்கு வீட்டில இருந்து கிளம்புனேன். டாக்டரப் பார்த்துட்டு, மருந்து வாங்கிட்டு வீட்டுக்குப் போக சாயங்காலம் 7 மணியாகிடும். ஆனாலும், நான் இங்குதான் வர்றேன்.

ஏன்னா, இங்க நல்லா கவனிக்கிறாங்க. இவங்க கொடுக்கற மருந்தும் நல்லா கேக்குது. முக்கியமா ஆஸ்பத்திரி போறதுன்னாவே பயமா இருக்கும். இங்க வந்தா அதுமாதிரி பயம் இருக்கறதுல்ல. இதுபோல மருத்துவமனை எங்க மாவட்டத்திலயும் இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும்” என்கிறார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருந்த புறநோயாளியான சாந்தி.Post a Comment

Protected by WP Anti Spam